டிசி கொடுப்பது கல்வியில் முன்னேறிய மாநிலத்துக்குத் தலைக்குனிவு!

அறுந்து கிடக்கும் ஆசிரியர் - மாணவர் உறவை சரிசெய்வது எப்படி?

டிசி கொடுப்பது கல்வியில் முன்னேறிய மாநிலத்துக்குத் தலைக்குனிவு!

இரண்டாம் உலகப் போரில் விமானப்படை வீரராக பணியாற்றிய மார்க் தாக்கரே போருக்குப் பிறகு வேலையில்லா பட்டதாரி ஆக்கப்படுகிறார். கறுப்பினத்தவர் என்பதால் அவருக்குப் பலவித பணிவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகாலம் வேலை தேடி அலைந்தவருக்கு லண்டனில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைக்கிறது. ஆனால், எதற்கும் அடங்காத பதின்பருவ மாணவர்களின் கூடாரம் என்று முத்திரைக் குத்தப்பட்ட பள்ளி அது. வகுப்பறைக்குள் நுழையும் முன்பே மார்க் தாக்கரேவுக்கு அவமதிப்பும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

வகுப்பெடுக்கத் தொடங்கினாலே மாணவர்கள் கத்தி கூச்சலிடுகிறார்கள், கெட்ட வார்த்தை பேசுகிறார்கள், மாணவிகள் சேனிட்டரி நேப்கினை வகுப்பறையிலேயே கொளுத்திப் போட்டு அருவருக்கச் செய்கிறார்கள். பொறுமை இழுக்கும் மார்க் திட்டித்தீர்க்கிறார், மிரட்டுகிறார். அதனால் பலனேதும் இல்லை. நாளுக்கு நாள் பிரச்சினைகளும் அச்சுறுத்தலும் அதிகரித்துக் கொண்டே போக, வளரிளம் பருவத்தினரைச் சீர்படுத்த இது தான் வழி என்பதை உணர்கிறார்.

’டு சார் வித் லவ்’  படத்திலிருந்து...
’டு சார் வித் லவ்’ படத்திலிருந்து...

சக மாணவிகளை ஏளனமாகப் பேசும் மாணவர்களின் பேச்சுவழக்கை மாற்றி கண்ணியமாகப் பெண்களை விளிக்கக் கற்றுத்தருகிறார் மார்க். இதனால் இருதரப்பிலும் சிறிய அளவில் நன்னடத்தை வெளிப்படத் தொடங்குகிறது. கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அருங்காட்சியகம், கலைக்கூடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். அதன் மூலம் நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம் போன்றவற்றில் தாங்கள் நவநாகரிகம் என்று நினைத்துவந்தவை பல நூற்றாண்டுக்கு முன்பு பின்பற்றப்பட்டவையின் சுழற்சி என்பது தெரியவர, அதுவரை தறுதலைத்தனமாக சுற்றித்திறிந்த பல மாணவ - மாணவிகள் தாங்கள் எதையும் புதிதாக சாதித்துவிடவில்லை என்பதை மெல்ல உணர்கிறார்கள்.

இப்படி தனது அன்பாலும் அறிவாலும் ஆளுமையாலும், தறிகெட்டுத் திரியும் மாணவர்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர் பிரைத் வைட்டின் சுயசரிதை நாவல், ‘டு சார் வித் லவ்’ (To Sir with Love). 1959-ல் எழுதப்பட்ட இந்த நாவலைத் தழுவி அதே பெயரில் ஆங்கில திரைப்படமும் வெளிவந்துள்ளது. இப்படமும், நாவலும் தமிழ்கூறும் ஆசிரியர் நல்லுலகிலும் பிரபலம். ’நிறத்தைத் தாண்டிய நேசம்’ என்ற தலைப்பில் இந்நாவல் பேராசிரியர் ச.மாடசாமியின் மொழிபெயர்ப்பிலும் அண்மையில் வெளிவந்தது.

