அராஜகத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்: தீர்வு உண்டா?

அராஜகத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்: தீர்வு உண்டா?

திருடிக்கொண்டும்,மது அருந்திக்கொண்டும்,பொய் பேசிக்கொண்டும் ஒரு சிறுவன் திரிந்தான். அவனது தாய் செய்வதறியாது திகைத்தார். ஒரு நாள் அந்த சிறுவனை ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்றார்.

அந்த பெரியவர் விவரம் அறிந்தவர். அந்த சிறுவனிடம் பக்குவமாகப் பேசினார். அவனிடம் மூன்றில் ஏதாவது ஒன்றை விட்டால் போதும் ஆனால் அதனை நேர்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுரை கூறி, வாரம் ஒரு முறை தம்மைச் சந்திக்கவேண்டும் எனவும் கூறினார். அவனும் மூன்றில் பொய் பேசுவதை விட்டுவிடுவதுதான் எளிது எனக் கருதினான். தாம் இனிமேல் பொய்பேசமாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டு திரும்பினான்.

நாட்கள் கடக்கக் கடக்க அவன் வழக்கம்போல் திருடிக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் நாட்களைச் செலவழித்தான். வார இறுதிநாள் வந்தது. பெரியவரைச் சந்திக்கச் சென்றான். அவரிடம் எப்படி மறைப்பது. உண்மையைக் கூறவேண்டியதாயிற்று. பின்னர் படிப்படியாக அவனைத் திருத்துவார். இப்படியாக அந்த கதை போகும். இன்றைய சூழலில் மாணவர்கள் பிரச்சினையின் பின்னணியை முழுமையாக உணர்ந்து ஒவ்வொருவரது பிரச்சனைகளுக்கும் தனித்தனி தீர்வுகளுக்காகத் தேடி படிப்படியாக நெறிப்படுத்துவதே தேவையாக உள்ளது.

பிரச்சினைகள் பலவிதம்

ஆசிரியரை எடுத்தெறிந்து மரியாதைக் குறைவாகப் பேசுதல்; தாக்கத் துணிதல், ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே வகுப்பறையில் கண்டபடி நடனம் ஆடுதல், வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்குதல் இப்படி இன்று மாணவர்களிடையே காணப்படும் இயல்பு மாற்றங்கள் அளவுக்கதிகமாக இருப்பது மறுக்க முடியாததுதான். இதை கண்டு செய்வதறியாது ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் திகைக்கின்றனர். தமிழக அரசும், கல்வித் துறையும் இதைக் கூடுதல் கவனத்தோடு அணுக வேண்டி கோரிக்கைகள் வருவதிலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை. இதை அனைவரின் பார்வையிலிருந்தும் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கசப்பான கடந்த காலம்

முதலில் மாணவர்கள் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவர்கள் தமது வயதுக்கு மீறிய நண்பர்களுடன் பழக வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரைகுறை கல்வி கிடைக்கும் என்ற நோக்கில் பெற்றோரால் சிரமப்பட்டுத் தருவிக்கப்பட்ட அலைபேசி அவர்களுக்குக் கல்விக்குப் பயன்பட்டதை விட சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கும் போக்கையும், அதில் தம்மை வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. வயதுக்கு மீறிய நண்பர்களுடனான பழக்கம். மது,போதைப் பொருட்கள் பயன்பாட்டினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது தொடர்பயன்பாட்டில் தடை வரும்போது அதன் மருத்துவ இயல்பான உயர் ரத்தக் கொதிப்பு போன்றவை ஏற்படுகிறது.

சமூக ஊடக பயன்பாட்டில் செலவிடும் நேரம் குறித்த விழிப்புணர்வின்மையால் வகுப்பு நேரத்திலும் அந்த பயன்பாட்டைத் தொடர்கின்றனர். முந்தைய நிகழ்வைப்போல் தாமும் கரோனா புண்ணியத்தில் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனேயே நகர்கின்றனர். இதையும் மீறி நல்வழிப்படுத்தத் துணியும் ஆசிரியர்களைத் தாக்கத் துணிகின்றனர்.

திசையறியாதோராய் ஆசிரியர்கள்

ஆசிரியர்களைப் பொறுத்தவரை இரண்டாம் பெற்றோராக நடந்துகொள்ளவே பலரும் முயல்கின்றனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இயல்பாகவே சமூகத்தில் பலரும் ’தான் உண்டு, தன் வேலையுண்டு’ என்று இருக்கையில் தான் ஏன் வம்பு தும்புகளில் தலையிடவேண்டும் என நினைப்பதும் கண்கூடு. எல்லாவற்றுக்கும் மேல் மாணவர்களின் நடத்தை மாற்றம் பேச்சுகளைத் தாண்டி தாக்குதல்களில் ஈடுபடத்துணிகையில் அவர்கள் எப்படி முன்வரத் துணிவர்! இவையனைத்தையும் தாண்டி தமது பணி பாடம் நடத்துவது மட்டுமல்ல மாணவர்களை நல்வழிப்படுத்துவது என துணிவோரும் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் மேம்படவேண்டிய சூழலில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை கூடியுள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்னும் தொடர்கதையாயுள்ளது. இதுவும் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குகிறது.

