எண்ணங்களின் சங்கமத்தால் ஏற்றம்பெற்ற இருளர்கள்!

வீடு பெற்ற பயனாளிகள்
வீடு பெற்ற பயனாளிகள்

‘ஜெய்பீம்’ சினிமா வெளிவந்தபிறகு சமூகத்தில் பழங்குடிகள் பற்றிய விழிப்புணர்வு முன்பைவிட அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பழங்குடிகள் குறித்து தனது கவனத்துக்கு வரும் தகவல்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கிறார். அவர்களின் இல்லம் தேடியும் செல்கிறார். ஆனாலும், பழங்குடிகளில் பெரும்பகுதியினர் இன்னமும் நாடோடிகளாகத்தான் இருக்கிறார்கள்.

தங்களுக்கான நிலையான வாழ்விடமோ, வீடுகளோ இல்லாமல் செல்லுமிடங்களில் மரத்தடிகளில் தங்கிப் பிழைக்கும் பழங்குடிகளின் நிலையில் பெரிதான மாற்றமில்லை. இவர்களுக்கு விதிவிலக்காக, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள தாழநல்லூர் கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடிகளுக்கு நிலையான வாழ்விடம் கிடைத்திருக்கிறது. அரசு கட்டிக்கொடுத்த கான்கிரீட் வீடுகளுக்கு கடந்த 13-ம் தேதி குடிபெயர்ந்திருக்கிறார்கள் இந்த மக்கள். இவர்களுக்கு இது எப்படி சாத்தியமானது... இதற்கு யார் காரணம் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கொஞ்சம் முன்னோக்கிப் போகவேண்டும்.

புதிய வீடுகள்
புதிய வீடுகள்

தமிழகத்தில் 2015-ல் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28-ல் துவங்கி கனமழையாகக் கொட்டத் தொடங்கியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகவும், அப்போது தமிழகத்தில் தொடர் கனமழை 4 கட்டங்களாக பெய்தது. அதில் நவம்பர் 8,10, 15, 16 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்தில் பேய்மழை கொட்டித் தீர்த்தது.

இப்படி கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தமிழகமும் கடலூர் மாவட்டத்தின் மீது கருணை காட்டியது. கடலூர் மாவட்டத்தை நோக்கி தமிழகம் முழுவதுமிருந்தும் உதவும் கரங்கள் ஓடிவந்தன. ஆதரவுக்கரங்கள் ஆங்காங்கு நீண்டன.

பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்...
பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்...

தெருக்களில் குடியிருந்தவர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் ஓடிவந்து உதவின. அதனால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் தீர்ந்தன. தேவைக்கு அதிகமாகவும் சில இடங்களில் மக்களுக்கு உதவிகள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக அரசின் சார்பில் அனைத்துக் கிராமங்களிலும் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், இந்தச் சலுகையானது நிரந்தரமான வாழ்விடங்களில் வசித்தவர்களுக்குத்தான் சாத்தியமானது. மரத்தடியில் நாடோடிகளாக தங்கி இருந்தவர்கள் கதி என்ன என்பதை யாரும் சிந்திக்கவில்லை. இதை கவனத்தில் கொண்ட ‘எண்ணங்களின் சங்கமம்’ என்ற அமைப்பு நாடோடி பழங்குடிகளுக்கும் நிரந்தர வீடுகளை கட்டுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவில் விருத்தாசலம் அருகில் உள்ள தாழநல்லூரில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் 14 இருளர் குடும்பங்கள் வசித்தன. சிறிய அளவில் ஓலைகளை வைத்து மறைப்பு கட்டி, அதில் அவர்கள் தங்கி இருந்தார்கள். வந்த பெருவெள்ளம் அவர்களின் ஓலைக்குடிசைகளை மட்டுமல்ல, உடமைகளையும் அடித்துச் சென்றுவிட்டது. அனைத்தையும் இழந்துவிட்டு நிராதரவாய் ஆதரிப்போர் யாருமின்றி நின்று கொண்டிருந்த அவர்களின் குரலுக்கும் செவிமடுத்தது ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பு.

 முதலில் வசித்த ஆலமரத்தடி...
முதலில் வசித்த ஆலமரத்தடி...

