விடைத்தாள் திருத்த வராதவர்கள் மீது நடவடிக்கை பாயும்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை


விடைத்தாள் திருத்த வராதவர்கள் மீது நடவடிக்கை பாயும்:  பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

தமிழக பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் எனப் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதிவரை நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 1-ம் முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் போதிய வசதிகள் இல்லை எனக் குற்றம்சாட்டி பல இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சொல்லும் இடத்திற்கு விடைத்தாள் திருத்தும் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த பணி தொய்வடைந்துள்ளது.

இதுகுறித்து விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள மையத்தில் ஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் இந்த முறை வழக்கமாகச் செய்யும் இடங்கள் ஒதுக்கப்படாததால், வெகுதொலைவு சென்றுதான் பணி செய்ய வேண்டியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மனு கொடுத்திருந்தும், எங்கள் மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் நாங்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவிக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களால் திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in