`பரிந்துரை கடிதம் ரத்து'- கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களின் உரிமை பறிப்பு

`பரிந்துரை கடிதம் ரத்து'- கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களின் உரிமை பறிப்பு
'தி இந்து’ கோப்புப்படம்

மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களின் உரிமை திடீரென பறிக்கப்பட்டுள்ளது. இது எம்.பிக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகளை நடத்துகிறது. இது அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளி என்பதால் அரசுப்பள்ளியில் பயில்வதைப்போல் கல்விக்கட்டணம் எதுவும் இங்கு இல்லை. அதேநேரத்தில் மிக, மிகக் குறைவான அளவுக்கு புத்தகக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதிலும் இங்கு இந்தி, ஆங்கிலம் ஆகியவையும் தரமாக போதிக்கப்படுவதால் பெற்றோர்கள் மத்தியில் கேந்திர வித்யாலயா பள்ளிகளின் மீது பெரிய மோகம் உள்ளது. இந்த கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பெரும்பாலும் மத்திய அரசின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அவர்கள் பணியிட மாறுதலுக்கு உள்ளாகும்போதும், பணி செய்யும் இடத்தில் எளிதாக பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவுமே இந்தப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கேந்திர வித்யாலயா பள்ளிகளின் தலைவராக அந்த, அந்த மாவட்ட ஆட்சியரே உள்ளனர். இதன்படி யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதையும் ஆட்சியரே முடிவுசெய்வார். அதுபோக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களுக்கு பத்து சீட் வழங்கப்படுகிறது. அதற்கு மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் தங்கள் பரிந்துரைக் கடிதத்தைக் கொடுக்கமுடியும். அதன் பேரில் பத்து பேருக்கு சீட் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு, கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை பள்ளி நிர்வாகம் சார்பில் பரிந்துரை கடிதம் பெறக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அப்துல்லா
அப்துல்லா

கேரளத்தில் மொத்தம் 20 எம்.பிக்கள் உள்ளனர். அவர்கள் ஒருசேர கடந்த நாடாளுமன்றத் தொடரில்கூட எம்.பிக்களுக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலா 50 இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை எம்.பிக்கள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.

அதேநேரத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திமுக எம்.பி அப்துல்லா வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன் முகநூலில்,’ ’ஒரு எம்.பி பத்து மாணவர்களைப் பரிந்துரைக்கலாம் என்னும் நடைமுறை இருந்தது. இதுவரை 364 பேர் என்னிடம் பரிந்துரை கடிதம் கேட்டு மனு அளித்து இருப்பார்கள். அத்தனை பேரும் முக்கியமானவர்கள்தான்! இந்த கேந்திரிய வித்யாலயா பரிந்துரைகளால் ஏற்பட்ட நல்லபெயரைவிட, செய்ய முடியாமல் போனதில் பிறரிடம் ஏற்பட்ட கெட்டபெயரே மிக அதிகம். இந்த நடைமுறை நீக்கப்பட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே!” என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in