டிச.13: நடுங்கவைத்த நாடாளுமன்றத் தாக்குதல்!

இன்று 20-வது ஆண்டு நினைவுதினம்
டிச.13:  நடுங்கவைத்த நாடாளுமன்றத் தாக்குதல்!

2001-ல் இதே நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்தியாவை அதிரவைத்த இந்தச் சம்பவத்தின் 20-வது ஆண்டு நினைவுநாள் இன்று.

1999-ல் கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றிருந்த நிலையில், அடுத்த 2-வது ஆண்டில் இந்தத் தாக்குதல் நடந்தது. டெல்லியில் அது திருமண நிகழ்வுகளின் சீசன் என்பதால், ஆரம்பத்தில் பட்டாசு வெடிப்பதாகவே நாடாளுமன்ற அலுவலகக் கட்டிடங்களில் இருந்த பலர் நினைத்தார்கள். எனினும், பிரச்சினை வேறு மாதிரியானது என விரைவில் தெரியவந்தது.

5 பயங்கரவாதிகள் ஏ.கே-47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள், வெடிகுண்டுகள் சகிதம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் கார் மூலம் ஊடுருவியிருந்தனர். அதை முதலில் கண்டறிந்த கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி யாதவ், சந்தேகத்துடன் அந்தக் காரை அணுகினார். பயங்கரவாதிகளைக் கண்டதும் விபரீதத்தை உணர்ந்த அவர், திரும்பி ஓடிச் சென்று முதலாம் எண் கேட்டை அடைக்க முயன்றார். ஆனால், பயங்கரவாதிகள் அவரைச் சுட்டுக்கொன்றனர்.

தொடர்ந்து கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டே பயங்கரவாதிகள் முன்னேறிச் சென்றனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர். ஏறத்தாழ 30 நிமிடங்கள் நீடித்த எதிர்த் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுவீழ்த்தப்பட்டனர்.

மக்களவை அமர்வு நடந்த நாளில் நடந்த இந்தச் சம்பவத்தால், நாடு முழுவதும் பதைபதைப்பு ஏற்பட்டது. அவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பணியாளர்களும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்தனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்றாலும், அன்று பணியில் இருந்த டெல்லி போலீஸார் 6 பேர், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர்.

இதையடுத்து, 72 மணி நேரத்தில் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவினர் நடத்திய தீவிர வேட்டையில், ஷவுகத் உசேன், அவரது மனைவி அப்சன் குரு, எஸ்.ஏ.ஆர்.கிலானி, அப்சல் குரு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். 2013-ல்அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் உருவானது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in