`ஜே.என்.யு பல்கலையில் தமிழ்த்துறையை விரிவுபடுத்த வேண்டும்'

துணைவேந்தரை சந்தித்து திருமாவளவன் கோரிக்கை மனு
`ஜே.என்.யு பல்கலையில்  தமிழ்த்துறையை விரிவுபடுத்த வேண்டும்'

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ்த்துறையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி ஸ்ரீபண்டிட் பதவி வகிக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அக்கட்சியின் எம்பியும் எழுத்தாளருமான ரவிக்குமாரும் இன்று பல்கலைக்கழகத்தில் அவரை சந்தித்து உரையாடினர். அப்போது அவரிடம் கடிதம் மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறையை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். துணைவேந்தர் சுமார் ஒரு மணி நேரம் அவர்களோடு உரையாடினார். அப்போது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அறவேந்தன் உடனிருந்தார்

அவர்கள் அளித்த அந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

தமிழறிஞர் ஒருவரின் மகள், தமிழ் அறிந்த ஒருவர் உலகப் புகழ்ப்பெற்ற ஜே.என்.யு வின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்திலேயே மாணவராகப் பயின்ற உங்களுக்கு மாணவர்களின் தேவை என்னவென்பது தெரிந்திருக்கும். ஆசிரியர்களின் சிரமங்களும் புரியும். எனவே அவற்றைத் தீர்த்து வைக்க நீங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறையில் புகழ்பெற்ற பல தமிழறிஞர்கள் பணியாற்றியுள்ளனர். தற்போதும் அந்த சிறப்பு குன்றவில்லை. அந்தத் தமிழ்த்துறைய மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களிடம் முன்வைக்கிறோம்:

1. தமிழ்த்துறையை ஒரு மையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்த்துறையில் எம்.ஏ படிப்பு துவக்கப்பட வேண்டும். அதில் குறைந்தது ஆண்டுக்கு 20 மாணவர்களாவது சேர்க்கப்பட வேண்டும்.

2. இந்தி, உருது துறைகள் ஒவ்வொன்றிலும் 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், தமிழ் பயிற்றுவிக்க 2 ஆசிரியர்கள் மட்டுமே - (1 பேராசிரியர், 1 விரிவுரையாளர்) உள்ளனர். தமிழ்த் துறையில் மேலும் 3 ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டும்.

3. ஆண்டுக்கு 2 கருத்தரங்குகளை நடத்த (1 உலக அளவிலும், 1 இந்திய அளவிலும்) நிதி அளிக்கவேண்டும். தமிழ்த்துறையில் உள்ள நூலகத்தை மேம்படுத்த வேண்டும், புதிய நூல்கள் வாங்கப்பட வேண்டும்.

4. இங்கே உள்ள வரலாற்றுத்துறை உலகப்புகழ் வாய்ந்தது. அங்கு தென்னிந்திய வரலாறு, குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாறு பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஒரு ஆய்வு இருக்கையை உருவாக்கி தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகள், தமிழ்க் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோயில் கட்டடக்கலை, நாணயவியல் முதலானவற்றை மேலாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ன கோரிக்கைகள் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.