ஆயுதத் தயாரிப்பாளரை அமைதி நோக்கி நகர்த்திய காதல்! : நோபல் பரிசு 2021

ஆயுதத் தயாரிப்பாளரை அமைதி நோக்கி நகர்த்திய காதல்! : நோபல் பரிசு 2021

மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கான 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆல்பிரட் நோபல் காதலித்த பெண்களில் ஒருவரான பெர்தா வான் சட்னர் என்பவர்தாம், ‘நோபல்’ மனதை உன்னதம் நிறைந்ததாக மடைமாற்றினார்.

குடிபெயர்ந்த விஞ்ஞானம்!

அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டபவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று (அக்.4) பகிர்ந்தளிக்கப்பட்டது.

தொடு உணர்வை மின்சார துடிப்பாக நரம்பு மண்டலம் எப்படி மாற்றுகிறது?

வெப்பத்தையும் அழுத்தத்தையும் உள்வாங்கும் புள்ளிகள் சருமத்தில் எங்கே உள்ளன?

இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது இவர்கள் மூலமாக பதில் கிடைத்துள்ளது.

உடல் உபாதைகள் உண்டாக்கும் தீரா வலியிலிருந்து மனித இனம் நிவாரணம் பெறுவதற்கான வழியை, இவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவ்விருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக எழுதப்பட்டு வருகிறது. ஆனால், யூதர் குலத்தைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ் ஐரோப்பாவில் நிலவும் யூத இன வெறுப்பு அரசியலால் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். மறுமுனையில் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் ஆர்டம் பட்டபவுடியன். இவர் சிறந்த உயர் கல்வி வாய்ப்புக்காக அமெரிக்காவில் குடியேறியவர். இவ்விருவரும் இணைந்து நிகழ்த்திய ஆய்வுப் பணி இன்று அமெரிக்காவுக்குப் புகழைத் தேடித் தந்திருக்கிறது.

நோபல் பெற்ற பூரிப்பில் மகனுடன் ஆர்டம் பட்டபவுடியன்
நோபல் பெற்ற பூரிப்பில் மகனுடன் ஆர்டம் பட்டபவுடியன்

இந்நிலையில், தனது மகன் லூக்காவுடன் அமர்ந்து லேப்டாப்பில் நோபல் பரிசு அறிவிப்பு செய்தியைக் காணும் புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் ஆர்டம் பட்டபவுடியன். தனக்குச் சிறந்த கல்வியும் ஆராய்ச்சிக்கு ஆதரவும் அளித்த அமெரிக்காவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக அவற்றில் எழுதியிருந்தார்.

கிளாஸ் ஹசில்மேன்
கிளாஸ் ஹசில்மேன்

அரை நூற்றாண்டு அபாய சங்கு!

இதை அடுத்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியா பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் பருவநிலை போக்கை அளவிடுதல், புவி வெப்பமடைதலைக் கணித்தல் ஆகியவற்றுக்காக சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் நோபல் பெறவிருக்கிறார்கள். அணு முதல் கோள்கள் வரை அவற்றின் நிலைப்பாடுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை, இடைவெளியைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியா பாரிசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், கிளாஸ் ஹசில்மேன், “கடந்த 50 ஆண்டுகளாக அறிவியல்பூர்வமாக பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்த அபாய சங்கை ஊதி வருகிறோம் ” என்றார். இந்நிலையில், நோபல் பரிசு தொடர்பான சுவாரசியமான வரலாற்றைப் புரட்டிப்பார்க்கத் தோன்றுகிறது.

உலகைப் புரட்டிப்போட்ட சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ நிகழ்ந்துள்ளன. உணவுப்பண்டங்களான ரசகுல்லாவாகட்டும்... உருளைக்கிழங்கு சிப்ஸாகட்டும்... மனித குலத்தின் மகத்தான அறிவியல் பாய்ச்சலாக அறியப்படும் பெனிசிலின், எக்ஸ்-ரேவாக இருக்கட்டும்... எதையோ செய்யப்போக வேறொன்றில் முடிந்தவையே.
ஆல்பிரட் நோபல்
ஆல்பிரட் நோபல்

’மரண வியாபாரி மரணமடைந்தார்!’

