இடைநிற்றலால் பாதிக்கப்படும் கல்வி: எதனால் ஏற்படும் அவலம் இது?

இடைநிற்றலால் பாதிக்கப்படும் கல்வி: எதனால் ஏற்படும் அவலம் இது?

படிப்பைப் பாதியில் நிறுத்திவிடும் ‘இடைநிற்றல்’ என்பதைப் போக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் ‘தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு-5’ (என்எஃப்எச்எஸ்-5) தரவுகளைத் திரட்டியபோது 36 சதவீத சிறுவர்களும் 21 சதவீத சிறுமிகளும், ‘மேற்கொண்டு படிக்க ஆர்வம் இல்லாததால்’ படிப்பைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுதான் புதிய போக்கு என்ற முடிவுக்கு வரக்கூடாது என்று கல்வித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இது கவலை தரும் போக்கு என்பதில் சந்தேகமில்லை.

பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து பள்ளிக்கூடங்களை மூடி வைத்ததால் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உளவியல் ரீதியாக சில மாற்றங்கள் தெரிகின்றன. ஆசிரியர்களுக்குக் கவலைகளும் அச்சங்களும் தோன்றியுள்ளன. மாணவர்களுக்கோ ஆர்வக்குறைவும் படிப்பையே இழந்துவிட்டதைப் போன்ற பிரமையும் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து படிப்பதற்கான ஊக்கத்தைப் பெறுவதில் அவர்களுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளன. சமூக, பொருளாதார, சூழல் காரணிகளும் சேர்ந்துள்ளன.

மும்பையைச் சேர்ந்த சர்வதேசக் கழகம் ஆறு வயது முதல் 17 வயது வரையுள்ள 20,084 சிறுவர், 21,851 சிறுமிகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுள்ளது. ஒன்றிய சுகாதார – குடும்பநல அமைச்சகத்தின் ஆதரவில் இந்த என்எஃப்எச்எஸ்-5 கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இடைநிற்கும் மாணவர்கள் எவ்வளவு என்பதை தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு கூறவில்லை. ஆனால் கல்வித் துறையின் தரவுகள் கவலையை அளிக்கின்றன. உயர் வகுப்பில் படிப்பைத் தொடராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-21-ல் தொடக்க நிலைப் படிப்புகளில் மாணவர் இடைநிற்பது 0.8 சதவீதம், உயர்நிலைப் பள்ளி நிலையில் (9 -10 வகுப்புகள்) அதுவே 14.6 சதவீதம். 2019-20-ல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைப் பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை 16.1 சதவீதமாக இருந்தது. இது குறைந்திருக்கிறது, அதாவது மேலும் பல லட்சம் மாணவர்கள் படிப்பைத் தொடர்ந்துள்ளனர்.

முக்கியக் காரணங்கள்

குடும்பத்தின் வறுமை, வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் இருக்கும் தொலைவு, படிப்புக்கு ஆகும் செலவு, படிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மை தொடர்பாக பெற்றோருடைய மனநிலை ஆகியவைதான் படிப்பைத் தொடர முடியாமல் பெரிதும் தடுக்கின்றன. ஆனால் இந்தக் காரணங்களில் இடம் பெறாத புதிய காரணமான – மேற்கொண்டு படிக்க ஆர்வம் இல்லை – என்பதுதான் புரிந்துகொள்ள சிக்கலாக இருக்கிறது. சிறுவர்களில் 36 சதவீதம், சிறுமிகளில் 21 சதவீதம் இப்படிக் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. படிப்புக்குச் செலவு அதிகமாகிவிட்டதால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்று 16 சதவீத மாணவர்களும் 20 சதவீத மாணவிகளும் கூறியுள்ளனர்.

வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுவதால் படிப்பை நிறுத்திவிட்டோம் என்று மாணவிகளில் 13 சதவீதம் பேரும் மாணவர்களில் 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். குழந்தைகள் படித்து என்னவாகிவிடப் போகிறது என்று குடும்பத்தார் நினைப்பதும், ஆண்கள் படித்தால் போதும் பெண்களுக்கு படிப்பு முக்கியமில்லை என்ற பழமையான மனோபாவமும் கூட இந்த இடைநிற்றலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாணவிகளில் 7 சதவீதம் பேர், தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதால் படிப்பை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவர்களிலும் 0.3 சதவீதம் திருமணமாகிவிட்டதால் படிப்பதை நிறுத்திவிட்டனர்.