அரை நூற்றாண்டுக்கும் முன்னர் வெளிவந்த ’டு சார் வித் லவ்’ நாவல் மற்றும் திரைப்படத்தின் முற்பாதி இன்றைய தமிழக பள்ளிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் பிரச்சினையை அச்சு அசலாக பிரதிபலிப்பவை. வகுப்பறையில் ஆசிரியரை மாணவர்கள் மிரட்டுவது, மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்குவது, ஆசிரியை வகுப்பெடுத்துக் கொண்டிருக்கையிலேயே வகுப்பறைக்குள் நடனமாடுவது, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தோடு சுற்றித்திறிவது என கடந்த சில வரங்களில் எல்லோரையும் கவலையுறச் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்களின் காணொலிகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆனால், இந்த சிக்கலைக் கையாள்வதில் ‘டு சார் வித் லவ்’ பாணி தமிழகத்தில் நிகழுமா என தெரியவில்லை. காரணம் , தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி), நன்னடத்தை சான்றிதழ் வழங்கும்போது, என்ன காரணத்துக்காக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டு, பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.

இதற்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுச்சமூகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வலுத்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் இரண்டு தரப்பு நியாயங்களையும் எடுத்துரைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். மாணவர்களைப் பண்படுத்த வேண்டிய ஆசிரியர்களைப் பிரம்பெடுக்கச் சொல்வதும், ஏற்கெனவே கற்றல் இடைவெளியாலும் வழக்கமாகக் கல்விமுறையிலிருந்து விலகிப்போனதால் நடத்தைக் கோளாறிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை நிரந்தரமாகத் தண்டிப்பது எந்த வகையிலும் கல்வியில் முன்னேறிய மாநிலத்தின் அடையாளம் அன்று.

இந்நிலையில், சூழலையும் சிக்கலையும் ஏற்றுக் கொண்டு தீர்வை நோக்கிச் செல்லும் முனைப்போடு உளவியல் நிபுணருடன் உரையாடினோம். பள்ளிக்கூடத்துக்கும், சிறைச்சாலைக்கும் வித்தியாசம் இல்லாத கல்வி முறை நீடிக்கும்வரை மாணவர்களைத் தண்டிப்பதாலோ அல்லது உளவியல் ஆலோசனை வழங்குவதாலோ மட்டும் பிரச்சினை ஓய்ந்துவிடாது என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார் குழந்தை மற்றும் பதின் பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி சி. ராஜரத்தினம்.

ஆர்த்தி சி. ராஜரத்தினம்
ஆர்த்தி சி. ராஜரத்தினம்

பதின்பருவ குழந்தைகளிடம் வெளிப்படும் நடத்தை சிக்கலைச் சீர் செய்யத் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளுடன் இணைந்து செயலாற்றிவரும் இவர் கூறுகையில், ”ஆசிரியரிடம் அடாவடியாகப் பேசி அவரை அடிக்கப்போவதாக மிரட்டும் மாணவரின் வீடியோவில் கவனிக்க வேண்டியது அந்த மாணவன் அவரை அடிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால் அவரை உடனடியாக அடித்திருக்க முடியும். ஆனால், கவன ஈர்ப்புக்காக மட்டுமே அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான். ஒரு ஆசிரியராக இத்தகைய சூழலைச் சுமுகமாகக் கையாள கற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆசிரியரோ பாதிக்கப்பட்டவரைப்போல் செய்வதறியாமல் அச்சத்தில் மூழ்கிக்கிடக்கிறார்” என்றார்.

மாணவர்களிடம் நடத்தைக் கோளாறு வெளிப்படுவது ஒன்றும் புதிதல்ல. பதின்பருவத்தில் ஹார்மோன் தடுமாற்றம் ஏற்படுவதால் எந்நேரமும் தன்னை 500 பேர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற கற்பனை உண்டாகும். தனது செயலுக்கான விளைவை யோசிப்பதைக் காட்டிலும் உணர்ச்சிபூர்வமாக எதிர்வினையாற்றும் பகுதிதான் மூளையில் கிடுகிடுவென வளரும். இத்தகைய நிலையில் இருக்கும் மாணவனின் வீடியோ வைரலாக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் பார்க்கும்போது அந்த மாணவன் தன்னைக் கதாநாயகனாகவே முடிவுசெய்துகொள்வான். இதேபோன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் இறங்க மேலும் பலர் தூண்டப்படுவார்கள்.