‘தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ என்ற பிரபல சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. ஆனால், உலகைப் புரட்டிப்போட்ட சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ நிகழ்ந்துள்ளன. உணவுப்பண்டங்களான ரசகுல்லாவாகட்டும்... உருளைக்கிழங்கு சிப்ஸாகட்டும்... மனித குலத்தின் மகத்தான அறிவியல் பாய்ச்சலாக அறியப்படும் பெனிசிலின், எக்ஸ்-ரேவாக இருக்கட்டும்... எதையோ செய்யப்போக வேறொன்றில் முடிந்தவையே. அதேபோலத் தான் நோபல் பரிசு உருவான கதையும்.

பெரும்பாலும் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் தொடர்புடைய 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் ஆல்பிரட் நோபல். பேரழிவை விளைவிக்கக்கூடிய, பல உயிர்களை பறிக்கக்கூடிய ’டைனமைட்’ அவரது கண்டுபிடிப்பே.

இதனாலேயே 1888-ல், ‘மரண வியாபாரி மரணமடைந்தார்’ என்ற தலைப்பிட்டு ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாக நம்பி பிரெஞ்ச் நாட்டுப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மையில் அன்று இறந்துபோனது ஆல்பர்ட்டின் சகோதரரான லட்விக். இப்படித் தவறுதலாக வெளியான செய்தி ஆல்பர்ட் நோபலை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.

தான் எத்தனையோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோதும், உலகம் தன்னை என்னவாக நினைவுகூரும் என்பதை நிகழ்ந்த அசம்பாவிதம் உணர்த்தியது. அதன்பிறகு, 1895-ல் தனது மூன்றாவதும் கடைசியுமான உயிலை ஆல்பிரட் நோபல் எழுதினார். அதில் வேதியியல், இலக்கியம், மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அமைதிக்காகப் பாடுபடுபவர்களுக்கும் தன் பெயரில் பரிசு வழங்கும்படி அதில் குறிப்பிட்டார். அதன் பிறகு 1901-லிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண் பெர்தா வான் சட்னர்
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண் பெர்தா வான் சட்னர்

டைனமைட் மனதில் காதல்!

இந்தச் சம்பவம் அல்லாமல், போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக ஆயுள் முழுவதும் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட ஆல்பிரட் நோபலை அமைதியை நோக்கி உந்தித்தள்ளியது காதல். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஆல்பிரட் கடைசி காலம்வரை பல பெண்களுடன் காதல் உறவில் இருந்துவந்திருக்கிறார். அவருக்கு வாரிசும் இல்லை. இதனாலும் தன்னுடைய சொத்தை நோபல் பரிசுக்கு அவரால் எழுதிவைக்க முடிந்தது.

இந்நிலையில், அவர் காதலித்த பெண்களில் ஒருவரான பெர்தா வான் சட்னர் என்பவர்தாம் ‘நோபல்’ மனதை உன்னதம் நிறைந்ததாக மடைமாற்றினார் என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய பணி வாழ்க்கைக்கும் தனி வாழ்க்கைகும் உதவியாகச் செயல்படப் பெண்களை நியமிப்பதை ஆல்பிரட் நோபல் வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய 43-வது வயதில், “பணக்கார, படித்த, வயது முதிர்ந்த சீமானுக்குப் பன்மொழி புலமைமிக்க வீட்டுப்பொறுப்புகளையும் ஆய்வுப் பணிகளையும் நிர்வகிக்கக்கூடிய பெண் உதவியாளர் தேவை” என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார். இதை படித்துவிட்டு, ஆல்பிரட்டிடம் வேலைக்குச் சேர்ந்தார் ஆஸ்திரியா பெண்ணான பெர்தா வான் சட்னர்.

நோபலின் மறைவுக்குப் பிறகு, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண்ணும் இவரே. ‘யுத்தங்கள் அழிவின் அடையாளம். அவற்றை மனிதக்குலம் கைவிட வேண்டும்’ என்று எழுத்திலும் செயலிலும் இடைவிடாது பறைசாற்றி வந்த பெர்தா, முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு மரணித்தார். உலக வரலாற்றில் நிரந்தர வடுவாக பதிந்துவிட்ட உலகப் போரை, தன்னுடைய செயற்பாட்டால் தடுக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தியே அவர் உடலைவிட்டு உயிர் பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய பெண்ணான பெர்தா இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆல்பிரட்டுடன் பணி புரிந்தார். இருப்பினும் அகிம்சை கொள்கையில் ஆழங்கால் ஊன்றியவராகத் திகழ்ந்ததால், அவரால் ஆல்பிரட்டின் மனதில் அன்பையும் அமைதியையும் விதைக்க முடிந்தது!

Related Stories

No stories found.