எப்போதும் போல் பெற்றோர்கள்

பெற்றோர்களைப் பொறுத்தவரையில், பொருளாதார ரீதியில் மேம்பட்டிருப்போரும், நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களும் கண் கொத்திப்பாம்பாக கவனித்து ஏதாவது ஒருவகையில் தமது பிள்ளைகளை கரைசேர்க்க முயல்கின்றனர். சாதாரண பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களில் பலருக்கு தம் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்று கவனிக்கக் கூட நேரமில்லாமல், தாமும் தம் குடும்பமும் பிழைத்திருப்பதற்காக வருமானம் ஈட்ட வாழ்க்கைச் சிக்கல்களில் உழன்றுகொண்டிருக்கின்றனர். இவர்களை எவ்வாறு குற்றம் சொல்வது? மேலும் இவர்களிலும் பலர் தமது வாழ்வின் அருமை அறியாது வாழ்வதும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத சோகம்.

களமிறங்கட்டும் கல்வித்துறை

அரசின் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் தொடக்க நடுநிலைப் பள்ளி குழந்தைகளின் கற்றல் இடைவெளியைப் போக்க ’இல்லம் தேடிக் கல்வி’ போன்ற திட்டங்களைத் தீட்டினர். அதன் பயன்பாடு பெருமளவில் வெளிப்படவே தொடங்கியுள்ளது. ஆனால், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை கற்றல் கற்பித்தல், திருப்புதல் தேர்வு, பொதுத்தேர்வு என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் குறித்து ஏதும் திட்டம் தீட்டப்பட்டதா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீட்டப்பட்டிருந்தால் இன்னும் முனைப்பாக செயல்பாட்டுக்கு அதுவரவேண்டும். இல்லையேல் ஒரு போர்க்கால அடிப்படையில் அது தீட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரவேண்டும். இன்றைய அரசு இதைக் கவனத்தில் கொண்டு செயல்திட்டம் தீட்டுவதில் எந்த சுணக்கமும் காட்டாது என்றே நம்புவோம்.

தீர்வின் திசை எது?

ஆனால், இன்றைக்கு ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, அரசோ தனியாகச் செயல்பட்டு இதை சீர் செய்ய இயலாது. இந்தப் பிரச்சினையை தனிப்பட்ட மாணவன், அவனது சமூக பின்புலம், குடும்பச்சூழல் என்று பார்க்கத் தொடங்கி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் செயலில் இறங்குவது பயனளிக்காது. ஒரு ஒருங்கிணைந்த வழிமுறைக்கான தேவை உள்ளதாகவே பார்க்கவேண்டும். குறிப்பாக மாணவர்களை நெறிப்படுத்துதல் ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அவர்களுக்கு நெருக்கமான மொழியில் பேசி அவர்களை நல்வழிப்படுத்த முயலவேண்டும். பின்வருவனவற்றைப் பரிசீலிக்கலாம்.

• பொதுத்தேர்வு குறித்த அச்சத்துடன் இருக்கும் ஆசிரியர்கள் செய்வதறியாது உள்ளனர். அரசு அவர்களது பதற்றத்தைக் குறைக்கும் வழிவகை காணவேண்டும். இது கூடுதல் நிம்மதியுடன் ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நேரத்தை அதிகரிக்கும். பொதுத்தேர்வை நடத்தி ஆகவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பொதுத்தேர்வில்லையேல் நுழைவுத் தேர்வுகள் மேலும் கெட்டிப்படும்.

• பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்கள், காவல்துறை அலுவலர்கள், பெற்றோர்கள் என ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து வாரத்தில் சில நாட்கள் சில மணிநேரம் ஒதுக்கி அனைத்து மாணவர்களுடனும் தனித்தனியாக உரையாடி அவர்களது மனவெழுச்சியை அறிந்துகொள்ள முயலலாம். தேவைப்படுவோர்க்கு மனநல, மருத்துவ கலந்தாலோசனைக்கு ஏற்பாடு ரகசியமாகச் செய்துதரலாம்.

• ஒவ்வொரு மாணவனுக்குமுள்ள தனித்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக அவர்களது நடனம், பேச்சு, பலகுரல் போன்றவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை கிராம ஊராட்சி தொடங்கிப் பல கட்டங்களிலும் நடத்தலாம். இதனை நடத்துவதன் மூலம் தாம் கவனிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும் அவர்கள் நல்வழிக்குத் திரும்ப முயற்சிப்பர். இது போன்ற நிகழ்வுகளுக்கான ஒத்திகை, கூடித் திட்டமிடல் போன்றவை இவர்களின் நடத்தைகளில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர உதவும். இது சிறு சிறு அளவில் திட்டமிட்டுச் செய்யப்படலாம். அரசு சாரா நிறுவனங்கள் இதில் கூடுதல் முனைப்பு நிச்சயம் காட்டவேண்டும்.

• முடிதிருத்தும் நிலையங்களில் பணியாற்றுவோர்க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிப் பின்பற்றச் செய்யலாம்.

• காவல்துறை கூடுதல் கண்காணிப்போடு செயல்பட்டு போதைப் பொருட்களின் நடமாட்டதைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

மாணவர்களைத் திசைதிருப்பும் சக்திகள் முழுநேரத் தொழிலாக இதைக் குறிப்பிட்ட காலம் செய்துமுடித்துள்ளது. அவர்களைத் நெறிப்படுத்தும் பணியை சமூகம் சிறிது காலத்திற்காவது முழுநேரமாக ஆற்றவேண்டியது அவசர அவசியம்.

கட்டுரையாளர் கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர். தொடர்புக்கு:

Related Stories

No stories found.