தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?

அரசு உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?

'பள்ளி செல்ல விரும்பு... பாடம் எல்லாம் கரும்பு' என ஒரு காலத்தில் குழந்தைகள் சத்தமாக பாடியது ஞாபகமிருக்கிறதா?. அந்தப் பாடல் பள்ளிகளில் மட்டுமின்றி தெருக்கள் முழுவதும் எதிரொலித்தது.

ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் இந்த சந்தோஷ மனநிலை இல்லை. ஏனெனில், அவர்களது கல்வி முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக, இயல்பு நிலை தொலைந்து சமநிலை தவறும்போது சட்டென அவர்கள் தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் தொடர்ச்சியாக தமிழக பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் பத்திரமாய் வீடு திரும்புவார்களா என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு தினம் ஒரு ஊரிலிருந்து வரும் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைச் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 34 மாணவர்கள் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலையை உலகளாவிய நிகழ்வு என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 10 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களின் தற்கொலை விகிதமும் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது தான் கவலையளிக்கும் செய்தியாகும்.

மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் அவர்கள் தங்கள் பிரச்சினைகளையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்வதில் உள்ள மனச்சிக்கல் தான். இது ஒருபுறம் என்றால் பள்ளி மாணவிகள் பாலியல் ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். பொதுவெளியில் மட்டுமன்றி பள்ளிகளிலும் இத்தகைய பிரச்சினைகளை அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளிடம் ஆசிரியர்களே ஆபாசமாக நடப்பதும், பாலியல் ரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் படிப்பைக் கைவிட்டுள்ளனர். சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

சரஸ்வதி ரங்கசாமி
சரஸ்வதி ரங்கசாமி

தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகள் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமியிடம் கேட்டபோது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளை ஆய்வு செய்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு செய்ய உள்ளோம். தங்கள் பிரச்சினைகளை ஆசிரியர்களிடம் சொல்ல முடியாத நிலையில் பல மாணவிகள் மன அழுத்தத்தில் இருப்பது எங்களின் ஆய்வில் தெரிய வந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளோம்.

மேலும், பெற்றோர் – மாணவர் - ஆசிரியர் உறவு பலப்பட வேண்டும். பெற்றோரை விட அதிகம் நேரம் ஆசிரியர்களுடன் தான் மாணவர்கள் செலவிடுகிறார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டிகளாக செயல்பட வேண்டும்” என்றார் அவர்.

வே.வசந்தி தேவி
வே.வசந்தி தேவி

மாணவர் தற்கொலைகளை தடுப்பது குறித்து கல்வியாளரும், சமூக செயல்பாட்டாளருமான முனைவர் வே.வசந்தி தேவியிடம் கேட்டதற்கு, “மாணவர் தற்கொலைகளை அரசு தரப்பு மட்டுமே தடுத்துவிட முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து கையாள வேண்டிய ஒரு பிரச்சினை இது. மாணவர் தற்கொலைகள் தனியார் பள்ளிகளில் தான் அதிகம் நடக்கின்றன. ஏனெனில், அவை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அவற்றை முறைப்படுத்த வேண்டும். அங்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தை கறாராக அமல்படுத்தினாலே பல தனியார் பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். பள்ளிகளில் தேவையில்லாமல் ஹாஸ்டல்கள் நடத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி பள்ளியில்கூட அனுமதியின்றி ஹாஸ்டல் நடத்தியுள்ளனர். உலக நாடுகள் பலவற்றில் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கும் நிலை இல்லை.

வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி சில வளரும் நாடுகளிலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் நடந்து தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே பள்ளிகள் செயல்படுகின்றன. அங்கு ஹாஸ்டல் வசதியே கிடையாது. இதனால் அங்குள்ள மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவது கிடையாது. தற்கொலையும் நடப்பதில்லை. ஆனால், இந்தியாவில் தனியார்மயம் தலைவிரித்தாடுவதால் அருகமைப் பள்ளிகள் இல்லாத நிலை உள்ளது. தேசிய கல்விக்கொள்கையின்படி உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தரப்போகிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உலகத்தர கல்விமுறையில் இருந்து முற்றிலும் மத்திய அரசு மாறுபடுகிறது.

மேலும், 7 வயது முதல் 14 வயது வரை உள்ள இளம் பருவ மாணவர்களுக்கு மனச்சிக்கல் ஏற்படுவது சகஜம். இதன் காரணமாக, பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு கவுன்சலிங் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உளவியல் படித்தவர்களை நியமிக்க முடியாது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுத்து மாலை 4 மணிக்கு மேல் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளைக் கேட்க ஆரம்பித்தாலே தற்கொலைகள் தமிழகத்தில் குறைந்து விடும். அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும்” என்றார்.


‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்று கல்வியின் பெருமை பேசிய தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்கள் எப்படியாவது முற்றாகத் தடுக்கப்படட்டும்!

பெட்டிச் செய்தி:

போன் செய்தால் போதும்!
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க மனநல ஆலோசனை வழங்க 104 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்தால் போதும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த சேவை மூலம் இலவச மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் தினமும் சுமார் 250 மாணவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி மனநல ஆலோசனைகளைப் பெற்றுவருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in