எகிறும் ஆசிரியர், மாணவர் கரோனா தொற்று எண்ணிக்கை கல்வியாளர்கள் சொல்வது என்ன?

எகிறும் ஆசிரியர், மாணவர் கரோனா தொற்று எண்ணிக்கை கல்வியாளர்கள் சொல்வது என்ன?

கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் கடந்த 1-ம் தேதி முதல் திறக்கப்பட்டன. 9, 10, 12 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. கரோனா பரவல், மாணவர்களின் உடல்நிலை போன்றவற்றை ஆய்வு செய்த பிறகு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

இந்நிலையில், தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. திருப்பூர் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 2 ஆசிரியர்களுக்கும், பொள்ளாச்சியில் 4 மாணவர்களுக்கும் தொற்று என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதைப் பரபரப்பு செய்தியாக்கிப் பள்ளிகளை மூடுவதா? அல்லது நிதானமாகக் கையாண்டு தீர்வு காண்பதா? என்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் காமதேனு சார்பில் கேட்டோம். அவர் கூறியதாவது:-

பள்ளி திறப்பதற்கு முந்தைய நாள்கூட சென்னையில் 200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 200-க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் எல்லா வயதினரும் அடக்கம். கிட்டத்தட்ட 10, 15 மாவட்டங்களில் இப்படி தொற்று அதிகமாக இருப்பதைப் பள்ளி திறப்பதற்கு முன்பு கூட நாம் பார்த்தோம். பள்ளிக்கூடம் திறக்கவில்லை என்ற காரணத்துக்காக, குழந்தைகள் தெருவில் கும்பலாக நடக்காமல் இருந்தார்களா? விளையாடாமல் இருந்தார்களா? பள்ளிக்கூடம் திறக்கவில்லை என்ற காரணத்திற்காக பெற்றோர்கள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகாமல் இருந்தார்களா? பள்ளிகளே பாதுகாப்பு கருதித் திறக்கவில்லை நாம் குழந்தைகளை பெருங்கடைகளுக்கு அழைத்துப் போகக்கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தார்களா? ஆக இங்கெல்லாம் குழந்தைகள் போயிருக்கிறார்கள். ஆக ஒப்பீட்டளவில் பார்த்தீர்கள் என்றால், பள்ளிகள் தான் குழந்தைகளுக்கு மிகமிகப் பாதுகாப்பான இடம். அங்கே குழந்தைகளையும், ஆசிரியர்களையும் தவிர யாரும் இருக்கப்போவதில்லை. அதிலும் ஆசிரியர்கள் அனைவரும் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். குழந்தைகளைப் பொறுத்தவரையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரைதான் என்பதால், முடிந்த அளவுக்குத் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனவே, இப்போது ஏற்படுகிற தொற்று பயப்படக்கூடியதல்ல. பள்ளிகள் திறக்காவிட்டாலும் கூட இதேபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படத்தானே செய்யும்? கிட்டத்தட்ட உங்களுக்கு பிளஸ்2 எழுதுகிற மாணவர்கள் மட்டும் 10 லட்சம் பேர். இதேபோல 11, 10, 9-ம் வகுப்பு மாணவர்களையும் சேர்த்தால், இப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 40 லட்சம். இந்த 40 லட்சம் பேரில் மொத்தம் எத்தனை பேருக்கு பாதிப்பு என்று கணக்கெடுத்தால், ரொம்ப ரொம்ப சொற்பமான பேருக்குத்தான் தொற்று உறுதியாகியிருக்கிறது. எனவே, தேவையற்ற பதற்றம் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துமவனையுடன் இணைந்து கண்காணிக்கலாம். குழந்தைகளுக்கு சின்ன சின்ன அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை சிகிச்சைக்கோ, பரிசோதனைக்கோ அழைத்துப் போகலாம். உங்கள் வீட்டில் இன்னும் யார் யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லை என்ற விவரத்தை குழந்தைகள் மூலமே கேட்டறிந்து, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தடுப்பூசி போடுவது போன்ற பணிகளில் கூடுதல் அக்கறை காட்டலாம் "என்றார்.

தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு பள்ளி திறப்பது குறித்து உங்கள் கருத்தென்ன என்று அவரிடம் கேட்டபோது, "ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அதனால், அந்தக் கிராமங்களில் கரோனா பாதிப்பு இல்லாதபோது பள்ளிக்கு குழந்தைகள் வருவதற்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை. பள்ளிக்குச் சென்றால்தான் அந்தக் குழந்தைகள் சத்துணவை முழுமையாகச் சாப்பிட முடியும். ஆரோக்கியத்தைப் பேண முடியும். வீட்டில் உள்ளவர்களுக்கு மருத்துவ வசதி தேவைப்படுகிறது, வீட்டில் சிலர் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பது மாதிரியான பிரச்சினைகளை குழந்தைகள் சொன்னால், அதற்கான தீர்வையும் கொடுக்க முடியும். இப்படித்தான் நாம் யோசிக்க வேண்டுமே தவிர, பள்ளிகளை மூடிவைத்திருப்பதால் எந்த லாபமும் கிடையாது.

ஒரு பள்ளியில் கரோனா தொற்று வருகிறது என்றால், ஆசிரி யர்களுக்கு மிரட்டல் விடுக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அங்கு என்ன பிரச்சினை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர், தாசில்தார், மாவட்ட சுகாதார அதிகாரியை எந்த நேரத்திலும் அணுகலாம். எந்தப் பிரச்சினை வந்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடன் இந்த அரசும், சமூகமும் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் உங்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்த மாட்டோம். எல்லோரும் சேர்ந்து கரோனாவை எதிர்கொள்வோம். எனவே, பாதுகாப்பு வழிமுறைகள், எச்சரிகைகளுடன் நாங்கள் சொல்கிறபடி நீங்கள் நம்பிக்கையுடன் பள்ளியை நடத்துங்க என்று நம்பிக்கை தரணும். அதேபோல குழந்தைகளையும் பதற்றப்பட வைக்காதீங்க என்று அறிவுரை தரணும். ஒரு குழந்தையை மருத்துவனைக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்தால் கூட, அவர்களின் பெற்றோர்களிடம் ஒன்றுமில்லை. சின்ன அறிகுறி தென்பட்டதால் பிள்ளையை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் போய்ப் பார்க்கலாம் என்று பொறுமையாக, நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டும். அய்யோ, உங்க குழந்தைக்கு இப்படி ஆகிடுச்சி என்று ஆசிரியரே பதற்றப்பட்டால், அந்தப் பெற்றோர் மட்டும் வர மாட்டார். மற்ற குழந்தைகளின் பெற்றோரும் பதறிக்கொண்டு பள்ளிக்கு வருவார்கள். எனவே, ஆசிரியர்களுக்கு இதுகுறித்து தெளிவாகச் சொல்லித்தர வேண்டும்.

புதிதாக பள்ளிக்கு வருகிற சிறு பிள்ளைகளை உடனே, ஆனா, ஆவன்னா சொல்லு, ஒண்ணு ரெண்டு சொல்லு என்று படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. கை, காலை நீட்டி சின்னச் சின்ன உடற்பயிற்சி செய்யச் சொல்லலாம். கையில் பந்து கொடுத்து தரையில் தட்டச் சொல்லி விளையாட விடலாம். கதை சொல்லலாம். பாடச் சொல்லலாம். மனதை இலகுவாக்க வேண்டும். அதன் பிறகு குழந்தையே கேட்க ஆரம்பித்துவிடும். ஏன் டீச்சர் பாடம் நடத்த மாட்டேங்குறீங்க என்று. அப்படி குழந்தைகளிடம் படிக்கிற ஆர்வத்தை தூண்டிவிட்டால், அவர்களே படிப்பார்கள். அதைவிட்டுவிட்டு ஏற்கெனவே 2 மாதம் வீணாகிவிட்டது. பாடம் நடத்தவோ, படிக்கவோ நேரமேயில்லை என்று அவர்களைப் பதற்றப்படுத்தக்கூடாது"

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.