ஜெயலலிதா கைது... 25 ஆண்டுகள்!

என்ன நடந்தது 1996 டிசம்பர் 7-ல்?
ஜெயலலிதா கைது... 25 ஆண்டுகள்!
ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து, இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம், 1996-ல் திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிரவைத்த அந்தக் கைது நிகழ்வு எப்படி நிகழ்ந்தது?

அப்போது, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீது டான்சி நில பேரம் உள்ளிட்ட 7 வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்கள் தொடங்கி சசிகலா வரை பலரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஜெயலலிதா மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று தமாகா உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தன. அதனால், எந்த நிமிடத்திலும் ஜெயலலிதா கைது செய்யப்படக்கூடும் என்ற சூழல் நிலவியது.

அதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா, 7 வழக்குகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனு நிராகரிக்கப்படவே, 7 வழக்குகளுக்கும் தனித்தனியே முன்ஜாமீன் கோரினார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் கைதுசெய்யப்படும் ஜெயலலிதா...
போயஸ் கார்டன் இல்லத்தில் கைதுசெய்யப்படும் ஜெயலலிதா...படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

அந்த 7 மனுக்களையும் நீதிபதி சிவப்பா தள்ளுபடி செய்யவே, ஜெயலலிதாவைக் கைது செய்யத் தயாரானது திமுக அரசு. உரிய உத்தரவுகள் வெளியாகின. ஜெயலலிதா கைது செய்யப்பட்டால், ஏற்படப்போகும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கையாளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1996 டிசம்பர் 7. அதிகாலை முதலே, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தைச் சுற்றிக் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதாவைக் கைதுசெய்வதற்கான உத்தரவை எடுத்துக்கொண்டு, வேதா நிலையத்துக்குள் நுழைந்தார் காவல் துறை அதிகாரி.

உள்ளாட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் நடந்த ரூ.8.5 கோடி அளவிலான ஊழலில் தொடர்பிருப்பதாகக் கருதுவதால், அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதாவிடம் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து குளித்து முடித்து, பூஜை செய்துவிட்டு, காலை உணவைச் சாப்பிட்டார் ஜெயலலிதா. பிறகு பெட்டியில் தயாராக இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு, வேதா நிலைய போர்டிகோவுக்கு வந்தார்.

அதுவரை வேதா நிலையத்தில் காத்திருந்த காவல் துறையினர், உடனடியாக ஜெயலலிதாவைக் கைது செய்தனர். ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஒருவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டது அதுதான் முதன்முறை.

அப்போது, போயஸ் கார்டனைச் சுற்றிக் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவின் கைதுக்கு எதிராகக் கோஷமிட்டனர். தனது கைது, அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று பத்திரிகையாளர்களிடம் கூறிய ஜெயலலிதா, “நாளை நமதே” என்று தொண்டர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, காவல் துறை வாகனத்தில் ஏறினார்.

சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்படுவதற்காக, காவல் துறை வாகனத்தில் அழைத்துவரப்பட்டஜெயலலிதா...
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்படுவதற்காக, காவல் துறை வாகனத்தில் அழைத்துவரப்பட்டஜெயலலிதா...படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

நேராக நீதிபதி ஏ.ராமமூர்த்தியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. வழக்கு, கைது விவரங்களைப் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவை சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி ராமமூர்த்தி.

அப்போது நீதிபதியிடம் பேசிய ஜெயலலிதா, “குண்டர் சட்டம், தடா சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்கீழ் பலரைக் கைதுசெய்வதற்கான உத்தரவில், நான் முதல்வராக இருந்தபோது கையெழுத்திட்டிருப்பதால், சிறையிலிருக்கும் நபர்களால் எனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும்” என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி ராமமூர்த்தி, சிறையில் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பைத் தரும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட கைதி எண்: 2529. மொத்தம் 28 நாட்களுக்கு நீடித்தது ஜெயலலிதாவின் முதல் சிறைவாசம்.

கட்டுரையாளர்: எழுத்தாளர், ஊடகவியலாளர், ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in