பள்ளிக்கு ஆதரவுக் கரங்கள் நீள்வதில் தவறில்லை!

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஆதரிப்போம்!
பள்ளிக்கு ஆதரவுக் கரங்கள் நீள்வதில் தவறில்லை!

அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய, ’டாம் சாயரின் சாகசங்கள்’ நாவல், 1867-ல் வெளிவந்த அற்புதமான படைப்பு. டாம் சாயர் கதாபாத்திரம்தான் படைப்பின் மூலம். டாம் சாயர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பல்வலி, தலைவலி என காரணங்கள் கண்டுபிடித்து பள்ளி செல்வதைத் தவிர்ப்பான்.

கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் கரங்கள் நீள்வதில் தவறில்லை. அதைச் செயல்படுத்தும் விதத்தில் ஆரோக்கியமான அணுகுமுறை மாற்றங்களை, ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் பரிந்துரைக்கலாம்...

இன்று லட்சக்கணக்கான டாம் சாயர்கள்!

அவனது அத்தை கதாபாத்திரத்தில் வரும் ஃபோலி பலவாறு சிரமப்படுவார். ஒருமுறை பல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று அவன் சொல்லும்போது, ஆடும் பல்லை ஒரு நூலில் கட்டி கட்டிலின் முனையோடு கட்டிவிடுவார். பின்னர், நெருப்பு அடங்கிய கரண்டியை டாமின் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டுசெல்வார். அவன் வேகமாக நகர ஆடும் பல் பெயர்ந்துவிடும். சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறைக்குப் பின்னான தொடக்கத்தையே அவன் வெறுப்பான். குழந்தைகளின் மனோபாவங்களை அருமையாக விளக்கியிருக்கும் படைப்பு அது. இன்றைக்கு, 600 நாட்களுக்குப் பின் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கும் குழந்தைகளின் மன நிலையோடு இதைப் பொருத்திப்பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

பள்ளி என்பது மகிழ்ச்சியான இடமாக இருக்கவேண்டும். அங்கு குழந்தைகள் செல்ல விரும்பவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் உண்மை நிலை அதுவல்ல. பெற்றோரின் வற்புறுத்தல், நண்பர்களைச் சந்திக்கும் ஆர்வம், பள்ளியில் ஓய்வுநேரங்களில் கிடைக்கும் அரட்டைக்கான வாய்ப்பு போன்றவையே குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கான காரணங்களாக அமைபவை.

நினைத்தாலே இனிக்கும் சேட்டைகள்!

விதிவிலக்காக சில சிறுவர்கள் வேண்டுமானால் இருக்கலாம். இன்றும் நமது நினைவலைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திய நாட்களை விட, நாம் சேட்டைகள் செய்து அதன் மூலம் கிடைத்த சிறிய மகிழ்ச்சிக்கு இணையானது வேறு ஒன்றும் இருக்காது. விழாக்களில் பங்கெடுத்த மகிழ்ச்சி இருக்கலாம். விழாக்கால உற்சாகத்தோடு வகுப்பெடுத்த ஆசிரியரின் கற்பித்தல்கள் சில இருக்கலாம். ஆக, பள்ளிக் கல்வியில் குழந்தைகள் செலவிடும் 12 ஆண்டுகள் பசுமை மாறா நினைவுகளை வாழ்நாளுக்கும் அளித்துநிற்கும் என்பது எழுதப்பட்ட விதியாகக் கூட கொள்ள இயலும்.

இன்றைக்கு கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னால், பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளின் நிலைமையைப் பரிசீலிக்கவேண்டியது அவசியமாகிறது.

எது மாறினாலும் அது மாறலையே!

வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் குழந்தைகளோடு கூட்டாகவும் தனியாகவும் உரையாடும் வழக்கம் கொண்டுள்ள எனக்கு, அண்மைக்காலமாக சில உண்மைகள் புலப்பட்டுள்ளன. நான் சந்தித்த குழந்தைகளில் சிலர் தமிழ் எழுத்துகளை மறந்துள்ளனர். குறிப்பாக ஆங்கில மொழியில் எழுத்துகளைக் கண்டறிவதிலேயே பிரச்சினை உள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவை எதுவும் பள்ளிகளின் வகுப்பறையில் கிடைத்த அனுபவமல்ல. இயல்பாகச் சாலை ஓரங்களில் வாராவதியில் அமர்ந்து அடித்த அரட்டைகளில் கிடைத்தவை. ஆயிரம் முற்போக்கான கல்விக்குழு அறிக்கைகள் வந்தாலும் இறுதியில் தற்போதைக்கு எழுத்துத் தேர்வே அனைத்தையும் தீர்மானிக்க வல்லது என்ற உண்மையின் அடிப்படையில், இந்தப் பிரச்சினை கூடுதல் கவனம் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

