போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் - மிக அபாயகரமான சூழ்நிலையில் தமிழகம்: சசிகலா எச்சரிக்கை

சசிகலா
சசிகலா

நம் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருட்களின் நடமாட்டத்தை திமுக தலைமையிலான அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நம் இனத்தையே அழிக்கக்கூடிய வகையில் இளம் சமுதாயத்தினரை குறிவைத்து நடக்கின்ற போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பள்ளியில் படிக்கும் மாணவச்செல்வங்களே போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டு இருப்பதாக வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக சென்னை , கோவை போன்ற மாநகரங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக செய்திகள் வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

மேலும், சென்னையில் ஆன்லைனில் கஞ்சா ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்வதாக செய்திகள் வருகின்றன. அதேபோன்று, உணவு டெலிவரி செய்வதுபோல் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வதாகவும், தற்போது சாக்லேட் பபுள் கம், மேற்புறத்தில் இனிப்பு தடவப்பட்ட மாத்திரைகள் போன்று பல்வேறு வடிவங்களில் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான போதை பொருட்கள் விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்துறையை சேர்ந்தவர்களே இதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் கூட இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், வகுப்பறை உள்ளேயே தற்போது போதை பொருட்கள் வந்து விட்டதாகவும், இதன் காரணமாக சில தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட மாணவ, மாணவியர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்து இருப்பதாகவும் வரும் தகவல்களை பார்க்கும்போது, தமிழகம் தற்பொழுது மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக தெரியவருகிறது. இது போன்ற செய்திகள் தமிழக அரசின் கவனத்திற்கு வருகிறதா? இவற்றை தமிழக அரசு கண்காணிக்கிறதா? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? இவற்றையெல்லாம் திமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? என்றும் தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளிகளிலும், எத்தனை மாணவ மாணவியர்கள் இந்த குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இந்த பிரச்சினையை மறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இவற்றையெல்லாம் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து பார்த்தாலே போதும், எந்த அளவுக்கு தமிழகத்தில் போதை பொருட்களின் ஆதிக்கம் தற்போது இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

மேலும், பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. ஒவ்வொரு மாணவ, மாணவியர்களின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்கள் ஏதாவது தவறான பாதையில் செல்கிறார்களா? என்பதை கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும். மேலும், பள்ளிகளின் நிர்வாகத்தினரும், மாணாக்கர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நல்வழிப்படுத்திடவும் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.அதேபோன்று, ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகத்தினரும் அவர்களுடைய பள்ளிகளின் வாயில்களில் சரியான ஆட்களை நிறுத்தி, மாணவ-மாணவியர்களை நன்றாக சோதித்து பள்ளிகளுக்குள் அனுமதிக்கிறார்களா? . என்பதையும் தமிழக காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி கவனமுடன் செயல்படவேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதேபோன்று, மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டு இதை உடனே சரிசெய்யவேண்டிய பொறுப்பு அதிகம் இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் எவ்வாறு பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளை ஆய்வு செய்யும் நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோன்று இன்றைய தேவையின் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதை பொருட்களின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய புதிய செயல் திட்டங்களை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கிடவேண்டும். மேலும், மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் குறும்படங்களை தயார் செய்து அரசு மற்றும் தனியார் என்று வேற்றுமை பார்க்காமல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி, அதை போட்டு காண்பித்து, மாணவ-மாணவியர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும்.

தமிழக காவல்துறையினர் யாருடைய புற அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக செயலாற்றி, இது போன்ற சட்டவிரோத செயல்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் நிலவும் போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதை பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். இது வருங்கால நம் சந்ததியினருக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்த போராடி வரும் வேளையில், போதை பொருட்களின் ஆதிக்கத்தால் மிகவும் கலக்கமடைந்து இருக்கிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு, நம் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருட்களின் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். ஜெயலலிதா எடுத்த கடுமையான நடவடிக்கைகளைப் போன்று இந்த ஆட்சியாளர்கள் கடைபிடித்தால்தான் அது தமிழக மக்களுக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது. எனவே, தமிழகம் போதை பொருட்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in