உடனடித் தேவையாக அந்த மக்களுக்கு மாற்றுத் துணிகள், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கிய எண்ணங்களின் சங்கமம், அவர்களை அள்ளி அரவணைத்துக் கொண்டது. அடுத்தடுத்து அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் எனத் திட்டமிட்டது. அவர்களிடம் அதிகபட்சமாக அந்த மக்கள் கேட்டது, “நிரந்தரமாய் வசிக்க எங்களுக்கும் ஒரு வீடு வேண்டும்” என்பது தான். தங்களின் விருப்பத்தைச் சொல்லிவிட்டாலும் அவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்க அவர்கள் வசம் கையகல இடமில்லை. அதற்காக பின்வாங்கி விடாத ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பு, அந்த மக்களுக்காக அரசிடம் இடம் வாங்கும் முயற்சியில் முதலில் இறங்கியது. இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ரமேஷும் மாரியம்மாளும் அதிகாரிகளிடம் பேசி அதைச் சாதித்தார்கள்.

தொடர் முயற்சியின் பலனாக அந்த 14 குடும்பங்களுக்கும் தலா 2 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கியது அரசு. அடுத்து அவர்களுக்கு அந்த இடத்தில் அழகான கூரைவீடுகள் கட்டித்தரப்பட்டன. அந்த இடத்தில் குடிநீர் இணைப்பு பெற சாத்தியமில்லை என்பதால் அந்த மக்களின் தண்ணீர் தேவைக்காக தனியாக போர்வெல் போட்டு அடி பம்ப் அமைத்துக் கொடுத்தது எண்ணங்களின் சங்கமம். அதுவரை ஆலமரத்தடி வாசம் செய்த அந்த மக்களுக்கு ஒண்டக் குடிசையும் கையருகே குடிக்கச் சுத்தமான தண்ணீரும் கிடைத்ததால் அகமகிழ்ந்தார்கள்.

முதலில் கட்டித்தரப்பட்ட கூரைவீடு...
முதலில் கட்டித்தரப்பட்ட கூரைவீடு...

குடிசைவீட்டுக்கு குடிபெயர்ந்த அந்தப் பழங்குடிகளின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர் பிரபாகருக்கு புதிய உத்வேகத்தை தந்தது. அதனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அந்த இடத்திலேயே படிப்படியாகச் செய்து தந்து அவர்களை சராசரி குடிமக்களாக வாழச்செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இன்னமும் தமிழ்நாட்டில் பெரும்பகுதிகளில் பழங்குடியினர் தங்களுக்கு சாதிச்சான்று கேட்டு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு வசிக்கும் இருளர் மக்கள் அனைவருக்கும் சாதிச்சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும் இவர்கள் கையில் இருக்கின்றன. தற்போது சாலை வசதியும், குடிநீர் இணைப்பும் கிடைத்திருக்கிறது. இயற்கையைப் போற்றி வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கிறார்கள்.

இங்குள்ள இருளர் குழந்தைகள் தவறாமல் அரசுப் பள்ளிக்குச் செல்கிறார்கள். இடைநிற்றல் என்பதே கிடையாது. தற்போதும் 19 பிள்ளைகள் பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக இவர்களுக்கு மகாத்மா காந்தி மாலைநேர படிப்பகமும் ஏற்பாடு செய்யபட்டு அதற்காக ஒரு கல்விக்குடிலும் கட்டித்தரப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ‘இல்லம் தோறும் கல்வி’ என்பது 2016-லேயே சாத்தியமாகிவிட்டது. அதனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பின்மேல் ஆர்வம் ஏற்பட்டு இடைநில்லாமல் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

வீடு கட்ட அஸ்திவாரம்...
வீடு கட்ட அஸ்திவாரம்...

