அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி

பள்ளிக் கல்வித் துறையின் பயனுள்ள செயல்பாடு
கணினி பயிற்சி பெறும் ஆசிரியர்கள்
கணினி பயிற்சி பெறும் ஆசிரியர்கள்

தமிழ்நாடு முழுவதுமுள்ள ஒட்டுமொத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஒரேயடியாக அடிப்படைக் கணினிப் பயிற்சியை இணையவழியில் வழங்கி சாதித்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித் துறை.

பொதுவாகவே ஒரு பயிற்சி என்பது ஒட்டுமொத்தமான ஆசிரியர்களுக்குமானதாக இருக்காது. உதாரணமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படாது. அதேபோல உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் எதுவும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படாது.

அதனால், அனைத்து ஆசிரியர்களுக்குமான பயிற்சி என்பதற்கு இதுவரை வேலையே இல்லை. ஆனால், முதன்முறையாகத் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஒரு பயிற்சியாக இந்த அடிப்படை கணினி பயிற்சியைத் தமிழக அரசு நடத்தி முடித்திருக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நவீனப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்.

‘அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்’ எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இலக்கை நோக்கிய பயணமாகப் பல பள்ளிகளைப் பார்வையிடத் தொங்கியுள்ளார். அரசுப் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு தூரம் மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது, என்ன மாதிரியான தேவைகள் இருக்கின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாய்வு செய்து வருகிறார்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் முழுமையாகச் செயல்படாத நிலையில், இந்தக் காலத்தைப் பயனுள்ள வகையில் மாற்றிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணியாற்றும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணினிப் பயிற்சி வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. அது, 4 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைப் பெருமையோடு சுட்டிக் காட்டுகிறார்கள் கல்வித் துறை அதிகாரிகள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மாதிரியான நிகழ்வு இது என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கிடந்த உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை இயங்க வைத்தது இன்னொரு பயன் என்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பல கோடி ரூபாய் செலவில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு, அவை முழுமையாகப் பயன்படுத்தாமல் வெறுமனே இருந்தன. ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சிக்காக தற்போது அந்த ஆய்வகங்களும், கணினிகளுமே பயன்படுத்தப்பட்டன. மேனிலைப் பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் 18 ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் 8 ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி இணையம் மூலமாக அளிக்கப்பட்டது.

மொத்தம் 5 கட்டங்களாகத் திட்டமிடப்பட்ட இந்தப் பயிற்சியின் 4-ம் கட்டப் பயிற்சி நாளையோடு (09/09/2021) முடிவடைகிறது. இதுவரையிலும் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி நடைபெறவிருக்கிறது.

இப்பயிற்சி நிறைவு பெறும்போது தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்துவகை அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கணினியில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர் என்னும் பெருமை பள்ளிக் கல்வித் துறைக்குக் கிடைக்கும்.

காமதேனு இணையதளத்துக்காக இதுகுறித்து ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமாரிடம் கேட்டபோது, “ஆயிரம் கணிப்பொறிகள் ஒன்று சேர்ந்தாலும், ஓர் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலுக்கு ஈடாகாது. அதேநேரத்தில் நல்ல ஆசிரியர் என்பவர் தொடர்ந்து கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், தன்னைத்தானே மாணவராகக் கருதி தனது கற்பித்தல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள இந்த கணினி அறிவு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரைக்கும் கணினி மேல் ஆர்வமில்லாதவர்கள்கூட இந்த 5 நாள் அடிப்படைப் பயிற்சியில் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

இந்த அடிப்படைப் பயிற்சியை அனைத்து ஆசிரியர்களும் பெற்றுவிட்டார்கள் என்பதால், இனி வரும் நாட்களில் இணையவழிக் கல்வியிலான பாடங்கள் என்றாலும் சரி, பயிற்சிகள் என்றாலும் சரி அவற்றுக்கு இணையவழியில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரேநேரத்தில் இணைத்துவிட முடியும். அதேபோல மாணவர்களை இணைக்கவும் இது உதவும். அனைத்து ஆசிரியர்களுக்குமான இப்பயிற்சி தமிழக அரசின் ஓர் இமாலய சாதனையே” எனக் குறிப்பிட்டார்.

தனியார்ப் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் இத்தகைய மாற்றங்கள் மேலும் செறிவூட்டும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in