இளம் உயிர்களைக் குடிக்கும் மெரினா: விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ஆசிரியர்களே!

இளம் உயிர்களைக் குடிக்கும் மெரினா: விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ஆசிரியர்களே!

அலைபாயும் கடலையும் ஓடும் ரயிலையும் நாள் முழுக்க பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்! அதிலும் ஆசியாவிலேயே 2-வது நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை கொள்ளை அழகு.

13 கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்து காணப்படும் மெரினா கடற்கரை, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவதுடன், மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் விளங்குகிறது. மறுபுறம் பல உயிர்களைக் குடிக்கும் ஆழ்கடலாகவும் அதே மெரினா கடற்கரை வீற்றிருப்பது வேதனைக்குரியது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதின்பருவத்தினருக்கே உரிய அசட்டுத்தனமான தைரியத்தில் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து குளிக்கிறார்கள். அப்படி செய்ய நேரும்போது ஆழ்கடலில் சிக்கி மூழ்கி உயிரிழக்கிறார்கள்.

ஆண்டுதோறும் 70 முதல் 80 பேர் மெரினா கடலில் மூழ்கி உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் பள்ளி, கல்லூரி மாணவர்களே என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதைத் தடுக்கும் விதமாகத் தமிழக அரசும் காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, 2020-ல் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை சார்பாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு, கடலில் சிக்கிக் கொள்பவர்களை விரைந்து மீட்பதில் பயிற்சி பெற்று களத்தில் இறங்கியது. ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், ஸ்கூபா நீச்சல் வீரர்கள், மிதவைப் படகு ஓட்டுநர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 3 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதிகளில் இக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆழ்கடலுக்குச் சென்று குளிக்கும் பொதுமக்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்புக் குழுவினரின் இடைவிடாத செயல்பாட்டால், கடந்த ஒன்றரை வருடங்களில் மெரினாவில் குளிக்கச் சென்று கடலில் மூழ்கிய 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக மெரினா கடற்கரை சில மாதங்களாக மூடப்பட்டிருந்ததால், இந்த ஆண்டு உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததை அடுத்து, தமிழக அரசு மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களை அனுமதித்தது.

ஆனால், கடற்கரை திறக்கப்பட்ட முதல்நாளே 3 பள்ளி மாணவர்கள் மூழ்கி உயிரிழந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. இதை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களில் 20 பேர் மெரினா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் சிறப்புக் குழுவினரின் இடைவிடாத செயல்பாட்டால், கடந்த ஒன்றரை வருடங்களில் மெரினாவில் குளிக்கச் சென்று கடலில் மூழ்கிய 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேர் உடலை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன் நிமித்தமாக. சென்னை காவல் துறையினர் சார்பாகவும் குதிரைப் படை மற்றும் பீச் பக்கி வாகனம் மூலமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மெரினா கடற்கரையில் அதிகமாக மரணங்கள் நிகழும் பகுதியில் எச்சரிக்கை பலகையும் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி மெரினாவில் மரண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துகளை முற்றிலுமாக தடுப்பதற்கு, சிறப்புக் குழுவை உருவாக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆழ்கடல் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்கள், கடலோர பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த காவலர்கள், மீனவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அரசும், காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இத்தகைய மரணங்களை தடுக்க இயலும். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதின்பருவத்தினருக்கே உரிய அசட்டுத்தனமான தைரியத்தில் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து குளிக்கிறார்கள். அப்படிச் செய்ய நேரும்போது ஆழ்கடலில் சிக்கி மூழ்கி உயிரிழக்கிறார்கள். இந்நிலையில் ஆழ்கடலில் குளிப்பதன் அபாயம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை ஆசிரியர்களும் ஏற்க வேண்டும். அப்போதுதான் மரணச் சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.