தாஜ்மகாலை முந்தியது மாமல்லபுரம்: வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் தமிழ்நாடு!

தாஜ்மகாலை முந்தியது மாமல்லபுரம்: வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் தமிழ்நாடு!

இந்தியாவின் சுற்றுலா நினைவுச் சின்னங்களில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை விடவும் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்துக்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2021-22 ம் ஆண்டிற்கான நுழைவுச்சீட்டு பெறும் நினைவுச்சின்னங்களுக்கு வருகைதந்த பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் 1,44,984 வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களை பார்வையிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 38,922 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே தாஜ்மகாலை பார்வையிட்டுள்ளனர். இதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் மாமல்லபுரமும், இரண்டாம் இடத்தில் தாஜ்மகாலும் உள்ளது. நுழைவுச்சீட்டு பெறப்படும் நினைவுச்சின்னங்கள் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருகை தந்த இந்திய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தமிழகத்தின் 6 நினைவுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. மாமல்லபுரம் இப்பட்டியலில் முதல் இடத்திலும், 25,579 வெளிநாட்டு பயணிகளின் வருகையுடன் சாளுவன்குப்பத்தில் உள்ள புலித்தலை பாறைக் கோயில் 3வது இடத்திலும், 10,483 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் செஞ்சி கோட்டை 5வது இடத்திலும், 9,174 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டை 6வது இடத்திலும், 8,422 வெளிநாட்டு பயணிகளுடன் திருமயத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகம் 8வது இடத்திலும், 5,432 வெளிநாட்டு பயணிகளுடன் சித்தன்னவாசலில் உள்ள குடைவரை கோயில்கள் 10வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் சுற்றுலா தளங்களுக்கு வந்த ஒட்டுமொத்த வெளிநாட்டு பயணிகளில் மாமல்லபுரத்துக்கு 45.5% பார்வையாளர்கள் வந்ததாகவும், தாஜ்மஹாலுக்கு 12.21% பார்வையாளர்கள் வந்ததாகவும் இதன்மூலம் தெரியவந்துள்ளது. இந்தப்பட்டியலில் ஆக்ரா கோட்டை 4வது இடத்திலும், குதுப்மினார் 7வது இடத்திலும், டெல்லி செங்கோட்டை 9வது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாடு இப்போது இந்தியாவின் பாரம்பரிய தலைநகராக மாறியுள்ளது என்றும், வெளிநாட்டினர் அதிகம் பார்வையிடும் இடமாக மாமல்லபுரம் மாறியுள்ளது என்று தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுழைவுச்சீட்டு இல்லாத சுற்றுலாத் தளங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in