தகிக்கும் வகுப்பறைகள்: பிரச்சினைகளும் தீர்வுகளும்!

தகிக்கும் வகுப்பறைகள்: பிரச்சினைகளும் தீர்வுகளும்!
’தி இந்து’ கோப்புப்படம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பிரச்சனையால் இந்த பேச்சு இல்லை. 2019-ல் மிகக் கடுமையான வெயிலிருந்ததால் பள்ளிகள் கோடை விடுமுறைக்காக விரைவிலேயே மூடப்பட்டன. மீண்டும் இந்த ஆண்டு அந்த பேச்சு தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. கரோனாவின் லீலை, வெயில் பற்றிய பேச்சை அடக்கி வைத்திருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருக்கிறோம். ஆனால், அதற்குள் தாங்கமுடியாத வெயில்.

2022 பிப்ரவரியில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன... அதற்குள் மூடுவதா என தோன்றலாம். கற்றல் ஓரளவிற்கேனும் இனிமையான சூழலில் நடைபெற வேண்டும். வகுப்பறைகளுக்குள் குழந்தைகளால் அமரமுடியவில்லை. எல்லா வகுப்பிலும் மின்விசிறிகள் இல்லை, இருந்தாலும் அனலை கக்குகின்றன. மின்வெட்டு பிரச்சினை வேறு தலைதூக்கத் தொடங்கிவிட்டது. ஆசிரியர்களாலேயே சமாளிக்க முடியவில்லை.

இதில் குழந்தைகள் என்ன செய்வார்கள். தற்காலிகமாக சில ஏற்பாடுகளைச் செய்ய இயலும். ஆனாலும் வெயிலின் தாக்கம் வரும் வாரங்களில் இன்னும் கடுமையாக இருக்கும். பிள்ளைகள் தாங்கிக்கொள்வார்களா என தெரியவில்லை. மே மாதத்தின் இரண்டாம் வாரம் வரையில் பள்ளிகள் இயங்குவது போல அட்டவணை உள்ளது. தேர்வுகள் மே இறுதி வரையில். தாங்குவார்களா பிள்ளைகள்?

பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் 2021-22 கல்வி ஆண்டினை முடித்துக்கொண்டுள்ளனர். வழக்கமாகத் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின்னர் மீண்டும் இரண்டு வாரங்கள் அடுத்த கல்வி ஆண்டினை தொடங்குவார்கள். இந்த ஆண்டு சில பள்ளிகள் நேராக ஜூனில் பள்ளி என அறிவித்துவிட்டன. இன்னும் சிலர் முடிவெடுக்கவில்லை.

குறைந்தபட்சம் தொடக்க (1-5) வகுப்புகளுக்கு விரைவில் இந்த கல்வி ஆண்டை முடித்துவிட்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும். ஆனால், பள்ளி ஆய்விற்கு வருபவர்கள் 1, 2 வகுப்பு குழந்தைகள் இன்னும் எழுத்தைக்கூட கற்கவில்லை என்பதால் இன்னும் அவர்களைப் பழக்குங்கள் என சத்தம்போடுகின்றார்களாம். அதெப்படி 1, 2 வகுப்புகளுக்கு உடனே விடுமுறை கொடுப்பது என்ற சிக்கலும் எழுந்துள்ளது என்கின்றனர்.

அனைவருக்கும் ஒரே அடியாக இல்லை என்றாலும் முதல்கட்டமாக 1-3 அடுத்து 4-5, அடுத்து 6-8 வகுப்புகளுக்கு என்று விடுமுறை அளிக்கலாம். மே முதல் வாரத்தில் இறுதித்தேர்வுகள் நடைபெறுவதாக உள்ளன. ஆனால், அதுவரையில் குழந்தைகளால் தாங்க இயலாது.

காலை 9.30க்கு பள்ளிகள் என்பதனை கொஞ்சம் மாற்றி இன்னும் விரைவாகப் பள்ளிகளை திறக்க இயலுமா என்றும் யோசிக்கலாம். வட மாநிலங்களில் காலை 7.00 - 10.30 அல்லது 11 வரையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கும். சீக்கிரம் தயாராவது, குழந்தைகளை விடுவது என்று எக்கச்சக்க சிக்கல்களை உண்டு செய்யும்.

இயங்கும் நாட்களில்...

தண்ணீர் சிக்கல் பெரும் சிக்கல்

போதுமான குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பல பள்ளிகளில் இது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. வீட்டிலிருந்து கொண்டு வரும் பாட்டில் தண்ணீர் கட்டாயம் போதாது. அதில் உள் சிக்கலும் இருக்கிறது. நிறைய நீர் குடித்தால் கழிவறைக்கு அடிக்கடி போக வேண்டி வரும், அதனால் குடிநீரையும் குடிப்பதில்லை. இவ்வளவு அதிகமான வெயிலுக்கு நிறைய நீராகாரம் தேவை.

இடநெருக்கடி

நிறைய அரசுப் பள்ளிகளில் வழக்கத்தைவிட அதிக குழந்தைகள் (கரோனா பிரச்சினையால்) சேர்ந்துள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே உள்ள குறைவான வகுப்பறைகளுக்குள் எல்லோரையும் நெருக்கி உட்கார வைக்க வேண்டியும் இருக்கிறது. இயங்கும் நாட்கள் வரையிலும் கூட சுழற்சி முறையில் வகுப்பறைகளை நடத்தலாம்.

தோல் நோய்கள்

புழுக்கமான வகுப்பறைகள் மற்றும் வெயிலினால் குழந்தைகள் பலருக்கும் தோல் நோய் தொடங்கிவிட்டது. வீட்டிலிருந்தாலும் இது பற்றிய கூடுதல் கவனமும் அக்கறையும் தேவை.

விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம்?

* விடுமுறை நாட்களில் வாசிப்பை ஊக்கப்படுத்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம். வாரம் ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் பள்ளிக்கு வந்து நூல்களை மாற்றி எடுத்துச்செல்லும் ஏற்பாட்டினை செய்யலாம்.

* கல்வித்தொலைக்காட்சியை இன்னும் சிறப்பாக இந்த கோடை விடுமுறையில் பயன்படுத்தலாம். பாடம் தாண்டி சில செயல்பாடுகளைச் செயல்படுத்தலாம். கதை வாசிப்பு, குழந்தைகள் புத்தக வாசிப்பு, விஞ்ஞானிகளை சந்திக்கும் பேட்டிகள், Concept விளக்கங்கள், புதிய விளையாட்டுகள் அறிமுகம், பாடல்கள் அறிமுகம் என பல்சுவையாக நிகழ்வுகளில் ஈடுபடுத்தலாம். தொலைக்காட்சிகளில் இருந்தாலும் பலதரப்பட்ட கலைகளை அறிமுகம் செய்ய முயலலாம்.

இதற்குப் பள்ளியின் அளவிலிருந்தும் குரல்கள் வரவேண்டும், சிக்கல்களை தெரியப்படுத்த வேண்டும். ஆனால், ஏற்கனவே இருக்கும் சுமைகளால் மேலும் புழுங்குகின்றனர். வெயில் தாக்கத்தினால் பள்ளிகளுக்குள் விபரீதங்கள் ஏதேனும் நிகழும் முன்னர் நடவடிக்கை எடுத்தல் நலம்.

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்’பூ’’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in