பெண்ணுரிமைப் போராட்டத்தில் பேசப்படும் கேரளம்!

லேப் டாப் போராட்டம்
லேப் டாப் போராட்டம்
Updated on
4 min read

கடந்த வாரம், திருவனந்தபுரம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர் பத்து பதினைந்து பேர் நடத்திய ஒரு அகிம்சா போராட்டம் இணையத்தில் வைரலானது.

பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் மாணவர்கள் சிலர் அமர்ந்துகொள்ள, அவர்களின் மடிகளில் மாணவிகள் அமர்ந்து கொண்டார்கள். அவ்வளவுதான். ஆனால், இந்த ஒரு காட்சியைக் கொண்ட புகைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டு, அவர்களின் போராட்ட நோக்கம் பொதுபுத்தியைச் சென்றடைந்தது.

அங்கு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை விரும்பாத அப்பகுதியினர், பேருந்து நிழற்குடையில் உள்ள நீண்ட இருக்கையை மாற்றிவிட்டு, ஒருவர் மட்டுமே அமரும்படியான தனித் தனியான மூன்று இருக்கைகளை அமைத்தனர். இது அந்த மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘லேப் டாப் போராட்டம்’ என்று பிரகடனம் செய்யப்பட்ட இந்தப் போராட்டம் கேரளத்தைத் தாண்டியும் பிரபல்யமானது.

இப்படி தன்னுரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடுவதில் கேரளம் எப்போதுமே முன்னுதாரணமாகவே இருந்திருக்கிறது. தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பதற்காக அங்குள்ளவர்கள் எப்போதுமே போராடத் தயங்கியதில்லை என்பதற்கு இதுவரை அங்கு நடந்த பல்வேறு போராட்டங்களே உதாரணங்கள்.

வனிதா மதில் போராட்டம்
வனிதா மதில் போராட்டம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று 2019-ல் ‘வனிதா மதில்’ போராட்டத்தை முன்னெடுத்தார்கள் கேரளத்துப் பெண்கள். காசர்கோடு - திருவனந்தபுரம் சாலையில் சுமார் 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மனித மதில் போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா, பிருந்தா காரத் உள்ளிட்டவர்களும் இதில் கைகோத்து நின்றனர்.

துணிக் கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் மணிக் கணக்கில் நின்றுகொண்டே வேலை செய்வதை யாரும் ஒரு பிரச்சினையாகக் கூட யாரும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், கேரளத்தில் பெண் பணியாளர்கள் இதையும் உரிமைப் பிரச்சினையாக எடுத்துப் போராடி வென்றார்கள்.

அங்குள்ள பிரபல துணிக்கடை ஒன்றின் ஊழியரான அனிதா சற்றுநேரம் சுவரில் சாய்ந்ததற்காக கடை உரிமையாளரால் அவமானப்படுத்தப்பட்டார். அனிதாவுக்கு 100 ரூபாய் சம்பள வெட்டும் செய்தார் உரிமையாளர். இதையெல்லாம் எதிர்த்து அனிதா எழுப்பிய குரலானது கேரளம் தழுவிய போராட்டமாக மாறியது. விளைவாக, பணிப்பெண்கள் உட்கார அனுமதிக்க வேண்டும், ஓய்வு எடுக்க வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என கேரள அரசு 2018 ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது.

முத்தப் போராட்டம்
முத்தப் போராட்டம்

இப்படித்தான், கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் சேலை அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதை எதிர்த்து பெண் ஆசிரியர்கள் அமைதியான முறையில் வாரக்கணக்கில் போராடினார்கள்.

இதனையடுத்து, ‘கேரளம் போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற கட்டாயப்படுத்தக்கூடாது. இதுபோன்ற காலத்துக்கு உதவாத, மாற்றத்தை ஏற்காத சிந்தனைகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஆடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. இதை விமர்சிக்கவோ, தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை’ என்று தெளிவுபடுத்தியது கேரள அரசு.

பொது இடங்களில் முத்தமிடுவதை எதிர்த்தும் கேரளத்தில் சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். அந்த கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக, 2014-ல் ‘அன்பின் முத்தம்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தி அனைவரையும் வாய்பிளக்க வைத்தனர் கேரளத்தும் பெண்கள். கொச்சியில் நடந்த இந்த நூதனப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரம் பேர் கலந்துகொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டினர். இந்தப் போராட்டம் சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்தது தனிக்கதை.

