இன்று நீட் தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

இன்று நீட் தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) இந்தியா முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 18.72 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்திலிருந்து 1,42,286 பேர் இந்த நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர்.

ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளுக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ள நிலையில் இன்றைய தேர்வுக்கு இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் மாணவர்கள் 1:30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று விட வேண்டும். சரியாக 1.30 மணிக்கு தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். அதற்குப் பிறகு மாணவர்களுக்கான அனுமதி கிடையாது.

மாணவர்கள் ஆதார், பான், குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வாட்ச், பெல்ட், கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்டவைகள் அணிந்து வர அனுமதி கிடையாது.

பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பதிவு செய்யப்படும். தேர்வுக்கு முன்னும், தேர்வு முடிந்த பின்பும் இரு முறை மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட் குறைந்தபட்சம் இரண்டு நகல்களை மாணவர்கள் வைத்திருக்க வேண்டும்.

அதில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் கையொப்பங்கள் உரிய இடங்களில் இருக்க வேண்டும். செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம். தேர்வு மையத்துக்குள் வழங்கப்படும் என் 95 மாஸ்கை அனைவரும் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்.

இப்படி கடுமையான நிபந்தனைகளுடன் இன்றைய நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று விடுவதன் மூலம் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம். தேவையில்லாத எந்த ஆபரணங்களையும், அணிகலன்களையும் அணிந்து செல்வதையும் முன்கூட்டியே திட்டமிட்டு தவிர்த்து விடலாம்.

கடைசி நேர பதற்றங்களை குறைத்துக் கொண்டு, வெகு இயல்பான மன நிலையோடு சென்று மாணவர்கள் நீட் தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற முயற்சிக்கலாம். மற்றபடி அதற்காக தேவையற்ற மன குழப்பங்களை கொண்டிருக்க வேண்டாம் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in