39 வருடங்களுக்குப் பின்னும் மனதை நிறைக்கும் ‘மண் வாசனை’!

39 வருடங்களுக்குப் பின்னும் மனதை நிறைக்கும் ‘மண் வாசனை’!

கிராமத்துப் படங்கள், பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்திலேயே வந்திருக்கின்றன. ஸ்ரீதரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் கூட கிராமத்துக் கதைகளை படங்களாக எடுத்திருக்கிறார்கள். எழுபதுகளில், ‘அன்னக்கிளி’ மாதிரியான படங்கள் கூட, கிராமியச் சூழலில் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும் ‘16 வயதினிலே’ படம், அந்தப் படத்தின் கதைச் சூழல், பேசுகிற வட்டார மொழியெல்லாம் இணைந்து கிராமத்துப்படங்களுக்கு தனித்ததொரு அடையாளத்தைக் கொடுத்தது. படத்தின் இயக்குநர் பாரதிராஜாவை, ‘மண்வாசனையுடன் கிராமத்தை அச்சுஅசலாகக் காட்டுகிறார்’ என்று ரசிகர்கள் புகழ்ந்தார்கள். அப்படி மண்வாசனை மாறாமல், நம்மையெல்லாம் மதுரைப்பக்கத்துக்கு அவரே டிக்கெட் போட்டு கூட்டிப்போயிருப்பார், ‘மண்வாசனை’ படத்தின் மூலமாக!

’இந்த மண்ணில் என்னை விதையாக ஊன்றிவைத்து, இந்த மண்ணின் வாசனையை நுகரவைத்த, என் அப்பனையும் ஆத்தாளையும் இந்த மண்ணையும் வணங்கி, இந்த மண்ணிலே நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை, கற்பனைப் பெயர்களுடன் கலந்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.அன்புடன்... பாரதிராஜா’ என்று அவரின் கரகர குரலுடன்தான் படமே ஆரம்பிக்கும்.

கதைப்படி, மதுரைக்குப் பக்கமிருக்கிற அடுத்தடுத்த கிராமங்களுக்குள், ஆண்டாண்டு காலமாக முட்டிக்கொண்டே இருக்கிறது பகை. இந்த கிராமத்தில் விஜயன். அந்தக் கிராமத்தில் வினுச்சக்கரவர்த்தி. பைசாவுக்குப் பிரயோசனமில்லாத விஷயங்களுக்கெல்லாம் சண்டை, எகிறல், சவடால் என்று போய்க்கொண்டே இருக்கும்.

இது ஒருபக்கமிருக்க, விஜயனுக்கும் அவரின் மாமியார் ஒச்சாயிக்கிழவி காந்திமதிக்கும் ஆரம்ப நாளிலிருந்தே பேச்சுவார்த்தை இல்லை. விஜயன் மகள் முத்துப்பேச்சி ரேவதி. ரேவதியின் முறைமாமன் வீரண்ணன் பாண்டியன். படிப்பு வாசனை இல்லாத, முரட்டுத்தனம் கொண்ட பாண்டியனும் ரேவதியும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டாலும் ரேவதிக்குள் முறைமாமன் மீது காதல். ‘எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமே’ என்கிற பிரார்த்தனை.

ஒருகட்டத்தில், இருவருக்குள்ளேயும் மலர்ந்து மணக்கிறது காதல். அதேசமயம், இரண்டு கிராமங்களும் கலந்துகொள்ளும் போட்டியில், விஜயனின் காளையை அடக்கினால், எதிர் கிராமத்துக்கு தன் பெண் ரேவதியைக் கொடுப்பதாக சபதம். எதிர் கிராமத்தார் காளையை அடக்கிவிட, ஊரே திரண்டு வந்து பெண் கேட்கிறது. மானம் போய்விட்ட துக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறார் விஜயன். பெண் கேட்கும் விவகாரம் பெரிதாக, அங்கே நிகழும் சண்டையில் சிலரை பாண்டியன் கொன்றுவிட்டு, ஊரை விட்டு ஓட... ஓடிப்போன மாமன் வருவான்; மணமாலை தருவான் என்று ஒச்சாயிக்கிழவியுடன் சேர்ந்து காத்திருக்கிறார் ரேவதி.

