தேசவிரோத நடவடிக்கைகள்: மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உ.பி கல்லூரி நிபந்தனை!

தேசவிரோத நடவடிக்கைகள்: மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உ.பி கல்லூரி நிபந்தனை!
மாதிரிப் படம்

உத்தர பிரதேசத்தின் க்ரேட்டர் நொய்டா பகுதியில் ‘தி டைம்ஸ்’ குழுமத்துக்குச் சொந்தமான பென்னெட் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியின் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கும் புதிய நிபந்தனை பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

தி டைம்ஸ் குழும நிறுவனமான பென்னெட், கோல்மேன் அண்ட் இந்தியா லிமிட்டட் நிறுவனத்தின் பெயரில் 2016 முதல் இயங்கிவரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் 2,500 மாணவர்கள் பயில்கின்றனர்.

பின்னணி என்ன?

2019-ல் உத்தர பிரதேச அமைச்சரவை ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, புதிய மற்றும் பழைய பல்கலைக்கழகங்கள் எந்த விதமான தேசவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களுக்குத்தான் இந்த நிபந்தனை பொருந்துமே தவிர, மாணவர்களுக்கோ அவர்களின் பெற்றோர்களுக்கோ அல்ல என அந்த அவசரச் சட்டம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், பொறுப்பை மாணவர்கள் மீதும், பெற்றோர்கள் மீதும் சுமத்தியிருக்கிறது அந்தப் பல்கலைக்கழகம்.

என்ன வரையறை?

தேசவிரோத நடவடிக்கை என்பதற்கான வரையறையும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் பார்வையில் எதெல்லாம் சட்டத்துக்குப் புறம்பானதாகத் தெரிகிறதோ அதெல்லாம் தேசவிரோத நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்படி,

1. அரசுக்கு அல்லது பிறருக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தக்கூடிய அல்லது தூண்டக்கூடிய சட்டவிரோதமான எந்த நடவடிக்கையிலும் பங்கெடுக்கக் கூடாது.

2. நாட்டின் எந்தவொரு பிராந்தியத்தின் செயல்பாட்டை முடக்குவதற்கோ அல்லது பிரிப்பதற்கோ வழிவகுக்கும் எந்தவொரு சட்டவிரோதக் கருத்தையும் கொண்டிருக்கக் கூடாது அல்லது அப்படியான செயல்களில் ஈடுபடக் கூடாது; தேசிய நலனுக்கு எதிரான எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது.

3. இந்தியாவின் பாதுகாப்பு உட்பட, நாட்டின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மறுப்பதோ, அது குறித்து கேள்வி கேட்பதோ, அதன் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோ, இடையூறு செய்வதோ அல்லது இடையூறு செய்யும் நோக்கம் கொண்டிருப்பதோ கூடாது.

4. உள் அமைதியைச் சீர்குலைப்பதோ அல்லது பொதுப் பணிகளில் இடையூறு செய்வதோ கூடாது. பிராந்தியம் சார்ந்த அல்லது சாதி சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த குழுக்கள் மத்தியில் அமைதி, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பாதுகாப்பு, ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.

5. சட்டவிரோதமான கூட்டங்களிலோ அல்லது போராட்டங்களிலோ பங்கெடுக்கக் கூடாது.

என்று 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மீறுபவர்கள் உடனடியாகக் கல்லூரியிலிருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, இப்படி யாரேனும் செயல்படுவதாகத் தெரிந்தால் அதைக் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ‘ஸ்க்ரால்.இன்’ இணையதளத்தின் கேள்விகளுக்கு விளக்கமளித்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கர்னல் குல்ஜித் சிங் சட்டா, உத்தர பிரதேச அரசின் உத்தரவின்படியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in