’இன்றைக்கு அரசியல்வாதிகள் என்றாலே அச்சத்தை உருவாக்கும் சூழல் இருக்கிறது!’

’இன்றைக்கு அரசியல்வாதிகள் என்றாலே அச்சத்தை உருவாக்கும் சூழல் இருக்கிறது!’

கல்லூரி விழாவில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் இன்று மதுரை மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. மதுரை மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம், மங்கையர்க்கரசி கல்லூரியின் இயக்குநர் அ.சக்திபிரனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹாஜாகனி, கல்லூரி செயலாளர் பி.அசோக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் தலைமை உரையாற்றியபோது நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

"கல்லூரி செயலாளர் அசோக்குமார் சில வரலாற்றுச் செய்திகளைச் சொன்னார். அது இன்றைக்குத்தான் எனக்குத் தெரியவந்தது. ஆனால், இன்று அரசியல்வாதி என்ற சொல்லே பெருமைக்குரிய ஒன்றாக இல்லாமல், அச்சத்தை உருவாக்குகிற அளவுக்கு இன்றைய சூழல் இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும், எங்கள் குடும்பத்தை பொறுத்தவரைக்கும், எங்கள் தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் அரசியல் செய்வது எல்லாம் ஒரே காரணத்திற்காகத்தான். சுயமரியாதை, சமூக நீதி, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் சம வாய்ப்பு, பெண்களுக்குச் சம உரிமை போன்றவைதான் எங்கள் இலக்கு. இந்தத் தத்துவங்களைச் சட்டமாகவும், திட்டமாகவும் கொண்டுவந்து நாட்டை மாற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம்.

சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு எந்த அளவிற்கு கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பு கிடைக்கிறதோ அந்த சமுதாயம்தான் முன்னேற்றப் பாதையில் நடைபோடும். அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததால்தான் இன்றைக்குத் தமிழ்நாடு இந்திய சராசரியை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது. தமழ்நாட்டில் 1921-ம் ஆண்டிலேயே, அதாவது திராவிடக்கட்சிகளின் தந்தையான நீதிக்கட்சி ஆட்சியிலேயே பெண்களுக்கு சட்டரீதியாக வாக்குரிமை அளிக்கப்பட்டுவிட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்பே பெண்களுக்கும் கட்டாயக் கல்வி எனும் சட்டமும் இங்கே உருவாகிவிட்டது. அதேபோல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின்படி, தலைவர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முன்னேற்றப் பாதையில் நமது பெண்களை, மாணவிகளை தொடர்ந்து அழைத்துச் செல்ல ஊக்கமளிக்க வேண்டும் என்பதால்தான், கடுமையான வேலை நெருக்டிக்கு நடுவில் இந்தப் பெண்கள் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்தேன்.

இந்த மாதிரி போட்டிகள் மிக முக்கியமானவை. ஏனென்றால், ஒரு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 90 முதல் 95 சதவிகிதம் அவர்களின் கற்றல் செயல்பாடும், பழக்க வழக்கமும் அந்தக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தான் இருக்கும். உங்களுடைய பார்வையை விரிவுபடுத்தும் வகையில், மற்றவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், பிறருடைய திறமைகள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ளவும், கல்லூரிகளை தாண்டி நட்பை உருவாக்கிடவும் இது போன்ற போட்டிகள் வாய்ப்பாக இருக்கின்றன.

இந்தப் போட்டியில் 39 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெரிய அரங்கில், இவ்வளவு மாணவர்களுக்கு மத்தியில் மேடையில் நின்று பேசுவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம. அந்த அச்ச உணர்வைத் தாண்டி நீங்கள் எல்லாம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் பங்கேற்பாளர்கள் அனைவரும் வெற்றியாளர்கள்தான் என்பதைச் சொல்லி வாழ்த்துகிறேன்.

நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நம் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை முடிப்பவர்களில் 50 சதவீதத்துக்கு மேல் பெண் பிள்ளைகள்தான். மக்கள் தொகையை எடுத்துப் பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டிலும் சரி, மதுரை மாவட்டத்திலும் சரி, மதுரை மாநகரிலும் சரி பெண்கள்தான் அதிகம். இது பாராட்டுக்குரியது. ஆனால், கல்லூரிகளுக்குச் சென்றால் அந்தப் புள்ளிவிவரம் கொஞ்சம் மாறிவிடுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கிற மாணவிகளில் 96 சதவிகிதம் பேர் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில் 46 சதவிகிதம் பேர் தான் கல்லூரியில் சேர்கிறார்கள். அங்கே தொடங்கும் ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பிலும் தெரிகிறது.

உதாரணமாக, பட்டப்படிப்பை முடித்த பெண்களில் பலர் வேலையில் சேராமல், தொழிலும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ்நாடு முன்னேற, நீங்கள் கல்வி கற்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நீங்கள் எல்லாம் ஏதாவது ஒரு தொழில் துறையில் தடம் பதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பொருளாதார ரீதியில் உதவிசெய்து, நாட்டின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல துணை நிற்க வேண்டும்.

பெண்கள் தொழில் முனைவோராவதற்கு, இந்த அரசு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பெண்கள் அதிகமாக பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இன்னும் அதிகமாகச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். எனவே, மாணவிகள் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், வேலைக்குச் செல்ல வேண்டும், சுய தொழில் தொடங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Related Stories

No stories found.