சிவப்பு கொடி...வெள்ளை வேட்டி... கவனிக்க வைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

சிவப்பு கொடி...வெள்ளை வேட்டி... கவனிக்க வைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!
ஆசிரியர் சேகர்

கையில் சிவப்பு கொடி, தூய்மையான வெள்ளை வேட்டி சகிதம் பாடம் நடத்தும் தமிழாசிரியர், சேகர்தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வாசலில் நிற்கிறார். இவர் செங்கொடி ஏந்திய தோழர் அல்ல. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தோழர்!

தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகள் சாலையைக் கடக்க உதவ பள்ளிக்கு முதல் ஆளாக வந்து, கடைசி ஆளாக பள்ளியில் இருந்து செல்கிறார் ஆசிரியர் சேகர்.

நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தோவாளை கிராமம், பூக்களுக்குப் பிரசித்தி பெற்றது. இங்கு புன்னகை ததும்பப் பள்ளிக்கூட வாசலில் நின்று மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு உதவிக்கொண்டிருக்கிறார் சேகர். அவரை காமதேனு இணையதளத்துக்காகச் சந்தித்தோம். ”கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன்புதூர் எனக்கு சொந்த ஊர். இப்போது செண்பகராமன்புதூரில் வசிக்கிறேன். பள்ளியில் இருந்து எனது வீடு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடுவேன். தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பள்ளிக்கூடம் என்பதால், வாகனங்கள் மின்னல் வேகத்தில் வரும். இப்படியான சூழலில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஏதாவது வகையில் உதவவேண்டும் என விரும்பினேன். இதற்காகவே ஒரு கம்பில், சிவப்புக்கொடி கட்டி காத்து நிற்பேன். சாலையைக் கடக்க வேண்டிய மாணவ, மாணவிகள் வரும்போது நானே சாலையின் குறுக்கே நின்று சிவப்புக்கொடி காட்டி, வாகனங்களை நிறுத்திவிட்டு மாணவ, மாணவிகளுக்கு உதவுவேன்.

இப்படி கடந்த 3 ஆண்டுகளாகச் செய்துவருகிறேன். சமூகத்திற்கு என்னால் முடிந்த பங்களிப்பு. என்னோட மனைவி குமாரி சந்திரா மாதவாலயம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. ராஜேஷ், ராஜா, சங்கர் என 3 மகன்கள். எனது இந்தப் பணிகளுக்கு என் குடும்பத்தினரும், என் பள்ளிக்கூட தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த ஊக்குவிப்பாக உள்ளனர். எனது தந்தை நடராஜன் முடிவெட்டும் தொழிலாளியாக இருந்தார். விளிம்புநிலையில்தான் என் பள்ளிக்கால வாழ்க்கை நகர்ந்தது. எங்கள் குடும்பத்திலேயே நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. என் அப்பா பலரிடமும் கடன் வாங்கித்தான் என்னைப் படிக்க வைத்தார். இதெல்லாம் சேர்த்துத்தான் என்னை சமூகத்திற்கு பயன்படும்படியாக இயங்க உந்தித் தள்ளுகிறது” என்று சொல்லும் சேகர், ‘புலவர் நாஞ்சில் சேகர்’ என்னும் அடைமொழியால் அறியப்படுபவர்.

தமிழாசிரியரான இவர் மேடைப்பேச்சிலும் தடம்பதித்து வருகிறார். கரோனா காலமான இப்போது பள்ளிகள் 9.30-க்கு ஆரம்பம் ஆகின்றன. சேகரோ, காலை 8.30-க்கே கையில் கொடியோடு தேசிய நெடுஞ்சாலையில் காத்துநிற்கிறார். மாலையில் பள்ளி முடிந்த பின்பு அரைமணி நேரமாக நின்று இந்தச் சேவையை செய்கிறார். ஆசிரியர் பணி ’ஒயிட்காலர்’ பணியாகக் கருதப்படும் இந்தச் சூழலிலும் தினமும் வேட்டி அணிந்தே தமிழ் போதிக்க வருகிறார் சேகர். இதுகுறித்துக் கேட்டால், ”தமிழ்தான் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்தது. எழுத்தை ஆயுதம் எனச் சொல்வோம். ஆனால், ஆயுத எழுத்தே இருப்பது தமிழுக்குத்தான்! தமிழ், தமிழர் கலாச்சாரத்தோடு வாழ வேண்டும் என்னும் பிடிப்பு எனக்கு அதிகம். அந்த பிடிப்பினாலேயே தினமும் வேட்டியில் பள்ளிக்கு வருகிறேன்’’ என்கிறார்.

அந்த நேரத்தில் பேருந்து ஒன்றுவர, கடமையே கண்ணாக நமக்கு விடைகொடுத்துவிட்டு மாணவ, மாணவிகளுக்கு உதவ ஓடுகிறார் சேகர்!

Related Stories

No stories found.