சீரழிந்த உயர் கல்வித்துறை; சீர்படுத்த வழியில்லையா?

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி hindu கோப்பு படம்

“ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாழாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும்வரையில் ஓயமாட்டோம்” என்று திமுக உரத்துப் பேசுகிறது. இன்னொரு புறம், பள்ளிக் கல்வியை முடிக்கும் பெண் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது தமிழக அரசு.

எல்லாம் சரி, நம்முடைய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இங்கே எப்படியிருக்கின்றன? தமிழக உயர் கல்வியின் தரம் எப்படியிருக்கிறது?

ஏழைகளுக்கு வாய்ப்புக் குறைவு

பேரவையில் ஒவ்வொரு எம்எல்ஏ பேசும்போதும், தங்களது தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கத் தவறுவதில்லை. கடந்த வெள்ளிக்கிழமைகூட பூந்தமல்லி திமுக எம்எல்ஏ-வான கிருஷ்ணசாமி, தனது தொகுதிக்கோர் அரசு கல்லூரி கேட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நீண்ட நேரம் மன்றாடினார். அமைச்சரும், ஆகட்டும் பார்க்கலாம் என்பதை நீட்டி முழக்கிப் பதிலாகத் தந்தார்.

இதெல்லாம் வெறுமனே எம்எல்ஏ-க்களின் கோரிக்கையல்ல. ஒவ்வொரு தொகுதியிலும் கல்லூரியில் சீட் கிடைக்காமல் அலைபாயும் பெற்றோர்களின் தொடர் கோரிக்கையே எம்எல்ஏ-க்கள் வாயிலாக பேரவையில் எதிரொலிக்கின்றன. இத்தனைக்கும் கடந்த கூட்டத் தொடரின்போது, 10 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார் அமைச்சர் பொன்முடி. ஆனாலும், ஏழைப் பிள்ளைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எப்படி நீட் வருவதற்கு முன்பே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்ததோ, அதே நிலைதான் இப்போது உயர் கல்வியிலும் இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 2,200 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையோ வெறும் 150 தான். பெரும்பாலான அரசு கல்லூரிகளில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு உள்ளிட்ட ஐந்தே ஐந்து ஹைதர்கால பாடப்பிரிவுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அந்த இடத்தையும்கூட தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கணிசமாகப் பிடித்துவிடுகிறார்கள். இங்கேயும் இடம் கிடைக்காமல் தனியார், சுயநிதிக் கல்லூரிகளில் ஃபீஸ் கட்டவும் வழியில்லாமல் அரசு பள்ளி மாணவர்களின் கனவெல்லாம் கானல் நீராகி விடுகிறது.

ஊழல்... ஊழல்!

உயர் கல்வித்துறை, ஊழல், முறைகேட்டிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. மற்ற துறைகளில் அதிகாரிகளின் தன்மைக்கேற்ப ஊழலும், முறைகேடும் மாறுபடும். ஆனால், உயர் கல்வித்துறையில் ஊழலும், முறைகேடும் ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாப்படி சீராக செயல்படுத்தப்படுகிறது. காரணம், எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் உயர் கல்வித்துறையில் துணைவேந்தர், பேராசிரியர் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் நியமனம் வரையில் ஒரு தொகையை நிர்ணயித்து வசூல் செய்கிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதம் ஆளும் தரப்புக்குக் கொடுத்தால்தான், அந்த நியமனம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் நேர்மையாக செயல்பட நினைக்கும் ஒரு சில அரசு உதவி பெறும் கல்லூரிகளும்கூட, அரசியல்வாதிகளின் நச்சரிப்பு தாங்காமல் தங்கள் மீது ஊழல் கரையைப் பூசிக்கொள்கின்றன.