வேலைக்குப் போனால் குடும்பச் செலவுக்குப் பணம் கிடைக்கிறது என்று சிறுவர்களில் 6 சதவீதம் பேரும் சிறுமிகளில் 2.5 சதவீதம் பேரும் படிப்பை நிறுத்திவிட்டனர். சொந்த நிலங்களில் வேலை செய்ய ஆள் இல்லாததாலும் வியாபாரத்துக்கு ஆள் தேவைப்படுவதாலும் படிப்பை நிறுத்திவிட்டதாக 4.4 சதவீத பையன்களும் 2.3 சதவீதப் பெண்களும் தெரிவித்தனர்.

அனுமதி கிடைக்கவில்லை

பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளாததால் மேற்கொண்டு படிப்பைத் தொடரவில்லை என்று சிறுவர்களிலும் சிறுமியர்களிலும் தலா 5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை, மதிப்பெண் குறைவாக வாங்கினரா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்றதால் படிப்பை நிறுத்திவிட்டதாக மாணவர்களில் 5 சதவீதம் பேரும் மாணவிகளில் 4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். படித்ததே போதும் மேற்கொண்டு படிப்பது அவசியமில்லை என்று கருதி நிறுத்திவிட்டதாக சிறுவர்கள், சிறுமியர்களில் தலா 4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் தொலைவாக இருப்பதால் மேற்கொண்டு படிக்கவில்லை என்று மாணவர்களில் 2 சதவீதம் பேரும் மாணவிகளில் 6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் மேற்கொண்டு படிக்கவில்லை என்று 1.7 சதவீதம், ஆசிரியைகள் இல்லாததால் படிக்கவில்லை என்று 0.2 சதவீதம், பள்ளிக்கூடம் போய்வர பாதுகாப்பில்லை என்பதால் படிப்பை நிறுத்திவிட்டதாக 2 சதவீதம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்தக் காரணங்களுக்காக மாணவர்கள் எவரும் பள்ளிக்கூடத்திலிருந்து நிற்கவில்லை.

வீட்டில் தம்பி – தங்கைகளைப் பார்த்துக்கொள்வதற்காகவும் மழை-வெள்ளம் போன்றவற்றால் குடும்பம் சீர்குலைந்ததாலும் படிப்பை நிறுத்தியதாகக் கூறியவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவு.

படிப்பில் ஆர்வம் குறைவதேன்?

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். பள்ளிக்கூடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இறுதித் தேர்வில் ஒரு முறையோ, இரு முறையோ தோல்வி ஏற்பட்ட பிறகு மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதற்குப் பிடிக்காது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பரம ஏழைகளாக இருப்பார்கள். அவர்களுடைய பெற்றோருக்குக் கல்வியின் அருமை தெரியாமல் இருக்கலாம் அல்லது அவர்களே ஆர்வமில்லாதவர்களாகவும் இருக்கக் கூடும். எனவே படித்தது போதும் நிறுத்திவிடு என்று அவர்களே கூறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். கல்வியின் அவசியம் குறித்து அரசு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முடியும். ஆர்வம் ஊட்டுவதற்குத்தான் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் உயர் கல்வி முடித்தால் தருவதைப் போன்ற ரொக்க ஊக்குவிப்புகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண் – பெண் இரு பாலருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதிக மதிப்பெண்களுக்காகத் தரும் பரிசுகள் - படிப்பைப் பூர்த்தி செய்தாலே தரப்பட வேண்டும். ஆண்டுத் தேர்வுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து மதிப்பெண்களைத் தருவதை ஒழுக்கம், வகுப்புகளுக்கு வருவதில் ஆர்வம், வீட்டுப் பாடங்களைச் செய்வதில் உள்ள தொடர்ச்சி, விளையாட்டு - கலை ஆகியவற்றில் ஈடுபாடு ஆகியவற்றுக்கும் வழங்கினால் அதிக மாணவர்கள் படித்து முடிக்கவும் வழியேற்படும்.

பெற்றோர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கும் ஆர்வம் கூட வழி செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் அடித்தளக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது விளையாட்டு, கலைத் துறை ஆகியவற்றிலும் மாணவர்கள் அதிகம் இடம்பெறச் செய்வது, அவற்றுக்கும் மதிப்பெண் அளிப்பது, பள்ளியிறுதி வகுப்பு வரையில் மாணவர்களைத் தேர்வில் தோல்வி என்று நிறுத்தாமல் தொடர்ந்து படிக்க வழி செய்வது மூலம் இதைச் சாதிக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in