தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் திறந்தவெளி வகுப்புகள்!

பிப்ரவரி 7 முதல் மேற்கு வங்கத்தில் தொடங்குகின்றன
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

கரோனா பரவலைத் தடுக்க பிப்ரவரி 7 முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகத் திறந்தவெளி வகுப்புகள் நடத்த முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்க அரசு. ‘பராய் சிக்‌ஷாலயா’ எனும் பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு 24 பர்கனா மாவட்ட ஆட்சியர் பி.உலகநாதன், “கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் குழந்தைகளுக்கு முறையான பள்ளிக் கல்வி சென்றடைவதில்லை. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் திறந்த வெளியில் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும். அருகமைப் பள்ளி ஆசிரியர்களும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் பாடம் நடத்துவார்கள். இந்தத் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

பள்ளிப் பாடங்களைத் தாண்டி, குழந்தைகளின் தனித் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வெளிப்படுத்தவும் இந்த வகுப்புகளில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு மாநில அரசின் சார்பில் மதிய உணவும் வழங்கப்படும். இதன் மூலம், இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்றும், இதற்கான பணிகளில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கரோனா பரவல் அதிகரித்ததால், ஒரு மாத காலமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை மேற்கு வங்க அரசு நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in