மனிதக்கழிவை மனிதனே அகற்றும் அவலத்துக்கு குட்பை சொல்லும் ’ஹோமோசெப்’!

சென்னை ஐஐடி மாணவர்களின் அரிய படைப்பு
’ஹோமோசெப்’ ரோபோவுடன் குமார் குழுவினர்
’ஹோமோசெப்’ ரோபோவுடன் குமார் குழுவினர்

முன்னணி பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்கும் அளவுக்குத் தொழில்நுட்ப ஜாம்பவான்களை உருவாக்கும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு அண்மை உதாரணம், இந்தியாவில் உயர் கல்வி பெற்று அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ட்விட்டரின் சிஇஓவாக பொறுப்பேற்றிருக்கும் பராக் அக்ரவால்.

இத்தகைய அதிநவீன தொழில்நுட்ப அறிவு வளம் கொழிக்கும் தேசத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை குற்றமாக்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும் சாக்கடைகளை, மலக்குழிகளை சுத்தப்படுத்தும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் விஷவாயு தாக்கியும், மலக்குழியில் மூழ்கியும் ஆயிரத்துக்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் இந்தியாவில் மரணமடைந்துள்ளனர். இதில் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 43 தூய்மைப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

ரோபோவை வடிவமைக்கும் பணியில் சிவசுப்பிரமணியன், மனோஜ், பாவேஷ் நாராயண்
ரோபோவை வடிவமைக்கும் பணியில் சிவசுப்பிரமணியன், மனோஜ், பாவேஷ் நாராயண்

தண்டனையும் இல்லை, தீர்வும் இல்லையா?

சட்டப்படி குற்றமாக்கப்பட்ட இந்த இழிசெயலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு, அதனால் உயிரிழந்தவர்களின் இறப்புக்குக் காரணமான ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. மறுபுறம், இயற்கையாகச் செய்யப்பட வேண்டிய விவசாயம்கூட இயந்திரமயமாக்கப்படுகிறபோதும் தூய்மைப் பணிக்கு உகந்த இயந்திரங்கள் இன்னும் இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

விதிவிலக்காக அவ்வப்போது சில இளம் ஆராய்ச்சியாளர்கள் சோதனை முயற்சியாக கழிவகற்றும் ரோபோக்களை வடிவமைப்பதும், ஊடகங்கள் அதைச் செய்தியாக்குவதும் நடந்தேறுகிறது. ஆனால், பயன்பாட்டுக்கு வரும்விதமாக அவை உருவாக்கப்படுவதும் இல்லை, அதற்கான நிதி முதலீடு முறையாகச் செய்யப்படுவதுமில்லை.

இந்தப் புரிதலுடன் செப்டிக் டாங்க் எனப்படும் சாக்கடை தொட்டிகளுக்குள் மனிதர்களுக்குப் பதில் உள்ளிறங்கிச் சுத்தப்படுத்தும் ‘ஹோமோசெப்’ (homosep) ரோபோவை சென்னையில் உள்ள ’சொலினாஸ் இன்டக்ரிட்டி’ என்ற துளிர் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிலத்தடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதை கண்டறிந்து தெரியப்படுத்தும் மற்றொரு ரோபோ இவர்களின் இன்னொரு கண்டுபிடிப்பு.

சமத்துவ தொழில்நுட்பம் வேண்டும்!

சென்னை ஐஐடி வளாகத்துக்குள் செயல்பட்டுவரும் ’சொலினாஸ் இன்டக்ரிட்டி’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி திவான்ஷு குமார். பிஹார் மாநிலம் கயாவைச் சேர்ந்த இவர், சென்னை ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றவர். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்ததால், விளிம்புநிலையினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே தொழில்நுட்ப கல்வியைத் தேர்வு செய்ததாகக் கூறுகிறார் குமார்.

கல்லூரி நாட்களிலிருந்தே சக மாணவர்களுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தத் திட்டங்கள் வகுத்துள்ளார் குமார். இந்நிலையில், சாக்கடை அடைப்பை அகற்றும் ரோபோவை வடிவமைத்து, சோதனைக்கு உட்படுத்தி முழுமையாகத் தயார் செய்யும் பணியில் கடந்த மூன்றாண்டுகளாக ஈடுபட்டு வந்ததாகக் குமார் கூறுகிறார். சென்னையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மனோஜ், ஹைதராபாத்தைச் சேர்ந்த பனிந்தரா தம்மி, கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாவேஷ் நாராயண் ஆகியோருடன் இணைந்து ‘ஹோமோசெப்’ ரோபோவை உருவாக்கிய விதத்தை விளக்கினார் குமார்.

”நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிவு ஏன் இன்னமும் தொடர்கிறது என்று வீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசினால் போதாது. அந்த இழிவை அகற்றும் அக்கறையோடு அது குறித்த தீவிரமான ஆராய்ச்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே தீர்வு கிட்டும். இதனால் முதலாவதாக மலக்குழியின் அமைப்பு, கழிவுத் தொட்டிகளின் அமைப்பை இந்தியா முழுவதும் ஆராய்ந்தோம். ஏற்கெனவே, கேரள இளம் விஞ்ஞானிகள் மலக்குழி சுத்திகரிப்புக்கான ரோபோ வடிவமைத்திருப்பதால் நாங்கள் செப்டிக் டாங்கை தூய்மைப்படுத்தும் ரோபோவை தயாரிக்க ஆரம்பித்தோம்.

செப்டிக் டாங்கின் நுழைவுப் பகுதி குறுகலாகவும் உள்ளே தொட்டி அகலமாகவும் ஆழமாகவும் இருக்கும். அதிலும் அதன் அடிப்பகுதியில் கழிவுகள் தேங்கித் தேங்கி சுட்ட களிமண் போல இறுகிவிடுகிறது. இதனால் அதைச் சுத்தப்படுத்துவது கடினமாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் ஆரம்ப காலத்தில் நாங்கள் உற்றுநோக்கத் தவறியதால் எஃகு கொண்டு செய்யப்பட்ட பருமனான ரோபோவை வடிவமைத்துவிட்டோம். அதைத் தூக்கிச் சுமந்து டாங்கின் குறுகிய மேற்பரப்பு வழியாக செலுத்துவதும் வெளியே பேட்டரி பொருத்தி அதை இயக்குவதும் கடினமாகிப் போனது” என்றார் குமார்.

சோதித்துப் பார்க்கப்படும் 'ஹோமோசெப்
சோதித்துப் பார்க்கப்படும் 'ஹோமோசெப்

வேலையைப் பறிக்காது!

பிறகு, நாமே சோதனை செய்துபார்த்துக் கொண்டிருந்தால் போதாது; களத்தில் அதைப் பயன்படுத்தும் தொழிலாளர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்பதை குமாரும் அவர் நண்பர்களும் உணர்ந்திருக்கிறார்கள். சென்னை தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சில மாதங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

”நாம் உருவாக்கும் இயந்திரம் மாண்புடன் பணிபுரியக் கைகொடுக்க வேண்டுமே ஒழிய, வேலையைப் பறித்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினோம். எங்களது அலுவலகம் உள்ள ஐஐடி வளாகத்துக்கு தூய்மைப் பணியாளர்களை அழைத்துவந்து அவர்களது ஆலோசனைகளை கேட்கத் தொடங்கினோம். அதன்படி பல்வேறு மாற்றங்களை செய்து புதிய ரோபோவை வடிவமைத்தோம். அதன்படி தலைகீழே பிடித்த குடை போல சிறிதாக இருந்த செப்டிக் டாங்குக்குள் நுழைந்ததும் விரியும் ஹோமோசெப் ரோபோவை வடிவமைத்தோம்.

ஹோமோசெப் சாக்கடைத் தொட்டியின் அடியாழம்வரை சென்றதும் அதன் இரும்புத் தகடுகள் விரிந்து கீழே மண்டிக்கிடக்கும் கழிவுகளை வெட்டி எடுத்து வெளியேற்றும். கடினமான தொழில்நுட்பமாக இல்லாமல் எளிதில் இயக்கக்கூடிய வகையில் 5 பொத்தான்கள் கொண்டது இது. குறைந்த எடை என்பதால், இருவரால் எளிதில் தூக்கிச் செல்ல முடியும். என்ஜின் பொறுத்திக்கொண்டு லாவகமாகப் பயன்படுத்தலாம்” என்கிறார் குமார்.

குறைந்த செலவு!

அடுத்ததாக குமாரின் குழுவினருக்கு முன்னால் இருந்த சவால் தயாரிப்புச் செலவு. கேரள இளைஞர்கள் ரூ.40 லட்சம் மதிப்பிலான மலக்குழி சுத்திகரிப்பு ரோபோவை தயாரித்துள்ளார்கள். ஆகவேதான் அதை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க முடியாமல் தேங்கிவிட்டது. இந்நிலையில், ரூ.15 லட்சம் செலவில் ’ஹோமோசெப்’ ரோபோவை இவர்கள் தயாரித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்காக பெரும் எண்ணிக்கையில் தயாரித்தால் நிச்சயம் இன்னும் தயாரிப்பு செலவு குறையும் என்கின்றனர்.

“தற்போதைக்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின்கீழ் கெயில் அறக்கட்டளை, கேப்ஜெமினி நிறுவனம், வின் அறக்கட்டளை மற்றும் தேசிய பங்குச்சந்தை அறக்கட்டளையினர் ’ஹோமோசெப்’ தயாரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறார்கள். கூடுதலாக அரசாங்கத்தின் அங்கீகாரமும் நிதி ஒதுக்கீடும் கிடைத்தால், 27 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய வேண்டியதை இப்போதாவது பூர்த்தி செய்துவிடலாம்” என்று முடித்தார் குமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in