இன்றைக்கு நேற்றல்ல... காலங்கலாமாகவே அநியாயத்தைக் கண்டால் பொங்குவது என்பது கேரளப் பெண்களின் ஜீனிலேயே ஊறிப்போன விஷயம். 1928-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அரசாங்க வேலைகளில் பெண்களைச் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பிரபல அறிஞர் டி.கே.வேலுப்பிள்ளை, திருமணமான பெண்களுக்கு அரசு வேலைகள் தரப்படுவதை எதிர்த்து உரை நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த 24 வயதான அண்ணாசாண்டி என்ற பெண் உடனடியாக மேடையில் ஏறி, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று துணிச்சலுடன் பேசினார். அத்துடன் கேரளம் முழுவதும் சென்று பெண்களுக்கு அரசாங்க வேலை கொடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தார்.

அதற்கும் முன்னால் நடந்த ஒரு போராட்டத்தையும் வரலாறு தனக்குள் பொத்தி வைத்திருக்கிறது. பெண்கள் மானம் காக்கப் போராடிய ‘தோள் சீலைப் போராட்டம்’ தான் அது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொடங்கிய இப்போராட்டம் 40 ஆண்டுகள் நீடித்தது. கேரளத்தின் பெரும் பகுதியையும், இன்றைய கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் அப்போது ஒரு மோசமான கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

தோள் சீலை அணியாத பெண்கள்
தோள் சீலை அணியாத பெண்கள்

கீழ் சாதிப் பெண்கள் தங்களின் மார்பகத்தை மறைக்குமாறு ஆடை எதுவும் அணியக்கூடாது எனவும், அப்படி அணிந்தால் அதற்கு, ‘முலைவரி’ கட்ட வேண்டும் எனவும் அன்றைக்கு சட்டமிருந்தது. முலைவரி கட்டினால், அப்பெண்கள் மற்றவர்கள் முன்னிலையில் மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனாலும் நம்பூதிரிகளுக்கு எதிரே அவர்கள் திறந்த மார்போடுதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதில், நான்கேலி என்ற பெண் குறித்த பதிவு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. கேரளத்தின் சேர்தலாவைச் சேர்ந்த நான்கேலி எனும் ஈழவப் பெண்ணுக்கு மேலாடை அணியாமல் இருப்பது அவமானமாகவும், அருவெறுப்பாகவும் இருந்தது. அதனால் கட்டுப்பாட்டை மீறி மார்பகத்தை மறைத்து மேலாடை அணிந்து கொண்டார். இந்த தகவல் அரசு அதிகாரிகளுக்குச் சென்றது.

முத்தப் போராட்டம்
முத்தப் போராட்டம்

அவர்கள் வந்து அவரிடம் முலைவரி கேட்டனர். சுயமரியாதை மிக்க அந்த ஏழைப்பெண்ணும் கொடுத்தார். கொடுத்தது வரியையில்லை. தன் மார்பகங்களை வாளால் அறுத்து, வாழை இலையில் வைத்துக் கொடுத்துத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அரசாங்கம் அதிர்ந்து போனது. இப்படி பெண் உரிமைக்காக நடந்த இந்த நெடிய போராட்டம் 1859 ஜூலையில் திருவிதாங்கூர் அரசர் போட்ட ஓர் உத்தரவால் முடிவுக்கு வந்தது.

இப்படி, கேரளத்துப் பெண்கள் மறுக்கப்பட்ட தங்களுக்கான உரிமைகள் அனைத்தையும் போராட்டத்தின் மூலமே வென்றெடுத்திருக்கிறார்கள். இப்போது அப்படியான எந்தப் போரட்டமும் இல்லாத நிலையில் கேரள அரசு முற்போக்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருபாலர் பள்ளிகளை தவிர, கேரளத்தில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டிலிருந்து ஆண், பெண் என்றில்லாமல் இந்தப் பள்ளிகள் அனைத்தையும் கலப்புப் பள்ளிகளாக மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது கேரள அரசு.

கேரளத்துப் பெண்கள் மாத்திரமல்ல... கேரள அரசும் இப்போது மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in