சீர்மிகு சிறகுகள் - 100

பழங்குடி பிள்ளைகளின் இடைநிற்றலைத் தடுக்க இப்படியும் ஒரு திட்டம்!
பழங்குடி மாணவர்களுடன் கலந்துரையாடும் ஆட்சியர்
பழங்குடி மாணவர்களுடன் கலந்துரையாடும் ஆட்சியர்

பழங்குடிகளுக்கு பள்ளிப் படிப்பென்பது சாதாரண நாட்களிலேயே எட்டாக் கனி. இந்தக் கரோனா காலத்தில் அவர்களுக்கு அது கண்ணுக்குத் தெரியாத கனியாகவே மாறிவிட்ட சூழலில், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் குறையைப் போக்க அசத்தலான திட்டம் ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். அதுதான் ‘சிறகுகள் 100’ சிறப்புத் திட்டம்.

அதென்ன சிறகுகள் 100? விரிவாகப் பேசுவோம். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பொன்னேரி, அம்பத்தூர் என 5 கல்வி மாவட்டங்கள். இங்குள்ள அரசுப் பள்ளிகளில் 8, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் பயிலும் பழங்குடியின மாணவ - மாணவியரில் தேர்வு செய்யப்பட்ட 100 பேர் தான், இந்தத் திட்டத்தின் இலக்கு. இந்த மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது, இவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்குப் பார்வையையும் வளர்ப்பதுதான் ‘சிறகுகள் - 100’ சிறப்புத் திட்டத்தின் சீரிய பணி.

ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வகுத்துத் தந்திருக்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முனைப்பில் இறங்கி இருக்கிறது, திருவள்ளூர் மாவட்டக் கல்வித் துறை. முதல்கட்டமாக இந்தத் திட்டத்துக்கு தகுதியான பழங்குடியின மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடன் முதல்கட்ட கலந்தாய்வை நடத்தி முடித்திருக்கிறார் ஆட்சியர்.

இந்த மாணவர்கள் 2 வாரங்களுக்கு ஒரு முறை, காவல் துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயரதிகாரிகள், அறிவியல், அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்திப்பார்கள். மேலும், பல்வேறு துறைசார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை அறிவதுடன், சுற்றுலா குறித்த விவாதங்களிலும் பங்கெடுப்பார்கள். இவை அனைத்தும் 20 நிகழ்வுகளாக நடத்தப்படவிருக்கின்றன.

திட்டத்தின் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘சிறகுகள் 100’ திட்டத்துக்காகத் தேர்வாகி இருக்கும் பழங்குடியின மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். அந்த முதல் கூட்டத்திலேயே, உயர் கல்வி படிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பழங்குடிப் பிள்ளைகள் மாவட்ட ஆட்சியரை கேள்விகளால் துரத்தியது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

இந்த முன்னோடித் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையை ஆய்வு செய்யும்போது பள்ளி இடைநிற்றல் சதவீதம் கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. ஆரம்பப் பள்ளிகள் மாணவர்களின் வசிப்பிடத்துக்கு ஒரு கிமீ தொலைவிலும் நடுநிலைப்பள்ளிகள் இன்னும் கொஞ்சம் தொலைவிலும் இருக்கின்றன.

ஆனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பேருந்தில் பயணம் செய்யும் தொலைவுகளில் உள்ளன. இதனால்தான் நீண்ட தூரம் பயணித்து கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து இடைநிற்றல் உருவாகிறது.

இந்த இடைநிற்றலால் பழங்குடியின மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பாதிப்பை குறைக்கும் வகையிலும் பழங்குடிப் பிள்ளைகளின் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் விதத்திலும்தான் ‘சிறகுகள் 100’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பழங்குடி மாணவர்களின் முன்னேற்றத்துக்கான இத்திட்டம் அவர்களை மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தாரையும் விடியலை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்
ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

நானும் அரசுப் பள்ளியில் படித்தவன்தான். அரசுப் பள்ளிக்கும் இதரப் பள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கிராமப்புறத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் படித்தால் உயர் கல்விக்கு முன்னேற முடியாது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். எனவே, எந்தப் பின்னணியில் இருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கு எவ்வகையில் முயற்சி எடுத்துப் படித்தோம். அதில் எந்த அளவுக்கு நம் முழுமையான பங்களிப்பை அளித்துள்ளோம் என்பதே முக்கியம்.

எனது கிராமத்தில் நான்தான் ஐஏஎஸ் தேர்வான முதல் நபர். அதற்கு அடுத்த வருடமே, இன்னொருவர் எனது கிராமத்தில் தேர்வானார். இதுபோல் நாம் சார்ந்துள்ள பகுதிகளிருந்து நாம் முன்னேறி வரும்போதுதான் அந்த வழியில் இன்னும் சிலர் முன்னேறி வருவார்கள். இந்த எண்ணத்தோடு மாணவர்கள் செயல்படவேண்டும்’’ என்றார்.

இத்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், “ சிறகுகள்- 100 திட்டத்துக்காக தெளிவான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. என் எண்ணங்களும் அதன் வண்ணங்களும் - கலந்துரையாடல், என் உரிமைகள் - விவாதம், திரைப்பட நட்சத்திரங்களுடன் சிறகுகள் - 100, தியான பீடத்தில் சிறகுகள் - 100, இசையமைப்பாளர்களுடன் சிறகுகள் -100, மலையேற்றம் - சிறகுகள் 100, இஸ்ரோவில் சிறகுகள் - 100, பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரியில் சிறகுகள் - 100, வீர நினைவலைகள்- ராணுவ வீரருடன் சிறகுகள் - 100, பயிற்சியும் முயற்சியும் - கிராமிய கலைஞருடன் பயிற்சி என்பது உள்ளிட்ட செயல்திட்டங்கள் அதில் அடக்கம்” என்றனர்.

“படிப்பு மட்டுமல்லாது வாழ்க்கைக் கல்வியும் இதில் இருப்பதால், இந்தத் திட்டத்துக்குள் வந்துவிடும் எந்தப் பிள்ளைக்கும் இடைநிற்றல் என்ற எண்ணம் வரவே வராது. அடுத்த வாரம் எந்த இடத்துக்குப் போகப்போகிறோம். புதிதாக எதைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற தேடல் அந்தக் குழந்தைகளுக்குள் இயல்பாகவே ஏற்பட்டுவிடும் என்பதால், பெற்றோரே சொன்னால்கூட இனி இவர்கள் பள்ளிக்குப் போவதை நிறுத்த மாட்டார்கள். 20 வாரங்கள் முடியும்போது இந்தச் சிறப்புத் திட்டத்தின் தாக்கத்தை நன்றாகவே உணரமுடியும்” என்று உத்தரவாதம் தருகிறார்கள் கல்வித் துறை வட்டாரத்தில்

கல்வி வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றமாகும். இதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கப்பட்டுள்ள ‘சிறகுகள்-100 சிறப்புத் திட்டம்’ பழங்குடியின மாணவர்களின் சுய பாதுகாப்பு, வாழ்வியல் திறன்களை திறம்பட வளர்க்கட்டும். அதுவே மற்ற மாவட்டப் பழங்குடி மாணவர்ளுக்கும் வழிகாட்டியாக அமையட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in