அதிவேகமாய் பகிரப்படும் வீடியோக்கள்: அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை முடக்கும் சதியா?

அதிவேகமாய் பகிரப்படும் வீடியோக்கள்: 
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை முடக்கும் சதியா?

தமிழகத்தில் தற்போது அரசுப்பள்ளி மாணவர்கள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எந்த வீடியோ பதிவிட்டாலும் அது வைரலாகிவிடுகிறது. அதில் ஒருசில உண்மையான வீடியோக்கள் இருந்தாலும் செயற்கையாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்களும் அதன் ஊடே உலாவருகின்றன. ஒரு வகுப்பறையில் மாணவிகள் ஆங்காங்கே பெஞ்சில் அமர்ந்திருக்க, அவர்களின் மடியில் மாணவர்கள் படுத்திருக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் நடக்காத ஒன்று. ஆசிரியரை அடிக்கப் பாயும், ஆசிரியையை வகுப்பில் வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடும் நிஜ வீடியோக்களுக்கு மத்தியில் இதுபோன்ற வீடியோக்கள் பலவும் சுற்றி வருவது குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர்.

கரோனா கால கற்றல் இடைவெளியும், கையிலிருக்கும் அலைபேசி தரவிறக்கங்களும் பள்ளிப் பிள்ளைகள் சிலரை ஒழுக்கக்கேடான மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வைத்திருப்பதை மறுப்பதற்கில்லை. இளைய சமுதாயம் எதைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கிக் கேட்கின்றன அந்த காட்சிகள். மூர்க்கமான அந்த சில மாணவர்களை இரண்டாம் பெற்றோராக இருந்து ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, இப்படி தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் குறித்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்படுவதன் பின்னணி குறித்து பலத்த சந்தேகமும் எழுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகளின் நற்பெயரைக் கெடுக்க ஏதோ சதி நடக்கிறது என்று ஆசிரியர்களே அதிர்ச்சியான தகவலைச் சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்தால்தான் தங்களுக்கு கவுரவம் என்று நினைத்த பலரும், அதாவது, படித்து நல்ல வேலையில் உள்ள மேல்தட்டு மக்களும், அரசு அதிகாரிகளும்கூட தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படி அரசுப்பள்ளிகளை நோக்கி மக்கள் ஆச்சரியமளிக்கும் விதமாக பெருமளவில் திரும்பி வருவது பெரும்பாலான இடங்களில் தனியார் பள்ளிகளின் வருமானத்தைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது. இப்படியான ஆரோக்கியமான சூழலில், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று கட்டமைக்கும் விதமாக அந்த மாணவர்கள் குறித்து சித்தரிக்கப்பட்ட வீடியோக்களையும் திட்டமிட்டு வைரலாக்குகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது என ஆதங்கப்படுகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுசெயலாளரான தாஸ் விரிவாகப் பேசினார். ‘’அரசுப் பள்ளிகளில் இதுபோன்று நடக்கவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நடக்கிறது. இது இப்போது மட்டுமல்ல, எப்போதும் ஒன்றிரண்டு இடங்களில் நடப்பது வழக்கம் தான். அங்கெல்லாம் அந்த வகுப்பாசிரியரோ, அல்லது பள்ளியின் தலைமை ஆசிரியரோ அந்த மாணவனைக் கண்டித்து விடுவார்கள். அல்லது அவனது பெற்றோர்களிடம் பேசி அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவார்கள். அது அந்தப்பள்ளியைத் தாண்டி பொதுவெளிக்கு வரவே வராது.

தற்போது கரோனா கால இடைவெளியால் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதும், அதன் விளைவாக மாணவர்களின் நெறிபிறழ்ந்த நடத்தைகள் அதிகரிப்பதும் உண்மைதான். ஆனால், அதையெல்லாம் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் வேண்டுமா? இதில் என்ன சமூக அக்கறை இருக்கிறது என்று அதைப் பரப்புகிறார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. சம்பந்தப்பட்ட மாணவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோரோடு முடிந்து போகக்கூடிய விஷயம் இது. இதை தினம் ஒன்றாக வெளியிடுவதும், அதை வைரலாக பரப்புவதிலும் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இதில் பெரிய தனியார் பள்ளிகளின் பின்புலம் இருக்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

‘நீட்’ தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீடு, மற்ற உயர் கல்வி படிப்புகளிலும் இட ஒதுக்கீடு, கல்விக்கட்டணத்தை அரசே ஏற்பது உட்பட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நலன்கள் அதிகம் இருப்பதால் மாணவர்களின் சேர்க்கை கடந்த இரண்டாண்டு களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இப்படிப்பட்ட வீடியோக்கள் அதிகமாக பரவிக் கொண்டிருக்கின்றன. உயர் கல்வியில் இடம் கிடைக்கும் என்பதை வைத்தே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டிருந்த சில தனியார் பள்ளிகளின் கட்டமைப்புக்கள் இதனால் சிதைந்து போயுள்ளன. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் நடக்கும் சம்பவங்களை மிகைப்படுத்தியும் இல்லாததைச் சித்தரித்தும் பரப்புகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தாஸ்
தாஸ்

இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க அஞ்சுவார்கள். காசு போனாலும் பரவாயில்லை என்று கட்டுப்பாடுகள் அதிகமுள்ள தனியார் பள்ளிகளை நோக்கிப் போவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் பலியாகிவிடக் கூடாது. மாணவர்களின் நெறிபிறழ்ந்த நடத்தைகளை அமைச்சர் கூறியவாறு நாமே அவர்களின் பெற்றோர் துணை கொண்டு கண்டிக்க வேண்டும். அவர்களின் உளவியல் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என்றார் தாஸ்.

அரசுப்பள்ளி ஆசிரியரும், கவிஞருமான சுகிர்தராணி இதுகுறித்து பேசுகையில், ‘’பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் மாணவர்கள் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடியோக்கள் ஊடகங்களில் சுற்றுகின்றன. அதற்கு கரோனா காலச்சூழல்தான் காரணம் என்றால் அது அரசுப்பள்ளிகள் மட்டும் நடப்பது ஏன்? தனியார் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதில்லையா? அல்லது நடந்தாலும் அவை ஏன் வெளியே தெரிவதில்லை? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுபோன்ற சிக்கல்களை களைய, ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களுக்குப் பெற்றோர், சமூகம், அரசாங்கம் என அனைவருடைய கூட்டுப் பொறுப்பும் இருக்கிறது. அதனைப் புறந்தள்ளி, எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களைப் பொறுப்பாக்கக் கூடாது.

சுகிர்தராணி
சுகிர்தராணி

பள்ளிக்கு ஏன் வரவில்லை, ஏன் படிக்கவில்லை, ஏன் சீருடை அணியவில்லை, ஏன் முடிவெட்டவில்லை, ஏன் எழுதவில்லை, ஏன் ரெகார்ட் நோட்டு வைக்கவில்லை, ஏன் தாமதமாக வருகிறாய் என எதையும் மாணவர்களிடம் கேட்காமல் நூறு சதவீத தேர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும், நூறு சதவீதம் மாணவர்களின் வருகை இருந்தேயாக வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும். அதற்காக ஆசிரியர்களை கடுமையாக வருத்துவதால் என்ன பயன்?

அலைபேசியை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவரக்கூடாது என்கிறார்கள். மீறிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதையும் சொல்லவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைப் பரிசோதிக்கக் கூடாது, எதையும் விசாரிக்கக் கூடாது என மேலிடத்து அறிவிக்கப்படாத உத்தரவு இருக்கிறது. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் என்ன முடிவு எடுப்பது?

மாணவர்களை ஏதாவது கேட்டு, விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் அந்த ஆசிரியரே முழுப் பொறுப்பாக்கப்படுகிறார். அப்படி இருக்கும்போது ஆசிரியர்கள் எப்படித்தான் கண்டிக்க முடியும்? இதையெல்லாம் முதலில் சரிசெய்ய வேண்டும்.

அத்துடன் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளைப் பிரித்து, கல்லூரிகளில் இணைத்து ஜூனியர் காலேஜ் கொண்டுவர வேண்டும். மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளை இரண்டாகப் பிரிப்பதும் முக்கியம்.

மாணவர்கள் வயது அப்படி. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள்தான் அவர்களைத் திருத்த வேண்டும் என்று சொல்பவர்கள், உங்கள் பிள்ளைகளை அதே அன்புடன் பேசித் திருத்த உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்” என்றார்.

“பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும் அதேசமயம், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வீடியோ எடுத்து வேகமாக பகிர்வது யார்? அப்படி நடக்க மாணவர்கள் வெளியிலிருந்து தூண்டப்படுகிறார்களா? என்பதையெல்லாம் ஆராய வேண்டியதும் முக்கியம். எனவே, இந்தப் பிரச்சினையின் ஆணி வேரைக் கண்டுபிடிக்க உண்மையைக் கண்டறியும் குழுக்களை தமிழக அரசு அமைப்பது நல்லது. அதுமட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சித்தரித்தும் வேறு நோக்கங்களுடனும் சமூகவலைதளங்களில் பரப்புகிறவர்களை சைபர் க்ரைம் போலீஸார் மூலம் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கல் சமூக அக்கறை கொண்டவர்கள்.

இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால ஆசிரியர்கள். நேற்றைய மாணவர்கள் தான் இன்றைய ஆசிரியர்கள். இதை இருதரப்பும் சரியாகப் புரிந்துகொண்டாலே இதுபோன்ற சிக்கல்கள் அதுவாகவே அடங்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in