அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க ஆசையா?: இந்திய மாணவர்களுக்கு கூடும் யோகம்!

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க ஆசையா?: இந்திய மாணவர்களுக்கு கூடும் யோகம்!

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து, அடுத்த இடத்திலிருக்கும் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புகள் கூடியுள்ளன.

அமெரிக்காவில் உயர்கல்வி என்பது இந்திய மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் மத்தியில் எட்டாக் கனியாகவும், கனவாகவுமே நீடித்த காலம் மலையேறி போயிருக்கிறது. அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் மட்டுமே சர்வதேச தரத்திலான கல்வியை பெற முடியும் என்பதையும் வங்கிகளின் கல்விக்கடன்கள் நேர் செய்து வருகின்றன. சர்வதேச உயர்கல்விக்கான அடிப்படை தகுதியும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு அமெரிக்கா இருகரம் நீட்டி வரவேற்கிறது. அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களில் பெரும்பங்கு வகித்த சீனா அதன் இடத்திலிருந்து வழுவத் தொடங்கியதும், அதற்கடுத்த இடத்திலிருக்கும் இந்திய மாணவர்களுக்கு யோகம் தகைந்து வருகிறது.

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களில், 30.6% என்றளவில் சீனர்களே முதலிடம் வகித்தார்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக 21% சேர்க்கையுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பெருந்தொற்று காலம் இந்த எண்ணிக்கையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கரோனா முடக்கம் அகன்ற பிறகும் சீன மாணவர்களின் வழக்கமான எண்ணிக்கை அமெரிக்காவை நாடவில்லை. அவர்களின் எண்ணிக்கை 2014ல் நிலவிய குறைந்த வருகைக்கு திரும்பியிருக்கிறது.

நடப்பாண்டில் மாணவர் விசாவில் அமெரிக்காவில் நுழையும் சீனர்களைவிட, இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் நிலவரப்படி 82 ஆயிரம் மாணவர் விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை சீனர்களைப் பொறுத்தவரை 50 ஆயிரம் மட்டுமே என்கிறது அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறையின் புள்ளி விபரம் ஒன்று. இதுவே கடந்த கல்வியாண்டில் சீனர்கள் 1,10,000; இந்தியர்கள் 62,000 என்று அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகும் சீனா, அமெரிக்கா - சீனா இடையே ராஜீய உறவில் எழும் தடுமாற்றங்கள், சீனர்கள் மத்தியில் பரவும் அமெரிக்க அதிருப்தி, சீன உயர்கல்வி நிலையங்களின் எழுச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சீனா மட்டுமன்றி சௌதி அரேபியா, குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மாணவர்களின் அமெரிக்க உயர்கல்வி சேர்க்கையும் குறைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை குறைவு என்ற போதும், இந்தியா போன்ற இதர தேசங்களின் மாணவர்களுக்கு சாதகமாக அவை மாறியுள்ளன. குறிப்பாக இந்தியர்களுக்கு அவை ஆதாயம் சேர்த்து வருகின்றன.

கடந்த கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1.99 லட்சமாக இருந்தது. வரும் கல்வியாண்டில் அது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. அந்த எண்ணிக்கையில் அங்கமாக விரும்புவோரும் இனி அதற்கான ஏற்பாடுகளில் நம்பிக்கையோடு இறங்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in