எம்ஜிஆர், சிவாஜியைக் கடந்து ஏகோபித்த வெற்றி பெற்ற படங்கள்!

1963-ம் ஆண்டில் மலர்ந்த திரைக் காவியங்கள்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

‘யார் நடித்திருந்தாலும் கதை முக்கியம்; கதையைச் சொல்லும் விதம் முக்கியம்’ என்று அந்தக் கால சினிமாவை ஆழ்ந்து, ரசித்துப்பார்த்து ஆராதித்தார்கள் ரசிகர்கள். நாடகம், சினிமா, கோயில் விழாக்கள் தவிர பொழுதுபோக்கு இல்லாத காலகட்டத்தில், சினிமாவே பொழுதுபோக்கின் மிக முக்கிய அங்கம் வகித்தது. அதேசமயம், வெறும் பொழுதுபோக்காக மட்டுமே சினிமாவைக் கொடுக்க, அப்போதைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும்கூட சம்மதிக்கவில்லை.

’மக்களுக்குப் பயனுள்ள மாதிரி ஏதாவது மெசேஜ் சொல்லணும்’ என்பதில் கவனமாகவும் ஈடுபாட்டுடனும் இருந்தார்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரே வருடத்தில் வந்த அவர்களின் படங்களையெல்லாம் கடந்து மற்ற படங்களும் சக்கைப்போடு போட்டன.

1963-ம் ஆண்டு, எம்ஜிஆர் 9 படங்களில் நடித்தார். பல படங்கள் வெற்றிப் படங்களாகின. அதேபோல், சிவாஜியும் அதே வருடத்தில், 9 படங்களில் நடித்தார். இவரும் பல வெற்றிப் படங்களை இந்த வருடத்தில் கொடுத்தார். இருவரின் படங்களையும் கடந்து, பல படங்கள் அந்தக் கால ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதயத்தில் நீ
இதயத்தில் நீ

‘இதயத்தில் நீ’ என்றொரு படம். ஜெமினி கணேசனும் தேவிகாவும் நடிக்க, முக்தா வி.சீனிவாசன் இயக்கினார். ஏவி.எம்.ராஜன், ஜெமினி சந்திரகாந்தா நடிப்பில், கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘துளசிமாடம்’ வெளியானது. ஏவி.எம். தயாரிப்பில், முருகன் பிரதர்ஸ் எனும் பேனரில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், ‘நானும் ஒரு பெண்’ வெளியானது. இதில் எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் முதலானோர் நடித்தார்கள். இந்தப் படத்துக்கு சிறந்த படம், ஃபிலிம்பேர் விருது முதலானவை கிடைத்தன.

எஸ்எஸ்ஆர், தேவிகா, முத்துராமன், மாஸ்டர் கமல்ஹாசன் முதலானோர் நடிப்பில் கண்ணதாசனின் தயாரிப்பில், ‘வானம்பாடி’ வெளியானது. பின்னாளில் சிவாஜி கணேசனை ரசித்து ரசித்து பல படங்கள் இயக்கிய பி.மாதவனின் முதல் படமாக, ‘மணியோசை’ வெளியானது. கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில், கல்யாண்குமார், முத்துராமன், விஜயகுமாரி, புஷ்பலதா முதலானோர் நடித்தார்கள்.

வானம்பாடி
வானம்பாடி

இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கல்யாண்குமார், தேவிகா, எம்.என்.நம்பியார் முதலானோர் நடித்தார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா, ரங்காராவ் நடிப்பில் ‘கற்பகம்’ படம் இந்த வருடத்தில்தான் வெளியானது. கே.ஆர்.விஜயாவின் முதல் படம் என்பது இதன் தனிச்சிறப்பு!

இதே வருடத்தில் இரண்டு சுவாரசியங்கள் நிகழ்ந்தன. கே.சங்கர் இயக்கத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், ‘இது சத்தியம்’ என்ற படம் வெளியானது.

இது சத்தியம்
இது சத்தியம்

இந்தப் படத்தின் நாயகன், மிகப்பெரிய வில்லன் நடிகரான எஸ்.ஏ.அசோகன். ‘ஜெமினி’ சந்திரகாந்தா தான் நாயகி. அடுத்த சுவாரசியம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், வேதாவின் இசையில், ஜி.விஸ்வநாதனின் இயக்கத்தில் ‘கொஞ்சும் குமரி’ படம் வெளியானது. இந்தப் படத்தின் நாயகன்... மாபெரும் வில்லன் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். கதாநாயகி... காமெடியிலும் குணச்சித்திரத்திலும் தனிமுத்திரை பதித்த மனோரமா!