இதனிடையே ஊர்ப்பசங்களுக்குப் பாடம் சொல்லித்தர வருகிறார் வாத்தியார் நிழல்கள் ரவி. ரேவதி மீது அவருக்குள் காதல் கவிதையென மலர்கிறது. ஆனால் பாண்டியன் - ரேவதி காதலை அறிந்தவர், அப்படியே காதலையையும் கவிதையையும் புதைத்துவிட்டு, அவர்களின் நலனில் அக்கறை கொள்கிறார். பாண்டியனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில், ஊரிலிருந்து பாண்டியன் கடிதம் எழுதுவது போல், நிழல்கள் ரவியே கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். அதை ரேவதிக்கும் படித்துக் காட்டுகிறார். அப்படி அடிக்கடி கடிதங்கள். ஒருநாள், இரண்டு கடிதங்கள் வந்திருக்க, இரண்டாவது கடிதம்... பாண்டியனே எழுதிய கடிதம். அவரின் வருகைக்காக, காத்திருக்கும் ரேவதி, வந்ததும் நொந்து போகிறார். உடைந்து போகிறார். அழக்கூட திராணியற்று சிலையாக நிற்கிறார். ராணுவத்தில் சேர்ந்த பாண்டியன், வடக்கத்திய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக வந்திருக்க... ரேவதியால் எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்.

இப்போது... மீண்டும் பக்கத்து கிராமம் பெண் கேட்டு மல்லுக்கு நிற்கும். ஒருபக்கம் பாண்டியனின் திருமணம்... இன்னொரு கிராமச் சண்டை. இறுதியில் முத்துப்பேச்சி என்னானாள் என்பதை மண் மணக்க, காதல் மணக்க, உணர்ச்சி தகிக்கச் சொல்லியிருப்பார் பாரதிராஜா.

கேரளத்து ரேவதியை, மதுரைக்காரப் பெண்ணாக, முத்துப்பேச்சியாகவே மாற்றியிருப்பார். மிகச்சிறந்த நடிகையான காந்திமதிக்கு, ஒச்சாயிக் கிழவி பாத்திரம், வாழ்நாள் சாதனைக்கான தடம். வரும் காட்சிகளிலெல்லாம் நறுக் நறுக்கென பழமொழி சொல்லி வசனம் பேசி முத்திரை பதித்திருப்பார்.

விஜயன், வினுச்சக்கரவர்த்தி, கே.கே.செளந்தர், ஜனகராஜ், ராமநாதன், விஜயனின் சின்னவீடாகவும் வினுச்சக்கரவர்த்திக்கு சின்னவீடாகவும் மாறிப்போகிற ஒய்.விஜயாவும் அவர் தம்பியாக வரும் சூர்யகாந்தும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நிழல்கள் ரவியின் கேரக்டர் அமைப்பு தனிச்சிறப்பு. வாத்தியார்த்தனமான கெளரவத்துடன் கண்ணியம் காட்டியிருப்பார். பாண்டியனின் அறிமுகப்படமும் இதுதான். ‘கதை ரெடி, ஹீரோயின் ரெடி, லொகேஷன் ரெடி, ஆனால் ஹீரோ மட்டும் கண்ணில் கிடைக்கலையே...’ என்று லொகேஷனுக்குச் செல்வதற்கு முன்பாக, மதுரை மீனாட்சியம்மனை தரிசித்தார் பாரதிராஜா. கோயிலிலிருந்து வெளியே வரும்போது, வளையல் கடை வாசலில் அந்தப் பையனைப் பார்த்தார். பாரதிராஜாவைப் பார்க்க, அவருடன் பேச, தயங்கியபடி மலங்கமலங்க முழித்துக்கொண்டிருந்தான் அந்தப் பையன். அவனை அழைத்த பாரதிராஜா, “ஒரு வேலை இருக்கு, கார்ல ஏறு” என்று தேனிப்பக்கம் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். காரிலிருந்து உற்சாகமாக இறங்கிய பாரதிராஜா, யூனிட்டாரிடமும் உதவி இயக்குநர்களிடமும் சொன்ன வார்த்தை...“படத்துக்கு ஹீரோ கிடைச்சிட்டான்யா!”