"ஒரு 30, 35 மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பதாக நினைத்துக்கொண்டு பணத்தைக் கொடுங்க, அப்புறம் வருவதெல்லாம் லாபம் தானே?" என்று சொல்லியே பணம் பறிக்கிற துறையாக உயர்கல்வித்துறை இருக்கிறது. பல கோடி கொடுத்து துணை வேந்தர் பதவிக்கு வருபவர்கள் ஊழியர் நியமனம், டெண்டர், கொள்முதல், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுக்கு அனுமதி கொடுப்பது என அனைத்திலும் புகுந்து விளையாடுகிறார்கள்.

அரசு கல்லூரிகள் வெறும் நான்கைந்து பாடப்பிரிவுகளுடன் தேங்கி நிற்க, உதவி பெறும் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் சுயநிதிப் பிரிவுகளின் கீழ் வருடந்தோறும் காலத்துக்கேற்ப புது புதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு கட்டணமாகப் பெருந்தொகையை வசூலிக்கிறது. பள்ளிக்கூட கட்டணக் கொள்ளையிலாவது அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாவிட்டாலும் எச்சரிக்கையாவது விடுக்கப்படுகிறது. ஆனால், கல்லூரி விஷயத்தில் எதுவுமே கண்டுகொள்ளப்படுவதில்லை. இப்படி பணத்தைக் கொட்டிக் கொடுத்து படிக்கும் மாணவர்கள், எந்தச் சமூக மதிப்பீட்டையும் கற்றுக்கொள்ளாமல் பணம், பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடனே வெளியே வருகிறார்கள். பணம் இல்லாதவர்களின் பிள்ளைகளோ, தரமான கல்வி பெற முடியாமல் ஏதோ ஒன்றை படித்துவிட்டு, குறைந்தபட்ச ஆங்கில அறிவும் இல்லாமல், பாட அறிவும் இல்லாமல் வெற்றுக் காகிதமாக பட்டத்தை வைத்துக்கொண்டு வேலை தேடி அலையும் பரிதாப சூழல் தான் தமிழ்நாட்டில் இருக்கிறது.

எஸ்.கிருஷ்ணசாமி
எஸ்.கிருஷ்ணசாமி

தீர்வு என்ன?

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன என்று கல்வியாளர் எஸ்.கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது, "தமிழகத்துக்கான புதிய கல்விக்கொள்கையை வகுக்க அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அதில் உயர் கல்விக்கான பிரதிநிதிகளே இல்லை. எனவே, உயர் கல்விக்கென தனியாக ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதேநேரத்தில், இனி உயர் கல்வித்துறையில் நடக்கிற எந்தப் பணிநியமனத்துக்கும் பணம் வாங்க மாட்டோம் என்பதை ஒரு கொள்கைப் பிரகடனமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்கள் சம்பளத்தில் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் வெறும் 15 ஆயிரம்தான் சம்பளம் தருகிறார்கள். அதையே தனியார் பொறியியல் கல்லூரிகளும் கடைபிடிக்கின்றன. அதேநேரத்தில் சில பிரம்மாண்டமான தனியார் பல்கலைக்கழகங்களோ அரசு பேராசிரியர்களுக்கு இணையான சம்பளமும், சலுகைகளும் தருகின்றன. இதனால் தரமான ஆசிரியர்கள் எல்லாம் அங்கு இடம்பெயர்ந்துவிட, ஏழை மாணவர்களின் கல்வித்தரம் மேலும் மேலும் குறைகிறது. எனவே, ஊதிய வேறுபாட்டையும் அரசு களைய வேண்டும்" என்றார்.

முரளி
முரளி

நம் கல்லூரி நம் சொத்து...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கும் குறைந்தது 100 கோடி ரூபாய் நிதி கொடுத்தால்தான் அவை உயிர் பிழைக்கவே முடியும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இதற்கும் துணைவேந்தர், பேராசிரியர்களைப் பணம் வாங்கிக்கொண்டு பணி அமர்த்தியதற்கும் நேரடித் தொடர்புண்டு என்கிறார்கள் கல்வியாளர்கள்.

"தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தானாக வந்தவையல்ல. அவற்றைக் கொண்டுவருவதற்கு உள்ளூர் மக்கள் நிறையப் போராடியிருக்கிறார்கள். நிலம் உள்ளிட்டவற்றை நன்கொடையாகத் தந்திருக்கிறார்கள். ஆனால், வாங்கும்போது இருந்த அக்கறை அவற்றைப் பேணிக்காப்பதில் இல்லை என்பதுதான் பிரச்சினைகளின் மூல காரணம். அதேபோல, இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டுவரப்பட்ட கல்லூரிகளும் சரி, பல்கலைக்கழகங்களும் சரி சுற்றியுள்ள மக்கள் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தில் மட்டுமே குறியாக இருந்தது மக்களுக்கும் அந்த நிறுவனங்களுக்குமான உறவு கெட்டுப்போனதற்கு முக்கியக் காரணம்.

அரசுப் பள்ளிகளுக்கும், மக்களுக்கும்கூட ஓரளவு உறவு இருக்கிறது. பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வி மேலாண்மைக்குழு என்ற பெயரில் ஒரு சில பெற்றோர்களாவது பள்ளிகளைப் பார்க்கிறார்கள். சிலர் நன்கொடை வழங்குகிறார்கள். ஆனால், அரசு கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் இத்தகையை நடைமுறை எதுவும் இல்லை. இனியேனும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரிகளில் சர்வாதிகாரத்தன்மை ஒழிக்கப்பட்டு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பொறுப்புடன் கூடிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர்கள் எல்லோரும், தங்களிடம் படிக்கும் மாணவனின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பச் சூழலைப்புரிந்துகொள்ள முயல வேண்டும். இரு தரப்பிலும் பொறுப்புணர்வு இருந்தால்தான், கல்லூரி, பல்கலைக் கழகங்களை ஊழல், முறைகேட்டில் இருந்து மீட்க முடியும்" என்கிறார் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் முரளி.

வே.வசந்திதேவி
வே.வசந்திதேவி

அதிகாரம் தேவை...

"மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்குப் போனதில் இருந்தே பிரச்சினை தொடங்கிவிட்டன. பள்ளிக்கல்வித்துறையிலாவது சில அதிகாரங்கள் மாநிலத்திடம் இருக்கின்றன. உயர் கல்வித்துறை என்பது ஏற்கெனவே யுஜிசி என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இப்போது அது இன்னும் அதிகமாகிவிட்டது. அடுத்ததாக, நீட் தேர்வைப் போலவே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. அதனை தமிழக அரசு எதிர்ப்பது உண்மையிலேயே நல்ல விஷயம்.

ஆனால், மத்திய அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் தமிழக அரசும்கூட, அந்த அதிகாரத்தை பல்கலை, கல்லூரிகளுக்குத் தர விரும்புவதில்லை. ஆசிரியர் நியமனங்கள் தொடங்கி அத்தனையிலும் தலையிடுகிறது. கல்வித் தரத்தைப் பொறுத்தவரையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கையை விட கீழே இருக்கிறது இந்தியா. ஆனால், புதிய கல்விக்கொள்கையோ உலகளாவிய தரத்திற்கேற்ப நமது தரத்தை உயர்த்தப் போகிறோம் என்று சொல்லி, மிகமிக பிற்போக்குத்தமான பரிந்துரைகளைச் சொல்கிறது.

2015-ம் ஆண்டு கணக்குப்படி கல்வித்தரத்தில் 191 நாடுகளில் 145-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வந்தால், அது இன்னும் கீழேதான் போகும். எனவே, கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டுவருவதுடன், கல்விக்கொள்கையை அந்தந்த பல்கலைக்கழங்களே, மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் தீர்மானிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது. காரணம், வளர்ந்த நாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்குத் தமிழகம் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று தமிழக முதல்வரும், அமைச்சரும் அடிக்கடி சொல்கிறார்கள். அதை உயர் கல்வி விஷயத்திலும் சாதித்துக் காட்டினால் பாராட்டலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in