மக்களைக் காப்பாத்த நினைச்சேன்... பலூன் வீடு கண்டுபிடிச்சேன்!

‘பால புரஸ்கார் விருது’ வென்ற சிறுமி விசாலினி
சாதனையாளர் விசாலினி
சாதனையாளர் விசாலினி

விசாலினிக்கு ஐந்தரை வயது இருக்கும்போது, ஒருநாள் வெள்ள பாதிப்பு செய்தியைத் தொலைக்காட்சியில் காணநேர்ந்தது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் துயரம், உடைமைகளை இழந்தவர்களின் வேதனை என செய்தியில் காட்டப்பட்ட காட்சிகள் அந்தப் பிஞ்சு மனதைத் தைத்தன.

உடனே, தனது தந்தை நரேஷ்குமாரிடம், “வெள்ளத்துல மாட்டிக்கிட்டா இறந்துபோயிடுவாங்களா? பொருளெல்லாம் அடிச்சுட்டு போயிடுமாப்பா?” என்று கேட்டாள் விலாசினி. ”ஆமாம்” என்று அவள் தந்தை பதிலளிக்க, சிறிது நேரம் யோசித்தவள், “நம்ம வீட்டுல நான் விளையாட ஒரு குட்டி ஸ்விம்மிங் பூல் இருக்கே. அதுல பலூனுக்குள்ள உட்கார்ந்துகிட்டு நீந்துனா நான் கீழ விழுறதில்லையே?!” என்றாள். ”அதுல உட்கார்ந்து ரொம்ப தூரம் நகரமுடியாது. கீழே விழுந்திடுவோம்” என்று தந்தை சொல்ல, “அப்ப வீடு மாதிரி பலூன் செஞ்சு அதுக்குள்ள உட்கார்ந்துக்கலாமே” என்று தனது கற்பனைச் சிறகை விரிக்கத் தொடங்கினாள் விசாலினி.

குழந்தைகளுக்கே உரிய பரிவுடனும், எல்லைகளற்ற கற்பனையுடனும் ஆரம்பித்த அந்த உரையாடல், அறிவியல்பூர்வமாக வடிவம்பெற்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்படாத பலூன் வீடாக உயிர்பெற்றிருக்கிறது. கரோனா பெருந்தொற்று அச்சத்தில் உலகம் ஸ்தம்பித்துப் போயிருந்த கடந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தை, விசாலினியும் அவளது தந்தையும் சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடிய கண்டுபிடிப்பை உருவாக்க ஆக்கபூர்வமாகச் செலவழித்தனர். தாய் சித்ரகலாவும் ஊக்கமளித்தார். விசாலினியின் அர்ப்பணிப்புக்கும் முயற்சிக்கும் வெற்றி மட்டுமல்ல, பெரும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

விசாலினியை வாழ்த்திய பிரதமர் மோடி
விசாலினியை வாழ்த்திய பிரதமர் மோடி

விசாலினியின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, விசாலினி ‘பால புரஸ்கார் விருது’ பெற்றுள்ளார். மத்திய அரசின் சான்றிதழும் 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காணொலி காட்சி மூலம் இந்த விருதை விசாலினிக்குப் பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை அன்று வழங்கினார்.

கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார்’ விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதை இந்தியச் சிறுவர்-சிறுமிகள் 29 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயதே ஆன விசாலினியும் ஒருவர்.

தாய் சித்ரகலா மற்றும் தந்தை நரேஷ்குமாருடன்
தாய் சித்ரகலா மற்றும் தந்தை நரேஷ்குமாருடன்

விசாலினியின் தந்தை நரேஷ்குமார், சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாதில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாய் சித்ரகலா ஹோமியோபதி மருத்துவர், விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர். இளம் கண்டுபிடிப்பாளர் விசாலினி ஹைதராபாத்தில் உள்ள டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவருகிறாள்.

விசாலினி உருவாக்கியிருக்கும் மிதக்கும் பலூன் வீடு, வெள்ளத்தில் சிக்கித் தப்பிக்க வழிதெரியாது தவிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்களைப் பத்திரமாக மீட்க உதவும் கண்டுபிடிப்பாகும்.

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானால், உள்ளே பொருத்தப்பட்ட காற்றுப் பைகள் தானாக விரிவது போலவே பலூன் வீடும் வேலை செய்யும். வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டால் பலூன் வீடு தானாக விரிந்து மிதக்கத் தொடங்கும். அதில் சீட் பெல்ட்டுடன்கூடிய இருவர் முதல் ஆறு பேருக்கான இருக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்பரப்பை ஜிப் கொண்டு மூடிக்கொள்ள முடியும். பலூன் வீட்டினுள் ஆக்சிஜன் சிலிண்டர், உணவு சேமித்துவைக்கக்கூடிய பாத்திரம், தண்ணீர் குடுவை, முதலுதவிப் பெட்டி, லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக மிதக்கும் பலூன் வீடு எங்கே உள்ளது என்பதை போலீஸாருக்கும் மீட்புப்படையினருக்கும் தெரியப்படுத்த ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் தொழில்நுட்பங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. உள்ளே மின்சாதனங்களைப் பயன்படுத்த ஏதுவாக யூபிஎஸ், சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளன.

