தமிழகத்தில் நவோதயா பள்ளி வழக்கு: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழகத்தில் நவோதயா பள்ளி வழக்கு: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு கல்வித்துறையில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

‘தமிழகம் தவிர்த்து நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்திலும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வி வழங்கும் இப்பள்ளிகளில் ஆண்டுக்கு வெறுமனே 200 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்திலோ இது மாநில அரசின் கொள்கை முடிவு என்று கூறி, தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதி மறுத்து வருகிறார்கள்’ என்பதே அந்த வழக்கின் சாரம்.

அனுமதித்தால் என்ன?

தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றும் மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மாண்டிசோரி பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள், சர்வதேச பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் குளோபல் பள்ளிகள் என்று 7 வகையான பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன.

மாநிலக் கல்வித்திட்டப் பள்ளிகளைவிட, மத்தியப் பள்ளிகள் தரமானவை என்றும், மத்திய பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தங்களது வருவாய், அந்தஸ்தைப் பொறுத்தே பிள்ளைகளை எந்தப் பாடத்திட்டப் பள்ளிகளில் சேர்ப்பது என்று முடிவெடுக்கிறார்கள் பெற்றோர்கள். சிலர் தங்களது தகுதிக்கு மீறிய பள்ளிகளில் சேர்த்துவிட்டு, கட்டணம் செலுத்த முடியாமல் மீண்டும் சாதாரண பள்ளிக்கு பிள்ளைகளை மாற்றுகிற நிகழ்வுகள் இங்கே சர்வ சாதாரணம்.

மத்திய அரசு பள்ளியான கேந்திரிய பள்ளிகளானது பணிமாற்றம் காரணமாக நாடு முழுக்கச் சுற்ற வேண்டிய நிலையில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கானது என்றாலும், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அதில் சேர வாய்ப்புத் தருகிறார்கள். ஆனால், ஒரு வகுப்புக்கு 10 சீட் மட்டுமே அப்படி ஒதுக்கப்படுகிறது என்றால், ஆயிரம் பேர் அதற்காகப் போட்டியிடுகிறார்கள். இதைச் சாதகமாக்கிக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஒரு சீட்டை ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.

இப்படியான சூழலில், கேந்திரிய வித்யாலயா போலவே மாவட்டந்தோறும் மத்திய அரசு பள்ளிகள், அதுவும் வெறும் ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கும் தரமான பள்ளிகள் அமைகிறது என்றால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். எனவே, மதுரை வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உத்தரவு என்னானது?

ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு, குமரி மகா சபையின் செயலாளரான ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதேபோன்ற ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.

"கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், 1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு தொடங்கியது. இந்தப் பள்ளிகளில், இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் செயல்படும் இந்தப் பள்ளிகளைத் தமிழகத்திலும் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று தனது மனுவில் கூறியிருந்தார் ஜெயக்குமார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2017-ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. ‘இன்னும் எட்டு வாரத்தில், நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், பள்ளி தொடங்குவதற்குத் தடையில்லா சான்றிதழும் வழங்க வேண்டும்’ என்பதே அந்த உத்தரவு. 4 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு இதனை பரிசீலித்தது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை நடைமுறையில் இருப்பதால், மும்மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளியான நவோதயாவுக்கு அனுமதி அளிக்க முடியாது. கேந்திரிய பள்ளி மத்திய அரசின் நிதியுடன் செயல்படும் பள்ளி. ஆனால், நவோதயா பள்ளிக்கு இடம், கட்டிடம் போன்ற வசதிகளை மாநில அரசே ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதால், மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு முரணான அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்க முடியாது என்று அரசு முடிவெடுத்துவிட்டது.

எனவே தான் அந்த கொள்கை முடிவுக்கு எதிராக இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்த மனுவுக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞரோ இது அரசின் கொள்கை முடிவு. நீதிமன்றம் தலையிட முடியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார்" என்றனர்.

ராணுவமும், தகவல் தொடர்பும் மத்திய அரசுப் பட்டியலில் உள்ளவை. எனவே, மாநில அரசு தனக்கென தனி தொலைக்காட்சியோ, வானொலியோ தொடங்க முடியாது என்று ஒரு கால கட்டம் வரையில் மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், உலகமயம், தனியார் மயம் வந்த பிறகு காசிருப்பவர்கள் எல்லாம் டிவியும், வானொலிவும் தொடங்கினார்கள். ஆளும் அரசு டிவி தொடங்க முடியாவிட்டாலும், ஆளுங்கட்சிகள் டிவி தொடங்கின. இதே சூழல் இன்று கல்வித்துறையிலும் நடந்துவிட்டது. தனியார் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிவிட்டன. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று தமிழக அரசு யோசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

Related Stories

No stories found.