இது ஒருபுறமென்றால், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான பள்ளி நடைமுறைகளில் சந்திக்கவிருக்கும் மற்றொரு பிரச்சினை இடைநிற்றல். இடைநிற்றல் பிரச்சினையானது கல்வித் துறை, அதிகாரிகள் மற்றும் அவர்களது ஆணைகளால் தீர்க்கக்கூடிய பிரச்சனையல்ல. மாறாக ஒட்டுமொத்த சமூகப் பங்கேற்போடும் தீர்வுகாண வேண்டிய சிக்கலாகும். இதில் எந்த ஒரு பிரச்சினை சமூகத்தின் பேசுபொருளாகிறதோ, அதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழியில் புரியவைக்கவேண்டிய அவசியம் உள்ளது.

இதைப் படித்தவர்களால் ஒரு கட்டுரையால் புரிந்துகொள்ள இயலும் அல்லது அவர்கள் இதுபற்றிய புரிதலோடும் இருக்கலாம். விழிப்புணர்வு பெற்றிருந்தாலும் இதற்கான நேரம் செலவழிக்கும் சூழல் வேண்டுமே! உண்மையில் இவற்றைப் புரிந்துகொண்டு களத்தில் இறங்கி செயலாற்றக்கூடியவர்கள், அந்தந்த குழந்தைகள் வாழும் பகுதியில் வசிக்கும் சமூக மக்களே. இப்படிப்பட்டோர்க்கு மட்டும் எளிமையான புரிதல் ஏற்பட்டுவிட்டால், அவர்களால் செலவிட இயலும் குறைந்த அளவிலான நேரம் மூலம் ஓரளவுக்கு இடைவிலக வாய்ப்புள்ள குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்துத் தொடர வைக்க இயலும்.

ஆசிரியர்கள் மட்டும் போதாது!

இதுபோன்ற விஷயங்களை மனதில்கொண்டே, தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. முதலில் சொன்ன எழுத்தறிவு, எண்ணறிவு போன்ற விஷயங்களை கற்கும் ஆவலை அதிகரிக்க விளையாட்டு, செயல்பாடுகள் மூலமாக மாலை நேரங்களில் தன்னார்வத் தொண்டர்கள் கரம்கோக்க உள்ளனர். இந்தச் செயல்பாட்டில் ஈடுபடும் இவர்கள், இடைநிற்றலைக் குறைக்கவும் பணியாற்ற முன்வரப்போகின்றனர். பாமரருக்கும் இந்தச் சிக்கல்களைப் புரியவைக்கக் கலைவடிவிலான முயற்சிகளும் தமிழகமெங்கும் வலம் வரப்போகின்றன.

கல்வி என்பது சமூகத்தில் அனைவரின் பேசுபொருளாகும்வரை, கல்வியின் நோக்கங்களை அடைவது சாத்தியமல்ல. எந்த ஒரு தனிப்பட்ட திட்டமும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் வல்லமை பெற்றதும் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாய்த்திருக்கும் புரிதல்களின் அடிப்படையில் தீர்வை நோக்கி நகர்த்தும் வல்லமை பொருந்தியவையே திட்டங்கள்.

இன்றைக்குக் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வை, ஆசிரியர்கள் மட்டும் எட்டவேண்டும் என்று சொல்லி அரசாணை பிறப்பிப்பது அரசுக்கு எளிதானது. ஆனால், பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து, சமூக பங்கேற்புடன் தீர்வுகாண முன்வருவது ஆசிரியர்களுக்கும் ஆதரவான செயல்பாடாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். 20 மாத கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் கரங்கள் நீள்வது ஒன்றும் தவறான செயலல்லவே. அதை செயல்படுத்தும் விதத்தில் ஆரோக்கியமான அணுகுமுறை மாற்றங்களை ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் பரிந்துரைக்கலாம். அதைப் பரிசீலிக்கும் அரசாகவே தற்போதைய அரசு இருக்கும் என நம்புகிறேன்.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். ’குழந்தை மொழியும் ஆசிரியரும்’, ‘முயலும் ஆமையும்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in