அடிப்படைத் தேவைகளை செய்துகொடுத்ததோடு மட்டுமல்லாது, இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வழிசெய்து கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆம், இங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கு ஒரு வீட்டுக்கு இரண்டு ஆடுகள் வீதம் வாங்கிக்கொடுக்கப்பட்டது. அந்த ஆடுகள் இப்போது பல்கிப் பெருகி அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தைத் தந்துகொண்டிருக்கிறது. அது தவிர, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேலைகளுக்கும் சென்று சம்பாதிக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் குடிசைவீடுகளில் வசித்த இந்த மக்களுக்கு இப்போது கான்கிரீட் வீடுகளும் அரசாங்கத்தால் கட்டித்தரப் பட்டிருக்கிறது. கடந்த 13-ம் தேதி இந்த வீடுகளை சம்பந்தப்பட்ட இருளர் பழங்குடி மக்களிடம் அதிகாரிகள் முறைப்படி ஒப்படைத்தனர்.

ஐயப்பன் - சித்ரா
ஐயப்பன் - சித்ரா

கான்கிரீட் வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்வுக்கு முன்னதாக இங்குள்ள இருளர் பழங்குடிகளான ஐயப்பன் - சித்ரா தம்பதியிடம் பேசினோம். புதுமனை புகும் உற்சாகத்தில் இருந்த இருவரும் ”நாங்க இந்த அளவுக்கு ஒரு பாதுகாப்பான ஒரு இடத்துல வாழ்வோம்னு நினைக்கவே இல்லை. வெந்தத தின்னுட்டு விதியேன்னு மரத்தடியில கெடந்த எங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைச்சிருக்கு. எதுக்கும் அலையாம வீட்டுக்குப் பக்கத்துலயே எல்லா வசதியும் வந்திருக்கு. ஒரே ஒரு குறை தான்... எங்க வீடுகளுக்கு கரன்ட் வசதி மட்டும் இப்போதைக்கு இல்லை. சிக்கிரமே அதுவும் வந்திரும்னு அதிகாரிங்க சொல்லிருக்காங்க. நாங்க எல்லாம் சந்தோஷமா இருக்கிற இந்த நல்ல நேரத்துல, ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பையும் நாங்க நன்றியோட நினைச்சுப் பாக்குறோம். ஏன்னா... அவங்க இல்லைன்னா எங்களுக்கு இதெல்லாம் கிடைச்சுருக்குமான்னு சொல்லத் தெரியல. அதுக்காக அவங்களுக்கும், எங்களுக்கு இதையெல்லாம் செஞ்சுகுடுத்து உதவுன அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றி சொல்லிக்கிறோம்” என்றார்கள் அவர்கள்.

இந்த மக்களுக்கு இதையெல்லாம் சாதித்துக் கொடுத்த ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பின் நிறுவனர் ஜி. பிரபாகர் சென்னையைச் சேர்ந்தவர்; பிரபலமான ஓவியர். தன்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சமூகசேவையின் பக்கம் நாட்டத்தைத் திருப்பிய இவர், 2015 முதல் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள 1800-க்கும் மேற்பட்ட சேவை மனிதர்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பு வைத்து அவர்களை எல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார்.

ஜே.பிரபாகர்
ஜே.பிரபாகர்

அவரிடம் பேசியபோது, ’’சமூக சேவையில் ஈடுபடுகிறவர்கள் அதைத் தொடர்ந்து செய்ய அவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய சேவை தொய்வின்றித் தொடரும். சேவை மனிதர்களுக்கு அத்தகைய உற்சாகத்தைத் தருவதை பெரிய கடமையாக நினைத்துச் செய்துவருகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை அவர்களையெல்லாம் அழைத்து ஒன்றுகூடல் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். அதில் சிலருக்கு சிறந்த சேவையாளர் விருது, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் வழங்கி பாராட்டுகிறோம். அதனால் அவர்களின் சேவைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களின் சேவையும் தொடர்கிறது” என்ற பிரபாகர், “இந்த இருளர் மக்களுக்கு நாங்கள் செய்திருப்பதை சேவை என்று சொல்வதைவிட, அரசாங்கத்தால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறோம்; அவ்வளவுதான்” என்றார் அடக்கமாக.

விளிம்பு நிலை மக்களுக்காக, தான் சேவை செய்வதோடு மட்டுமல்லாது, தன்னைப் போன்ற சேவையாளர்களையும் ஒன்றிணைத்து ஊக்குவித்து வரும் பிரபாகர் போன்றவர்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in