’இதயத்தில் நீ’ படத்தின் பாடல்கள் இன்றைக்கும் நம் இதயத்தில் தனியிடம் பிடித்திருக்கின்றன. ‘சித்திரைப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’, ’பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா, பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா’, ’ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே’, ’உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்’ என்று எல்லாப் பாடல்களும் இதயத்தில் இருக்கின்றன.

நானும் ஒரு பெண்
நானும் ஒரு பெண்

‘இது சத்தியம்’ படத்தில், ’சிங்காரத் தேருக்கு சேலை கட்டி, சின்னச்சின்ன இடையில் பூவைக்கட்டி’, ’மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்’, ’சரவணப் பொய்கையில் நீராடி’, ’காதலிலே பற்றுவைத்தாள் அன்னையடா அன்னை’, ‘குங்குமப்பொட்டு குலுங்குதடி’, ’சத்தியம் இது சத்தியம்’ என்று எல்லா பாடல்களும் மனதுக்கு நெருக்கமான பாடல்களாக அமைந்தன.

’கொஞ்சும் குமரி’ படத்தில், ‘நடந்து காட்டு நடந்து காட்டு எனக்கு முன்னாலே’, ‘ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே’, ’தோப்புல ஒருநாள் சிரித்தாயடி அதை நினைக்க நினைக்கத்தான் இனிக்குதடி’, ’ஜாலியான ஜோடிகளா காலியான மூளைகளா’, ‘மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா?’, ‘வணக்கம் வணக்கம் அண்ணாச்சி’ என்று ஜாலியும் கேலியுமாகப் பாடல்கள் அமைந்திருந்தன.

கொஞ்சும் குமரி
கொஞ்சும் குமரி

’துளசி மாடம்’ படத்தில், ’கல்யாண சாப்பாடு போடும்முன்னே, என் கையாலே சாப்பாடு போடட்டுமா?’, ’ஆடும் மயிலே ஆட்டம் எங்கே?’, ‘சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே’ முதலான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

’கற்பகம்’ படத்தில், ’பக்கத்து வீட்டு பருவ மச்சான்’, ‘அத்தை மடி மெத்தையடி’, ’ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’, ’மன்னவனே அழலாமா’ என எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்தது. ’படத்துல ஒரேயொரு பாட்டாவது இந்தப் பையனுக்குக் கொடுங்க’ என்று மெல்லிசை மன்னர், கே.எஸ்.ஜி-யிடம் கேட்க, அவரும் சரியென்று சம்மதித்து பாடல் எழுதச் சொல்ல, பாடலைக் கேட்டுவிட்டு, படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதவைத்தார்கள். அந்தக் கவிஞர்... வாலி.

கற்பகம்
கற்பகம்

ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில், ’அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’, ’காடுமலை மேடு கண்ட மாட்டுப்பொண்ணே’, ’நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை’ முதலான பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாட்டு டியூனுக்காக ஆறு மாதங்கள் ஸ்ரீதர் காத்திருந்தார் என்று சொல்வார்கள்.

’தேவன் கோவில் மணியோசை’, ’வருஷம் மாசம் தேதி பாத்து வயசு வந்த பொண்ணைப் பாத்து’, ‘ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு அவர் ஆம்பளயா பொம்பளயா என்னான்னு கேளு’ முதலான பாடல்கள் ‘மணி ஓசை’ படத்தில் இடம்பெற்றிருந்தன.

கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அல்வா, மைசூர்பா, குலோப்ஜாமூன், ரசகுல்லா என்று சொல்லிக்கொண்டே போகலாம். ’கங்கைக்கரைத் தோட்டம்’, ‘ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக’, ‘தூக்கணாங்குருவிக்கூடு’, ’கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்’, ‘ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்’, ‘யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்’ என்று எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. பாட்டுக்காகவே படம் பார்க்க வந்தார்கள்.

’நானும் ஒரு பெண்’ படத்தில், ‘பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும்’, ’ஏமாறச் சொன்னது நானா?’, ’கண்ணா கருமை நிறக்கண்ணா’, ‘கண்ணுக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணின் பேரைச் சொல்லவா’ என்று பாடல்கள் எல்லாமே மக்களுக்குப் பிடித்திருந்தன.

எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தாலும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’ முதலான பல படங்கள் தனித்துவம் பெற்று, அமோக வெற்றியை அடைந்தன. மேலும் இந்தப் படங்களெல்லாமே, இன்றைக்கும் என்றைக்கும் பார்க்கலாம் எனும் ரகத்தில் அமைந்ததுதான் கூடுதல் ஸ்பெஷல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in