`ஆனந்தத்தில் அவளை அள்ளி அணைத்துக் கொண்டேன்'- 1-ம் வகுப்பு மாணவி சஞ்சனா குறித்து நெகிழும் ஆசிரியர்

`ஆனந்தத்தில் அவளை அள்ளி அணைத்துக் கொண்டேன்'- 1-ம் வகுப்பு மாணவி சஞ்சனா குறித்து நெகிழும் ஆசிரியர்
சஞ்சனா

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த ஆசிரியர் க.தங்கபாபு இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கோட்டூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் மையங்களை பார்வையிட சென்ற இடத்தில் கண்ட காட்சி ஒன்றை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் சுவையானதாகவும், ரசிக்க வைப்பதுமான அந்த பதிவு...

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஒரு இளம் ஐ.ஏ.எஸ்! வழக்கம் போல் சூரியன் சுருட்டிக் கொண்டு மேற்கில் விழுவதற்கு முன்னதாக கிளம்பினோம் இல்லம் தேடிக் கல்வி மையங்களைப் பார்வையிட இதுவரை இரண்டாம் முறை செல்லாத மையங்களாக இருக்கிறதே என திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி பகுதி இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு செல்ல திட்டமிட்டோம்.

கோட்டூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது இருள் நீக்கி. மெதுவாகச் சென்றாலே 10 நிமிடங்களுக்குள் சென்று விடலாம். மாலை 4:30க்கெல்லாம் கோட்டூரில் நாங்கள் இருந்தோம். "தம்பி டைம் ஆகல. ஒரு டீ சாப்பிட்டுட்டு 4:45க்கு கிளம்பலாம்" என்றார் என் சக ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் அண்ணன். ஜென் மனநிலையில் சூடான தேநீரை மெல்ல உறிஞ்சத் தொடங்கினோம். கடைசி மிடறில் தேநீர் 'ஜில்'லென ஆகியிருந்தது.

வண்ண உடைகள், பவுடர் பூச்சு முகங்கள், வேக நடைகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் மையங்களுக்கு தேனுறிஞ்ச செல்லும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் கண்ணதாசனின் "இது மாலை நேரத்து மயக்கம்.." எனும் பாடல்.."இது மாலை நேரத்து தெளிவு..!" என மாறி இசைத்தது இதயத்துள்.

இருள் நீக்கியில் இரண்டு இல்லம் தேடிக் கல்வி மையங்களை பார்வையிட்டோம். தன்னார்வலர்களிடம் சின்னச் சின்ன விசாரிப்புகள் உடனுடனான அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அவர்களுக்கு அது போதாதுதான். அவர்களை நாள் முழுக்க பாராட்டிக் கொண்டே இருக்கலாம். தன்னார்வலர்கள் மோகனப்பிரியா, சத்யா, ஜானகிதேவி இவர்களை பாராட்டி விட்டு கிளம்பினோம்.

மன்னார்குடி செல்லும் வழியில் ஆலமரத்துள் பல பறவைகளின் கலவையினூடாக கேட்குமே ஒரு சங்கீதம். அந்த சங்கீதத்தை போல அங்கே மாணவர்களின் ஒரு ஆனந்தச் சப்தம். அந்த ஆனந்த சப்தம், எங்கள் டூவிலரின் இஞ்சின் சப்தத்தை நிறுத்தி இருந்தது. அது சின்னக்குருவாடி இல்லம் தேடிக் கல்வி மையம். மூன்று மையங்கள் பார்வையிட்டாயிற்று. அது போதுமானதுதான். இருந்தாலும் ஆர்வ மிகுதியில் சென்றோம். அந்த மையம் இப்படியொரு பதிவை என்னை எழுத வைக்கும் என்று அப்போது எண்ணவில்லை.

