இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த எதிர்ப்பு!

கல்வி அமைச்சர் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த எதிர்ப்பு!

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களையும் ஈடுபட வலியுறுத்தும் கல்வி அதிகாரிகளின் செயலுக்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை மீறும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தரப்பில் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், “இந்தத் திட்டத்தில் ஆசிரியர்களைப் பயன்படுத்த மாட்டோம்; முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மட்டுமே பயன்படுத்தப் படுவார்கள்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களுடனான கலந்தாலோசனை கூட்டத்திலும் இதற்கான உறுதியளிக்கப்பட்டது.

இந்தநிலையில், அமைச்சரின் உறுதியளிப்பிற்கு மாறாக, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், ‘ஆசிரியர்களும் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர். அவர்களின் உத்தரவில் ’மாவட்டத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்ட கற்பித்தல் பணிகளில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இரவு 7 மணி வரை இந்த பயிற்சி நடைபெற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெங்கராஜன்
ரெங்கராஜன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன், ‘’அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தான் முதலில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அமைச்சரின் வாய்மொழி உத்தரவின்பேரிலோ அல்லது அவரின் அனுமதியுடனோ தான் அவர் இதைச் செய்திருக்க வேண்டும், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே இதை செய்திருப்பதால் அவரைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களின் கல்வி அலுவலர்களும் தானாகவே இதே உத்தரவை பின்பற்றுவார்கள்” என்று ஆதங்கப்பட்டார்.

’’வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கூடுதலாக மாலைநேர கற்பித்தல் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று கூறுவது ஆசிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாகும். இதனால் ஆசிரியர்களின் கல்வி கற்பித்தல் திறன் குறைந்துவிடவும் வாய்ப்புள்ளது. மேலும், தொடக்கக் கல்வித்துறையில் பெரும்பான்மையாக பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் இரவு 7 மணி வரை மாணவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பணியாற்றி வீடு திரும்ப வேண்டும் என்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும்.

அரசும், உயர்மட்ட அதிகாரிகளும் போடும் உத்தரவுகளும் மாவட்ட அளவிலான அதிகாரிகளின் செயல்பாடுளும் இப்படி மாறுபாடு ஏற்படுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்ற தனது உத்தரவாதத்தை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உணர்த்த வேண்டும்” என்றார் ரெங்கராஜன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in