ரஜினியின் எழுத்து, ராஜாவின் ஜாலம்: ‘வள்ளி’ வெளியாகி 29 ஆண்டுகள்!

ரஜினியின் எழுத்து, ராஜாவின் ஜாலம்: ‘வள்ளி’ வெளியாகி 29 ஆண்டுகள்!

சில படங்கள் கதையால் முக்கியத்துவம் பெறும். வசனத்தால் கவனிக்கப்படும். நடிகர் நடிகைகளால் இன்னும் பேசப்படும். படத்தை ஒருவர் தயாரித்ததற்காகவே அதிக அளவில் பேசப்பட்டு, பின்னர் கதையையும் வசனத்தையும் இசையையும் கொண்டாடிப் பேசினார்கள். அந்தப் படம் இப்படித்தான் ஆரம்பத்தில் பேசப்பட்டது. அந்தத் தயாரிப்பாளர்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் ஏற்கெனவே ‘கவிதாலயா’ பேனரில் ‘ஸ்ரீராகவேந்திரர்’ எனும் தன் 100-வது படத்தைத் தந்தார். அதற்குப் பின்னர், ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் எனும் பேனரை உருவாக்கி ‘மாவீரன்’ என்கிற ரீமேக் படத்தைத் தயாரித்தார். இளையராஜா இசையில், ராஜசேகர் இயக்கத்தில், அம்பிகா, தாராசிங் நடிக்க இந்தப் படம் வெளியானது. பின்னர் ‘ரஜினி ஆர்ட்ஸ்’ எனும் பேனரில் சொந்தப் படத்தைத் தயாரித்தார் ரஜினி. இந்த முறை ஹீரோவாக நடிக்காமல், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். நாயகன் நாயகியாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார்.

கிராமத்துக் கதை. கதையின் நாயகன் கிராமத்தில் வாழ்கிறான். அவளது முறைப்பெண் வள்ளி, பட்டணம் போய் படித்துவிட்டு வருகிறாள். அவள் மீது ஆசையும் காதலும் கொண்டிருக்கும் நாயகன், அவளை தடபுடலாக வரவேற்கிறான். ஆனால், நாயகிக்கோ அவன் மீது பெரிய ஈர்ப்போ காதலோ இல்லை. பட்டணமும் நாகரிகமும் அவளை மாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு தருணத்திலும் தன் அன்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான் நாயகன். ஆனாலும் அதையெல்லாம் புறந்தள்ளிக்கொண்டே இருக்கிறாள் நாயகி.

ரஜினி தயாரித்த ‘வள்ளி’
ரஜினி தயாரித்த ‘வள்ளி’

அந்தச் சமயத்தில்தான், ஊருக்கு நவநாகரிக இளைஞன் தன் நட்புக் கூட்டத்துடன் வருகிறான். அவனுடைய அழகில் ஈர்க்கப்படுகிறாள் நாயகி. அவன் பேச்சில் மலைத்துப் போகிறாள். அவனுடைய கிடார் வாசிப்பில் சொக்கிப் போகிறாள். அவன் மீது காதல் கொள்கிறாள். இருவரும் காதலிக்கிறார்கள் என்று சொல்வதை விட அவள் காதலிக்கிறாள்; அதைக் கொண்டு அவளை அவன் பயன்படுத்த நினைக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருகட்டத்தில் அவன் வசத்துக்கு வள்ளி அடிமையாகிறாள். அவனிடம் தன்னை இழக்கிறாள். பிறகு கிராமத்தில் இருந்து மீண்டும் நகரத்துக்குக் கிளம்ப முடிவெடுக்கிறான் அந்த இளைஞன். “ஊருக்குப் போயிட்டு அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு உன்னை வந்து கூட்டிட்டுப் போறேன்” என்று பொய்யாய் வாக்குறுதியை அள்ளி எறிந்துவிட்டு, கிளம்புகிறான். அவன் திரும்பி வரவே இல்லை. அவனுக்காகவே காத்திருக்கிறாள்.

இந்த விஷயம் முறைப்பையனுக்குத் தெரிய வர துடித்துப்போகிறான். ஊரில் எவருமே இல்லாமல் தன்னந்தனியே வாழும் வீரையாவுக்கும் இது தெரிகிறது. அவளை வீரையா கண்காணித்தபடி இருக்கிறார்.

ஒருகட்டத்தில், எந்த இடத்தில் தன்னை அவனிடம் பறிகொடுத்தாளோ, அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்குகிறாள். போராட்டமானது, ஊருக்குத் தெரிகிறது. அக்கம்பக்க கிராமங்களுக்கும் தெரியவருகிறது. பத்திரிகைச் செய்தியாகி, நகரங்களுக்கும் பரவுகிறது. சென்னை வரை இந்த விஷயம் பேசுபொருளாகிறது. கெடுத்தவனின் தந்தைதான் நாட்டை ஆளும் முதல்வர் எனும் விஷயம் கிராமத்துக்குத் தெரிகிறது. இந்தப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்க... போராட்டத்துக்கு நாயகனும் வீரையாவும் கிராமமும் துணைநிற்க, ஒருவழியாக அந்த இளைஞன் வருகிறான். தன் முறைப்பெண் அவனுடன் இணைந்து வாழ நாயகனே திருமண ஏற்பாடுகளைச் செய்கிறான். ஆனால் நாயகியோ, தன்னைக் கெடுத்தவனைச் சாகடிக்கிறாள். சிறைக்குச் செல்கிறாள்.

