ஏ.ஐ மூலம் ஆன்லைன் தேர்வில் ஏமாற்று வேலை!

கல்விப் புலத்தைக் கலங்கடிக்கும்அதிநவீன முறைகேடுகள்
ஏ.ஐ மூலம் ஆன்லைன் தேர்வில் ஏமாற்று வேலை!

இம்முறை நேரடித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ‘ஆன்லைனில் மட்டும்தான் தேர்வு எழுதுவோம்’ என்று மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா காலத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதால், தேர்வையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது மாணவர்களின் வாதம். ஆன்லைன் தேர்வுகள் என்ற பெயரில், ‘காப்பி’ அடிக்கும் கலாச்சாரம்தான் இந்தக் கரோனா காலத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது கல்வியாளர்களின் தரப்பு.

இந்நிலையில், ஏ.ஐ. (AI- Artificial Intelligence) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் கருத்துத் திருட்டு அதிகரித்துவிட்டதாகவும் பல்கலைக்கழகங்கள் முறைகேடுகளைக் கண்டறிய திணறுவதாகவும் புதிய செய்தி வெளியாகியுள்ளது.

கரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி முறையும் இணைய வழி தேர்வு முறையும் பரவலானது. இந்நிலையில், ‘காப்பி’ அடித்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்பதெல்லாம் காலாவதியாகிப் போன தேர்வு முறைகேடுகளாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் பதில் தானியங்கி முறையில், நம்முடைய சார்பில் கணினியையே தேர்வு எழுதச் செய்யும் அளவுக்கு மாணவர்கள் கைவரிசை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தவறு செய்ய, அதை கண்டுபிடிக்க!

கணினி மொழி தயாரிப்பு ஜிபிடி- 3 (language generator GPT-3) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்த ஜிபிடி-3 மூலமாக, மனிதர் போலவே யதார்த்தமாக எழுதும் பாணி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொழிநடையைத் தானாகச் சீர்படுத்தும் ‘Grammarly’ போன்ற தொழில்நுட்பத்தை மாணவர்கள் தேர்வு எழுதும்போது பயன்படுத்துவது பரவலாகிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பது, புத்தகத்தில் இருந்தோ இணையத்தில் இருந்தோ ஒரு பத்தியை எடுத்து அதை அங்குமிங்கும் கொஞ்சம் மாற்றி நாமே எழுதியதுபோல் மாற்றுதல், ஒரு பதிவிலிருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் லாவகமாக உருவி வேறொன்றில் இணைத்தல் போன்றவை கண் இமைக்கும் நேரத்தில் சாத்தியமாம். இத்தகைய முறைகேடுகளைக் கையும் களவுமாகப் பிடிக்க, பல்கலைக்கழகங்கள், ‘Turnitin’ போன்ற கருத்துத் திருட்டு கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனவாம்.

நீங்க மட்டும்தான் எழுதுவீங்களோ!

மறுபுறம் இதனால் இன்னொரு அபாயமும் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது. எழுத்தாளர்களின் படைப்புகளைச் செம்மைப்படுத்த உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், எழுத்தாளர்களின் இடத்தையே அபகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏனென்றால், மனித துணையின்றி செயற்கை நுண்ணறிவை மட்டுமே முழுவதுமாகப் பயன்படுத்தி முழுநீளக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை. இத்தகைய வளர்ச்சி(!) எதிர்கால மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறையிலேயே தீவிரமான தாக்கத்தைச் செலுத்தும் சூழலை உருவாகியுள்ளது.

அலைபேசி பயன்பாடு அதிகரித்தற்குப் பிறகு ’எஸ்எம்எஸ் லிங்கோ’ (SMS Lingo) எனப்படும் சுருக்க வடிவில் எழுதும்போக்கு கல்லூரி மாணவர்களிடம் தலைதூக்கிவிட்டதை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, ‘How are you?’ என்பதை ‘How r u?’ என்று தேர்வுத் தாளிலும் எழுதும் பழக்கம் வந்துவிட்டது. இதனால், அடிப்படை மொழி இலக்கணத்தை அறியாத கோடிக்கணக்கான மாணவர்கள் இன்று நம்மைச் சுற்றிலும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

நீ பாதி... நான் பாதி!

தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் கைவரிசை காட்டும் மாணவர்களின் எண்ணிக்கை கனடா நாட்டில் அதீதமாக உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2006-லேயே இதுகுறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், கனடா நாட்டு 11 உயர்கல்வி நிறுவனங்களில் 53 சதவீத மாணவர்கள் தொழில்நுட்பத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. இதில் ’காப்பி’ அடித்து எழுதுவது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவையும் அடங்கும்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் கருத்துத் திருட்டில் ஈடுபடுவது காலங்காலமாக நிகழ்ந்துவரும் பிரச்சினையே. இதில் செயற்கை நுண்ணறிவுடனும் கைகோத்தால் கேட்கவா வேண்டும்? இந்தச் சிக்கல் இப்போது எங்கே போய் நிற்கிறதென்றால், எதுவரை செயற்கை நுண்ணறிவைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்பது குறித்து அறிவு உலகம் விவாதிக்கத் தொடங்கிவிட்டது!

அவற்றில் விவாதிக்கப்படும் சில கருத்துகள் இவை:

1. ஏ.ஐ கொண்டு 49 சதவீதம் ஒரு புத்தகத்தையோ கட்டுரையையோ எழுதிவிட்டு, 51 சதவீதம் மனிதன் எழுதினால் அதை அசல் படைப்பாக ஏற்பதா அல்லது நிராகரிப்பதா?

2. 100 சதவீதம் ஏ.ஐ கொண்டே எழுதப்பட்ட கட்டுரை. ஆனால், அதற்கான கணினி கோடிங்கை மாணவர் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் அவருடைய அறிவும் பயன்பட்டிருக்கிறதே! இதை என்ன செய்ய?

3. ஏ.ஐ உதவியை எவ்வளவு தூரம் பயன்படுத்தினால் அது கல்வி முறைகேடு?

4. ஏ.ஐ விஷயத்தில் கல்வியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பொருந்தும் விதிமுறைகள் மாணவர்களுக்கும் பொருந்துமா?

’மானே... தேனே’ போதும் மதிப்பெண்ணுக்கு!

கல்வியில் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தானியங்கி முறையை வரிந்துகொள்வதற்கும் இடையில் பாராதூர வேறுபாடுள்ளது. இங்கு கல்வி தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் தலையீட்டை நமது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் முறைப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, மாணவர்களின் கல்விச் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய தானியங்கி தொழில்நுட்ப பயன்பாடு பரவலாகி வருகிறது. இதன்வழியாக, பாடக் கருத்தைக் கிரகித்து சுயமாகச் சிந்தித்து எழுதும் இடத்திலிருந்து கணினி கண்டுகொள்ளும் சிறப்புச் சொற்களை (keywords) எழுதித் தேர்வுத் தாளை நிரப்பும் இடத்துக்கு மாணவர்களைக் கடத்துகிறோம். இப்படி ஆங்காங்கே, ’மானே...தேனே...பொன்மானே...’என்பதாகக் கணினி மதிப்பெண் இடும் சொற்களை மட்டுமே தூவ மாணவர்களை நம்மை அறியாமல் பழக்கப்படுத்துகிறோம்.

கரோனா காலத்தில் மாணவர்களை ஆன்லைன் வழிக் கல்வி நோக்கியும் அதீத தொழில்நுட்பப் பயன்பாட்டை நோக்கியும் அரசும் சமூகமும் தள்ளிவிட்டன. இந்நிலையில், திடீரென மாணவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை என்கிறனர் சிலர். அதேநேரத்தில் இதற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கத் தவறினால் எதிர்காலத்தில் கல்விப் புலம் அறமற்றதாக சீரழிந்து போய்விடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in