இரவிலும் ஓயாத வனக் கல்லூரி மாணவர் போராட்டம்!

கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடரும் என அறிவிப்பு
இரவிலும் ஓயாத வனக் கல்லூரி மாணவர் போராட்டம்!
இரவிலும் தொடரும் மாணவர் போராட்டம்

மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரியின் பட்டுப்புழுவியல் துறை மாணவ-மாணவியர் தொடர் போராட்டம் – பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், அடர்ந்த வனப் பகுதிக்குள் அமைந்துள்ள வனக் கல்லூரி வளாகத்தில் இவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பட்டுப்புழுவியல் துறை பட்டப்படிப்பு 2011-ம் ஆண்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் இத்துறை, 2014-ம் ஆண்டில் இப்பல்கலையின்கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

மாணவ-மாணவியர்
மாணவ-மாணவியர்

துறையாக இயங்கும் பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்தவே இந்த மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்நிலையில், 2021 – 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், இளநிலை அறிவியல் (B.sc sericulture) படிப்பான பட்டுப்புழுவியல் இடம்பெறவில்லை.

இதனால், இத்துறையின்கீழ் பயின்று வரும் மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் துணை பேராசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்காலிகமாக 2 ஆண்டுகளுக்கு இத்துறை முடக்கப்பட்டுள்ளது என பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தங்களது எதிர்காலம் குறித்து அச்சத்தில் உள்ளனர் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயின்று வரும் பட்டுப்புழுவியல் துறை மாணவ-மாணவியர். தொடர்ந்து இத்துறையின்கீழ் பயிலும் மாணவ-மாணவியர் 77 பேர், கல்லூரி வளாகத்தினுள் உள்ள பட்டுப்புழுவியல் துறை கட்டிடத்தின் முன்பு நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாண்டு மாணவர் சேர்க்கையில் மீண்டும் பட்டுப்புழுவியல் துறையை இணைக்க வேண்டும், தங்களது துறையை கல்லூரியாக மாற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதனிடையே, காலை முதல் கல்லூரி முதல்வர் பார்த்திபன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நேற்று இரவும் போராட்டம் தொடர்ந்தது.

உங்களுக்கான வசதிகள் செய்து தரப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், முக்கிய கோரிக்கைகள் குறித்து வாக்குறுதி தர மறுப்பதால் போராட்டத்தை தொடர்வதாகவும், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.