டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் - பாஜக மாணவர் அமைப்பு வெற்றி!

ஏபிவிபி சார்பில் வென்றவர்கள்
ஏபிவிபி சார்பில் வென்றவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை மாலை முடிவடைந்த நிலையில், நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) வெற்றி பெற்றது. துணைத் தலைவர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது

டியுஎஸ்யு தலைவர் பதவிக்கு ஏபிவிபியின் துஷார் தேதா, தேசிய மாணவர் சங்க (என்எஸ்யுஐ) வேட்பாளர் ஹிதேஷ் குலியாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். மாணவர் சங்கச் செயலாளராக ஏபிவிபியைச் சேர்ந்த அபராஜிதாவும், இணைச் செயலாளராக சச்சின் பைஸ்லாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாணவர் பிரிவின் அபி தஹியா துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.

தேர்தல்
தேர்தல்

டெல்லியில் உள்ள மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று டெல்லி பல்கலைக்கழகம். இதன் கீழ் ஏராளமான உறுப்பு மற்றும் சார்பு கல்லூரிகள் உள்ள நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மாணவர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பொறுப்புகளுக்கு இந்த தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு உறுப்பு கல்லூரியிலும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்பட்டு, அங்கிருந்தும் தலா நான்கு பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த தேர்தல்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டு கடைசியாக இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதை தொடர்ந்து 2022ம் ஆண்டு கல்வி அட்டவணை காரணமாக இந்த தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதனால் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டது.

டெல்லி பல்கலைகழகம்
டெல்லி பல்கலைகழகம்

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு 39.90 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இவ்வாண்டு 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 24 பேர் இந்த நான்கு பொறுப்புகளுக்கும் போட்டியிட்டனர். கடந்த 2019ம் ஆண்டு பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெற்றி பெற்றிருந்தனர். தற்போது அதிகரித்து வரும் கல்வி கட்டணங்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதி கட்டணங்கள் ஆகியவற்றை முன்வைத்து இவ்வாண்டு தீவிர பிரச்சாரத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில் மீண்டும் ஏபிவிபி மாணவர்களே மீண்டும் வென்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in