3 மாவட்ட இளைஞர்களுக்கு இனிப்பான செய்தி!- விரைவில் வருகிறது ஐடி பார்க் அறிவிப்பு?

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த குமரி மாவட்ட யுவ, யுவதிகள் பயன்பெறும் வகையில் குமரியை ஒட்டி தென்மாவட்டத்தில் ஐ.டி பார்க் அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகளில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தீவிரம் காட்டிவருவதாகவும், இந்த வாரமே இதுதொடர்பான அறிவிப்புவர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திலேயே மக்கள் தொகை அடிப்படையில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருக்கும் இடம் கன்னியாகுமரி மாவட்டம். இங்கு போதிய தொழில்வாய்ப்பு இல்லாததால் பொறியியல் படித்த ஆயிரக்கணக்கான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் சென்னையிலும், கேரளத்தில் உள்ள ஐடி கம்பெனிகளிலும் வேலை செய்துவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இதை மையமாக வைத்து, இங்குள்ள படித்தவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கும்வகையில் ஐடி பார்க் அமைக்க முனைப்பு காட்டிவருகிறார். அதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளையும் நடத்தியுள்ளார்.

இதேபோல் முந்தைய திமுக ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஐடி பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த ஆட்சியில் அது கவனம் செலுத்தாமல் கைவிடப்பட்டது. அதற்கு உயிர்கொடுக்கும்வகையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை மையப்படுத்தி நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா மீண்டும் புத்துயிர் பெறும்வகையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இல்லாதபட்சத்தில் தென்மாவட்டத்தில் புதிய ஐ.டி.பார்க் அமைக்கவும் இடம் பார்க்கப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவைக் கூட்டத்தொடர் இந்த வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் அதற்குள் தென் மாவட்டங்களில் தொழில்வாய்ப்பைப் பெருக்கும்வகையில் ஐ.டி.பார்க் தொடர்பான அறிவிப்புவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 4-ம் தேதி நாளை மறுநாளே இதற்கான அறிவிப்புவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மாவட்டங்களில் சாதிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கை. படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐ.டி.பார்க் வேகம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in