ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட மாணவன்... அரசு பள்ளியில் நெகிழ வைத்த சம்பவம்!

அரசுப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியரான மாணவர்
அரசுப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியரான மாணவர்
Updated on
2 min read

பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் தர்ஷனை தலைமை ஆசிரியர் பாராட்டி ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கையில் அமர வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 276 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2வது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் பள்ளி மாணவர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார்.

முதல் மதிப்பெண் எடுத்து தலைமை ஆசிரியர் ஆன மாணவர் தர்ஷன்
முதல் மதிப்பெண் எடுத்து தலைமை ஆசிரியர் ஆன மாணவர் தர்ஷன்

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் 2வது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும், தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர். பின்னர் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷனுக்கு சால்வை அணிவித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து, இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து இன்று ஒரு நாள் மட்டும் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.

2ம் மதிப்பெண் எடுத்து உதவி தலைமை ஆசிரியரான மாணவர் கவின்ராஜ்
2ம் மதிப்பெண் எடுத்து உதவி தலைமை ஆசிரியரான மாணவர் கவின்ராஜ்

இதுகுறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியரான தர்ஷன் கூறுகையில், ”பள்ளி மாணவ மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் கூறியது எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன்.

அதனால் எனக்கு இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற அரசு பள்ளிகளிலும் நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே மேலும் கல்வியை கற்க ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் “ என்றார்.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி

பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ”கடந்தாண்டு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதை விட நடப்பாண்டில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கத்தை அளித்து கல்வியை கற்பித்து வருகிறோம். மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியைக் கற்று வருகின்றனர்.” என்றார். இந்த சம்பவம் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in