மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

போதையில் ஆட்டம்... மாணவிகளிடம் ஆபாச பேச்சு... அரசு பள்ளி ஆசிரியர் தொல்லை!

ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதாக  உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் திடீர் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள் பிரகாசம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசி வருவதாகவும்,   பணி நேரத்தில் போதையில் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்கெனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று  பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலரை  அருள் பிரகாசம் தகாத வார்த்தைகளால்  திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசத்தை  பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட கல்வி அதிகாரி வந்து தங்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிபட்டி போலீஸார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in