தண்டனை முடிகிறது. கிராமத்துக்கு வருகிறாள். இப்போதும் அவளை ஏற்க நாயகன் தயாராக இருக்கிறான். வீரையா அவர்களுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கிறார் என்பதுடன் ‘சுபம்’ கார்டு போடப்படுகிறது.

ஹரிராஜ், சஞ்சய், ப்ரியா ராமன் முதலானோர் அறிமுகமானார்கள் இந்தப் படத்தில். முறைப்பையனாக நாயகனாக ஹரிராஜ். சீரழிக்கும் கேரக்டரில் சஞ்சய். கதையின் நாயகியாக, வள்ளியாக ப்ரியா ராமன். வீரையாவாக, ரஜினிகாந்த்.

ரயில்வேயில் வேலை பார்த்த அலெக்ஸ் என்பவர் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். வடிவேலுவும் இந்தப் படத்தில் நடித்திருப்பார். சீரியஸாகச் சென்றுகொண்டிருக்கும் கதையின் ரிலாக்ஸ் நாயகனே வடிவேலுதான். தவிர, தன் குணச்சித்திர நடிப்பையும் இதில் வழங்கியிருப்பார் வடிவேலு.

கலைந்த முடி (எப்போதும் அப்படி இருப்பதுதானே அவர் ஸ்டைல்), நரைத்த தாடி, கையில் சாராய பாட்டில், தோளில் சால்வை, ஒரே காஸ்ட்யூம் என படம் முழுவதும் வீரையா எனும் கதாபாத்திரத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருப்பார் ரஜினி. பின்னாளில், ‘முத்து’ படம் வெளியானபோது, ‘வள்ளி’ படத்தின் வேறொரு வடிவம் என்று அந்த வயதான ரஜினி கதாபாத்திரத்தைப் பலரும் நினைவுபடுத்திக்கொண்டார்கள்.

ரஜினியின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கே.நட்ராஜ், படத்தை இயக்கினார். அஜயன் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில், கிராமம் இன்னும் அழகானது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்புப் பணிகளை ரஜினிகாந்த் செய்தார். இதுவே படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியது.

ரஜினி நடிக்கிறார். ரஜினி தயாரிக்கிறார். ரஜினியே கதை எழுதியிருக்கிறார். ரஜினியே திரைக்கதையைப் பண்ணியிருக்கிறார். அட... ரஜினியே வசனமும் எழுதியிருக்கிறார் என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் ‘அட... அட... அட... அட...’ என்று போட்டுக்கொண்டே, படம் எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் ரஜினி ரசிகர்களும் தமிழக மக்களும்.

இளையராஜாவுடன்...
இளையராஜாவுடன்...

1993 ஆகஸ்ட் 20-ல் படம் வெளியானது. வழக்கமான ரஜினி பட ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களமுமாக தியேட்டர்கள் ராஜகளையுடன் இருக்க, முதல் ஷோ படம் பார்த்த ரசிகர்களின் முகம் வாடிப் போனது. இப்படியொரு படத்தை ரஜினி ஆர்வத்துடன் ஆசையுடன் எடுத்திருந்தாலும், ’இது வழக்கமான ரஜினி படம் மாதிரி இல்ல’ என்று வருத்தப்பட்டார்கள். கதையும் சாதாரண, பழகிப்போன கதைதான் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனாலும் ‘நம்ம ரஜினி தயாரிச்சிருக்காருப்பா’ என்று வந்து பார்த்தவர்களும் உண்டு.

படத்துக்கு மிகப்பெரிய பலம்... இளையராஜா. அவரின் இசையில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘டிங்கு ராங்கு ரப்பப்போ’ என்ற பாடல் ஊரில் எல்லாப் பகுதிகளிலும் ஒலித்தது. ‘வள்ளி வரப்போறா’ என்கிற பாடலும் பட்டையைக் கிளப்பியது. ’குக்கூக்கூ கூக்கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா’ என்ற பாடலும் ஹிட்டானது. லதா ரஜினிகாந்த் பாடியிருப்பார்.

முக்கியமாக, கதையின் மையப்புள்ளியான வள்ளி கதாபாத்திரம் அவனிடம் தன்னையே இழக்கும் காட்சிக்கு, இளையராஜா அமைத்த ஆரம்ப கிடாரின் இசையும் ’ஆஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ’ எனும் ஹம்மிங்கும் ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்...’ என்கிற அந்தப் பாடலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சுவர்ணலதாவின் மாயக்குரலில் நாம் கரைந்தேபோய்விடுவோம்.

படம் நல்ல வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் தோல்விப்படமாகவும் அமையவில்லை. படத்தின் சாட்டிலைட் உரிமையை ரஜினி விற்றாரா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படிக் கொடுத்திருந்தால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஏதோவொரு நேரத்தில் இந்தப் படத்தைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருந்திருப்பார்கள். அதேபோல், யூடியூபிலும் முழுமையான திரைப்படமாக கிடைக்கவில்லை.

ஒரு திரைப்படமாக ‘வள்ளி’ படம் மிகப்பெரிய தாக்கத்தையெல்லாம் நமக்குள் ஏற்படுத்திவிடவில்லைதான். ஆனாலும் 29 ஆண்டுகள் கழித்தும் நம் ஒவ்வொருக்குள்ளேயும் இளையராஜாவின் ‘என்னுள்ளே... என்னுள்ளே...’ பாட்டு நம்மை என்னவோ செய்துகொண்டே இருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in