பாண்டியனை அப்படியே வீரய்யனாகவே மாற்றினார். அவரும் முதல் படம் என்பதாக இல்லாமல், பிரமாதப்படுத்தியிருப்பார்.

வழக்கம் போல் கலைமணியின் கதை...பி.கண்ணனின் ஒளிப்பதிவு. தன் உதவி இயக்குநராகவும் பத்திரிகையாளராகவும் பி.ஆர்.ஓ.வாகவும் நண்பராகவும் இருக்கிற சித்ரா லட்சுமணன் தயாரிக்க, அவருக்காக ‘மண்வாசனை’ பண்ணினார் பாரதிராஜா. படத்துக்குப் பெரும்பலமாக அமைந்த முதல் விஷயம்... வசனம். மதுரைத் தமிழும் பழமொழிகளும் கொண்டு மிகப் பிரமாதமாக வசனம் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம்.

ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்
ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்

மேலும் பஞ்சு அருணாசலம், வைரமுத்து, கங்கை அமரன், எம்.ஜி.வல்லபன் முதலானோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். படத்தில் இன்னொரு பலம்... இளையராஜா. டைட்டில் பாடல் தொடங்கி அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார். ‘அரிசி குத்தும் அக்கா மகளே’, பொத்திவச்ச மல்லிகை மொட்டு’, ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்,’ ‘மூக்கு அரை மொக்கம்மா’ என்பது முதலான எல்லாப் பாடல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வெற்றி பெற்றன. டைட்டில் பாடலை இளையராஜா பாடியிருப்பார். ‘பொத்தி வச்ச மல்லிகை’ மொட்டில் எஸ்.பி.பி. கொஞ்சியிருப்பார். ‘அரிசி குத்தும்’ பாட்டில் மலேசியா வாசுதேவன் நக்கலடித்திருப்பார். ‘மூக்கு அரை மொக்கம்மா’ பாடலில் அதே மலேசியா நையாண்டி செய்திருப்பார். ‘ஆனந்த தேன் சிந்தும்’ பாடலில் மனிதர் காதல் ஏக்கத்தைப் படர விட்டிருப்பார்.

‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலின் முன்னிசையிலேயே நம்மை மேலே தூக்கிக்கொண்டு வந்து நிறுத்துவார் இளையராஜா. அதேபோல், ‘ஆனந்த தேன் சிந்தும்’ பாடலின் தொடக்கத்தில், படபடவென சத்தமும் ‘ஷூட்...!’ எனும் வார்த்தையும் போட்டு, மிலிட்டிரிக்கார பாண்டியனுக்கு பாட்டுப் போட்டிருப்பார் இளையராஜா.

படத்தில் நிழல்கள் ரவி அடிக்கடி சொல்லும் கவிதைகளில் இரண்டு சுவாரசியம். ஒன்று... அவை வைரமுத்து கவிதைகள். அடுத்தது... இன்றைக்கு அமிதாப் முதலான எத்தனையோ பேருக்கு (தமிழில்) குரல் கொடுக்கும் நிழல்கள் ரவிக்கு அவர் சொல்லும் கவிதைகளுக்கும் விஜயனுக்கும் என இந்தப் படத்தில் இரண்டு பேருக்கும் குரல் கொடுத்திருப்பார்... இயக்குநர் பாரதிராஜா.

1983 ஜூலை 29-ம் தேதி வெளியானது ‘மண்வாசனை’. தமிழகத்தில் வெளியிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள், 150 நாள், வெள்ளிவிழா என கொண்டாடியது. மதுரையில் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

திரையில் ‘மண் வாசனை’ மலர்ந்து 39 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், இன்னும் அந்த தெக்கத்தி மண்ணின் வாசம் நாசியையும் நம் மனசையும் தொட்டு நிமிண்டிக்கொண்டே இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in