சாதனை முகம்
சாதனை முகம்

இத்தனையும் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா என்கிற ஆச்சரியத்துடன், விசாலினியை தொடர்புகொண்டோம்.

”இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன விளையாடப் போனாள்” என்று பதிலளித்த அவளது தந்தை நரேஷ்குமார், நமது கேள்விக்கு பதிளிக்கும் விதமாக, “ஜிபிஎஸ் மாதிரி தொழில்நுட்பமெல்லாம் விசாலினிக்குத் தெரியாது. அதேநேரம் பலூன் வீடு என்பதும், உள்ள பொருத்த வேண்டிய பொருட்களும் முழுக்க முழுக்க அவளுடைய யோசனை. அதற்குத்தான் காப்புரிமை பெற்றிருக்கிறோம். அதேபோல பலூன் வீட்டை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம் என்று நானும் அவளும் பேசும்போது நான் கேள்விகள் மட்டுமே எழுப்பினேன். ஒவ்வொன்றாக யோசித்து தானாக அவள் பதிலளித்தாள். உதாரணத்துக்கு, ‘நீ பலூனுக்குள்ள உட்கார்ந்த பிறகு உனக்கு என்னவெல்லாம் தேவைப்படும்?’ என்று நான் கேட்டபோது, அவளே அதில் பொருத்த வேண்டிய ஒவ்வொரு பொருளையும் பட்டியலிட்டாள். குழந்தைகள் விளையாடும் பலூனைப் போல இருந்தால் கூரான ஆயுதத்தில் உரசினாலே வெடித்துவிடுமே. அதனால் அதற்கேற்றார்போல தாக்குப்பிடிக்கக்கூடிய ரப்பர் பலூனைத் தேர்வு செய்தோம். அதேபோல மூன்று அடுக்கு கொண்டதாக அதை வடிவமைத்தோம். வெளிப்புறம் உள்ள பலூன் தண்ணீர் பட்டதும் விரியத் தொடங்கும். உள்ளுக்குள் இருக்கும் இரண்டாவது அடுக்கு அடுத்தபடியாக விரிந்துகொடுக்கும். மூன்றாவதாக இருக்கும் உள்ளடுக்கில்தான் நாம் உட்கார வேண்டும். ஒருவேளை வெளிப்புறத்தில் உள்ள இரண்டு அடுக்குகள் உடைந்துபோனாலும் நாம் பாதுகாப்பாக இருக்க முதலுதவிப் பெட்டி, ஆக்சிஜன் சிலிண்டர், லைஃப் ஜாக்கெட் ஆகியன உதவும். இவை அத்தனையும் நாங்கள் கணினி மாதிரியாகத்தான் வடிவமைத்து காப்புரிமை பெற்றிருக்கிறோம். நிஜமாக செய்வதென்றால் 40 லட்சம் ரூபாய்வரை செலவாகும். விசாலினிக்கு 6 வயதானபோதே இந்தக் கண்டுபிடிப்புக்காக ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பெற்றாள். அதன் அடிப்படையில் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோம்” என்று நரேஷ்குமார் சொல்லிக்கொண்டிருக்கையில், விளையாடச் சென்ற விசாலினி வீடு திரும்பினாள்.

மழலை மாறாத குரலில் பேசத் தொடங்கிய விசாலினி, தனது வயதுடைய குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போயிருக்கும்போது, தனக்கு அறிவியல் புத்தாக்க படைப்புகள் தொடர்பான யூடியூப் சேனல்களைப் பார்க்கவே அதிக விருப்பம் எனச் சொன்னாள். “இந்தக் கண்டுபிடிப்பைச் செய்யத் தூண்டியது எது, எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய்?” எனக் கேட்டதற்கு, “வெள்ளத்துல மாட்டி நிறைய பேர் கஷ்டப்படுறதைப் பார்த்து, மக்களைக் காப்பாத்த நினைச்சேன்... பலூன் வீடு கண்டுபிடிச்சேன். இந்தியாவிலேயே 6 வயசுல ‘பேடன்ட் ரைட்ஸ்’ வாங்கியிருக்கும் முதல் குழந்தை நான்தான். மக்கள் எல்லாருக்கும் உதவணும்னு நினைக்கிறேன். அதனால நல்லா படிப்பேன்... கலெக்டராவேன்” என்று தன்னம்பிக்கை நிறைந்த தொனியில் பேசி நம்மை அசத்தினாள் விசாலினி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in