இதுகுறித்து மேலும் பேசிய ஆர்த்தி சி. ராஜரத்தினம், ”இதுபோன்று தவறிழைத்த மாணவர்களையெல்லாம் பள்ளியை விட்டே வெளியேற்றுவோம் என்று கல்வி அமைச்சரே கூறும்போது அந்த மாணவரின் எதிர்காலத்தை நீங்கள் சூனியமாக்குகிறீர்கள் என்பதுதான் அர்த்தம். உங்களுடைய நோக்கம் என்ன? ஆசிரியரை மட்டும் பாதுகாப்பதா அல்லது அரசுப் பள்ளிகளை நம்பி வந்த சாமானியர் வீட்டு குழந்தைகளை வளர்த்தெடுப்பதா? பெரும்பணக்காரர்களின் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியின் மாணவர்கள் சிலர் இரண்டாண்டுகளுக்கு முன்பு தெருவில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களைக் கொளுத்தினார்கள். அப்போது அவர்கள் என்ன பள்ளியைவிட்டா வெளியேற்றப் பட்டார்கள்? வசதி படைத்தவர்களின் பிள்ளையென்றால் மன்னிப்பு; ஏழை விட்டு பிள்ளைகள் என்றால் தண்டனையா? தண்டிப்பதோ அல்லது உளவியல் சிக்கல் என்று முடிவுகட்டி அடாவடியாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கொடுப்பதோ மட்டும் தீர்வை அளித்துவிடாது.

கடந்த பல ஆண்டுகளாக, மாணவர்களோடு ஆசிரியர்கள் எப்படி கூடிவாழ்வது என்பது குறித்து பல பள்ளிகளுக்குச் சென்று உரையாடி வருகிறேன். அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், சேட்டை செய்யும் குழந்தைகளை அடித்தால் மட்டுமே திருத்த முடியும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள். ’பெற்றோரே அவர்களை அடிக்கும்போது நாங்கள் அடித்தால் என்ன?’ என்பதே அவர்களது கேள்வியாக உள்ளது. நீங்கள் வன்முறையின் மூலம் மாணவரைத் திருத்த நினைத்தால் அவர்கள் வளர்ந்த பிறகு அதைத்தான் உங்களிடமும் பிரயோகிப்பார்கள். ஏனென்றால், உங்களிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. குழந்தைகளின் ஆர்வத்தை, திறமையை அறிந்து அதற்கேற்ற மாதிரி கல்வி கற்பிக்கும் முறை நம்மிடம் இல்லை.

மணி அடித்தால் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்து பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு விருப்பம் உள்ளதோ இல்லையோ ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து அவர் கற்பிப்பதை கேட்டு, கற்று, தேர்வெழுதி, தேர்ச்சி அடைந்தாக வேண்டும். இப்படி தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகளைத் திருத்தும் கல்வி அணுகுமுறைதான் இன்னமும் மாற்றமில்லாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அடிதடியை விடவும் கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு பதின்பருவ குழந்தைகள் மத்தியில் குடி, புகை, போதை போன்ற தீயப்பழக்கங்களும், பாலியல் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கமும் அதிகப்படியாகி உள்ளது. செய்வதறியாமல் கிராமப்புறங்களிலிருந்து கூட அன்றாடம் ஆசிரியர்களின் அலைபேசி அழைப்புகள் வருகிறது. இவற்றையெல்லாம் சீர் செய்யும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே அரசு டிசி கொடுப்போம் என்று மிரட்டுகிறது. ஆனால், இது சரியான தீர்வு அல்ல” என்றார்.

கல்வி என்பதை சூழலியல் அமைப்பாக அணுக வேண்டியது அவசியம். சினிமா, குடும்பம், பள்ளிக்கூடம் அத்தனையும் வன்முறை மூலம் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும், பேசி பயனில்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு முனையில் குழந்தையிடம் வெளிப்படும் நடத்தை தடுமாற்றத்தை இணை ஒழுங்கு முறைபடுத்த (Co-regulate) பெற்றோருக்கு நேரமில்லை, ஆசிரியருக்குப் பொறுமை இல்லை. இந்த சங்கிலி தொடர்பில் உள்ள ஒவ்வொரு கண்ணியும் இணக்கமாகச் சீராக இருந்தால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்கும் மாணவர்கள் சிறப்பாக வெளிவருவார்கள்.

தனிப்பட்ட மாணவர்களுடைய சிக்கல் அல்ல இது. கடந்த இரண்டாண்டுகளில் நேரடியாகப் பள்ளிக்கு வராததால் மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையிலான பந்தம் பழுதடைந்துள்ளது. சீர்குலைந்துபோன ஆசிரியர்-மாணவர் உறவைப் பலப்படுத்துவதே தீர்வை நோக்கிய முதல் படி. அதைவிடுத்து மாணவர்களை பலிகடா ஆக்குவது பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போக்கே அன்றி வேறில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in