காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

ஆசிரியர் கூட்டணி நிகழ்ச்சியில் பேசும் முத்து ராமசாமி
ஆசிரியர் கூட்டணி நிகழ்ச்சியில் பேசும் முத்து ராமசாமி

நகர, மாநகர பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் விரைவில் அமல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அதன் மாநில  பொதுச் செயலாளர்  முத்து ராமசாமி  இன்று நாகப்பட்டினம் மாவட்டம்  கீழ்வேளூரில் செய்தியாளர்களை சந்தித்தார்,  அப்போது அவர் கூறியதாவது., 

"கல்வியை  மாநில பட்டியலுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. கடந்த 2009 ம் ஆண்டுக்குப்பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்க வேண்டும்.

உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் உதவித்தொகை மற்றும் மருத்துவ படிப்பில்  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், ஊக்க ஊதிய உயர்வை பழைய நடைமுறையில் வழங்க வேண்டும், முன் அனுமதி இன்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கி, ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்த நான்கு சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கும் பொழுது தமிழகத்திலும் அதை  உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது போல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,  நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைபு படுத்த வேண்டும்" என முத்து ராமசாமி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in