`பெரிய கனவுகளை காணுங்கள்'- மாணவர்ளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

`பெரிய கனவுகளை காணுங்கள்'- மாணவர்ளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

"மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும், கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை அருகேயுள்ள பாலாடா ஏக்லவ்யா மாதிரி மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி மற்றும் விடுதி வளாகத்தை பார்வையிட்ட ஆளுநர், மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தார். பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் ஆகியவற்றை ஆளுநர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மாணவர்களிடம் பேசிய அவர், "பெரிய கனவுகளை காணுங்கள், கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, வெளி உலகத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுடன் உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர், சிறந்த முடிவுகளுக்கு நேரத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகளை வழங்கினார். மாணவர்கள் தங்கள் கனவுகளை பகிர்ந்து கொண்டு, அவற்றை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஆளுநரிடம் ஆலோசனை கேட்டனர். மாணவர்களின் முயற்சிகளில் சிறந்து விளங்கவும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தினார்.

மின்னஞ்சல் மூலம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு மாணவர்களை ஊக்குவித்த ஆளுநர், தேவையான நேரத்தில் தனது ஆலோசனைகள், வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை அவர்களுக்கு உறுதியளித்தார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்து, மாணவர்களின் கல்வி மற்றும் சீர்ப்படுத்தலில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவதை ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். மதிப்பு அடிப்படையிலான கல்வியுடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வழிகாட்டுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியரை தனது வழிகாட்டியாக ஒதுக்குமாறு தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in