பள்ளிகள் திறப்போடு தடுப்பூசி விழிப்புணர்வு! அசத்தும் குமரி கல்வித் துறை

முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, பெற்றோர் ஒப்புதல் கடிதம்
முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, பெற்றோர் ஒப்புதல் கடிதம்

தமிழகத்தில். 1 முதல் 8-ம் வகுப்பு வரையான வகுப்புகளுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதிப்பதாகப் பெற்றோரிடம் இருந்து கல்வித் துறை வாயிலாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது. இந்தக் கடிதத்தின் வழியே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த வியூகம் வகுத்துள்ளது கல்வித் துறை.

கரோனா முதல் அலையின் தாக்கத்தினால் கடந்த ஆண்டு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. குழந்தைகள் ஆன்லைன் வழியே கல்வி கற்றனர். படிப்படியாக அறிவிக்கப்பட்ட கரோனா தளர்வுகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புவரையும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால், ஒன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஆன்லைன் வழியாகவே கற்றுவந்தனர். இந்நிலையில், தமிழக அரசு நவம்பர் 1 அன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான கல்விக்கூடங்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மட்டும் 2-ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி, குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் என்பதால், குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாகும். இப்போது நடுநிலைப் பள்ளிகள், மாணவ, மாணவிகளின் வருகையை வரவேற்கத் தயாராகி வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பள்ளிகளில் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுவருகின்றனர். அந்தக் கடிதத்தில், ”என் மகன் அல்லது மகளை வரும் 1-ம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும்போது பள்ளிக்கு அனுப்ப முழுமனதோடு சம்மதிக்கிறேன். என் மகன்/மகள் நலமாக இருக்கிறான்/ள். மேலும் எனது மகன்/மகளை பள்ளிக்கு அனுப்பும்போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எனக்கு முழுமையாகத் தெரியும். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளோம்/இல்லை. மேலும் கோவிட் 19 தொற்றுநோய் குறித்து பள்ளித் தலைமையாசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் நான் முழுமையாகப் பின்பற்றுவேன்.’’ என பள்ளிக்கூடத்தால் வழங்கப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து வாங்குகின்றனர். அந்த படிவத்தில் சரியானவற்றை பெற்றோர்கள் டிக் செய்ய வேண்டும்.

இதேபடிவத்தில் வீட்டில் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர், 2 தவணை தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர், வீட்டில் தடுப்பூசியே போடாதவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. அவற்றையும் பெற்றோர் நிரப்பவேண்டும்.

புகழேந்தி
புகழேந்தி

இதுகுறித்து குமரிமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தியிடம் காமதேனு இணையதளத்துக்காகப் பேசினோம். ”அனைத்து பள்ளிக்கூடங்களிலும் பெறப்படும் இந்தப் பட்டியல் எங்களுக்கு வரும். அதன்மூலம் இதுவரை தடுப்பூசியே போடாத குடும்பங்களின் பட்டியலையும் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைகள் வீட்டில் இருந்துதான் பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர். அனைத்துப் பெற்றோரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தைகளை நோய் தொற்றும் அபாயத்தில் இருந்து காக்கலாம். அதேபோல் ஏற்கெனவே அனைத்து ஆசிரியர்களுமே தடுப்பூசி போட்டுவிட்டார்கள். அதேபோல் தடுப்பூசியே போடாத பெற்றோர்களின் பட்டியல் எங்கள் கையில் இருப்பதால் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்கள் மூலமே எங்கள் ஆசிரியர்கள் விழிப்புணர்வு கொடுப்பார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை முன்னிறுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். அதற்காகத்தான் இந்தப் பட்டியலும் சேகரிக்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in