`தொடக்க விழாவைப் போல, வெற்றி விழாவும் முக்கியமானது'- `எண்ணும் எழுத்தும்' திட்டத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்!

`தொடக்க விழாவைப் போல, வெற்றி விழாவும் முக்கியமானது'- `எண்ணும் எழுத்தும்' திட்டத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்!

மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கரோனா காரணத்தினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் நடைபெறாமல் போனது. இதையடுத்து வீட்டிலிருந்தே குழந்தைகள் பாடத்தைக் கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கற்றலில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதனைக் குறைக்கவும், குழந்தைகள் கற்றலின் ஆற்றலை அதிகப்படுத்தவும் எண்ணும் எழுத்தும் என்ற முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான படிப்பு முறைகள் மட்டும் போதாது. புதிய யுத்திகள் அவர்களுக்குத் தேவை என்பதால்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் தனது கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு உயர்மட்ட குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் கல்வியாளர்களும் இருப்பார்கள்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு என ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனிக்குழு உருவாக்கப்பட்டிருக்கும். இவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தி இந்த திட்டத்தைச் சீர்படுத்தி செழுமைப்படுத்துவார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களில், 92,356 ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ‘இளமையில் கல்’ என்றார் ஔவையார். ஒரு குழந்தை தனது ஐந்து வயது அடைந்து விடுவதற்குள் 90 விழுக்காடு அதன் மூளை வளர்ந்து விடுகிறது. 3-5 வயதுக்குள் குழந்தையின் சிந்தனை ஆற்றல் பெருகிவிடுகிறது. இந்த தொடக்கப் பருவத்தில் கல்வியைக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், அரசுக்கும் உண்டு.

தொடக்கக் கல்வியை வெறும் கல்வியாக மட்டும் பார்க்க முடியாது. 2027-ம் ஆண்டிற்குள் தமிழ் நாட்டில் உள்ள 8 வயதுக் குழந்தைகள் அனைவரும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்கு. 2022-23-ம் ஆண்டிலிருந்து மூன்று வருடம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,2,3 ஆகிய வகுப்புகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும் பயிற்சி நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவை விட மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறும் வெற்றி விழாவையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in