தன்னார்வலர் பிரபாவதி எங்களை வரவேற்றார். அவர் எம்.காம்., எம்.எட். படித்த பட்டதாரி என்பதை பிற்பாடு விடை பெறும் போது தெரிந்துதான் கொண்டோம். மாணவர்களிடம்

சின்னச் சின்ன கேள்விகள்..

அவர்களின் உற்சாகமான பதில்கள்.. அவர்களின் குறிப்பேடுகளைப் பார்வையிடல் என தொடர்ந்த போது சிலேட், சாக்பீஸ் சகிதம் இருந்த ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி கவனம் ஈர்த்தாள். அந்த மாணவியிடம்..

"பாப்பா..உங்க பேர எழுதத் தெரியுமா?'

"ம்ம்ம்ம்" என்று தலையாட்டினாள் படு உற்சாகமாக. அந்த மாணவி சிலேட்டை அணைத்தபடி எழுதியது...

ஒரு கவிதையே ஒரு கவிதையை எழுதுவது போலிருந்தது.

அகலக் கண் விரித்து ரசித்தேன்.

கரித் துண்டு, கோவை இலை, சிலேட்டு என மின்னல் வேகத்தில் என் பால்யங்கள் நினைவுக்கு வந்து போயின.

A

A.

A.சஞ்

A.சஞ்ச

A.சஞ்சனா

A.சஞ்சனாஸ்ரீ

என ஒவ்வொரு எழுத்தையும் எழுதிக் கொண்டிருந்தாள் என்பதை விட வரைந்து கொண்டிருந்தாள் என்பதே நிஐம். எழுத்துகளும் ஒருவித ஓவியங்கள்தானே!?

ஆசிரியர் க. தங்கபாபு
ஆசிரியர் க. தங்கபாபு

பெயருக்குப் பின்னால் அவள் எழுதியதும், எனது மைன்ட் வாய்ஸூம்.. A.சஞ்சனாஸ்ரீ | (மை.வா: பரவாயில்லையே, தான் எத்தனாவது வகுப்பு படிக்கிறோம்னு எழுதுறாள். அருமை..அருமை..)

A.சஞ்சனாஸ்ரீ |A

(மை:வா: அட அவ படிக்கிற செக்‌ஷனக் கூட எழுதுறாளே!? அவங்க ஸ்கூல்ல ஒன்னாப்பு செக்‌ஷன் பிரிக்கிற அளவுக்கு அவ்வளவு பேறா படிக்கிறாங்க?!)

அதான் முடிஞ்சிட்டே.. திரும்பவும் என்ன எழுதுறாள்..? எனது புருவங்கள் கன்னக் கதுப்புகளில் கன நேரம் விழுந்து கிடந்தன.

எனது மூளையின் காதைத் திருகி, நீ நினைத்தது "NO" என்றது அந்த "S".

A.சஞ்சனாஸ்ரீ |AS.

ஆனந்தத்தில் அவளை அள்ளி அணைத்துக் கொண்டேன்.

பெயருக்குப் பின்னால் கனவுகள் சுமக்கிற, பெயருக்குப் பின்னால் லட்சியங்கள் சுமக்கிற, பெயருக்குப் பின்னால் கம்பீரம் சுமக்கிற... A.சஞ்சனாஸ்ரீ IAS எனக்குள் இறங்கி பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.

விதைக்குள் உறங்கும் விருட்சம் போல.. அந்த ஒன்றாம் வகுப்பு மாணவிக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார் ஒரு மாவட்ட ஆட்சியர். "சிறகிருந்தால் போதும். சிறியதுதான் வானம்!" எனும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் வந்து போயின.

அந்த இளம் ஐ.ஏ.எஸ் சஞ்சனாஸ்ரீயை பாராட்டி மட்டுமல்ல வணங்கி விட்டும் வந்தோம். இல்லம் தேடிக் கல்வித் திட்டம். இன்னும் என்னென்ன மாயாஜாலங்களை நிகழ்த்த இருக்கிறதோ?!

ஆசிரியர் க.தங்கபாபு

Related Stories

No stories found.