பள்ளிகளுக்குள் வரும் பயாஸ்கோப்!

பலன் தருமா... பாதகம் செய்யுமா?
பள்ளிகளுக்குள் வரும் பயாஸ்கோப்!

திரைப்படங்கள் இளைய சமுதாயத்தை சீரழிப்பதாக பொதுவான ஒரு கருத்து நிலவும் நிலையில், இனி, பள்ளிகளுக்குள் திரைப் படங்கள் ஒளிபரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர கொண்டு வந்திருக்கிறது.

பள்ளி மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

திரைப்படம் முடிந்த பிறகு அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்ச்சிகளும் நடைபெறும். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும். சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு, மாநில அளவில் ஒருவாரம் நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றெல்லாம் அரசின் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றிருந்தாலும் பள்ளிகளுக்குள் சினிமா அவசியமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள், அதில் நடிக்கும் ஹீரோக்களை கொண்டாடும் வகையில் அவர்களுக்குப் போலியான பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. இதனால் திரையில் மிளிரும் ஹீரோக்களை நிஜ ஹீரோக்களாக நினைக்கும் போக்கு மாணவர்களிடையே பசுமரத்தாணி போல பதிந்துகிடக்கிறது. அதனால் தான் அவர்கள் தங்களுக்குப் பிடித்த கதாநாயகன் போலச் சிகை அலங்காரம், நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்கிறார்கள். திரைப்படங்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் நடைமுறை வாழ்க்கைக்கும், திரைப்பட பாணி வாழ்க்கைக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேசமயம், சினிமா சமூக மாற்றத்தை கொண்டு வந்த ஊடகம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. நாட்டுப்பற்று, சாதிய ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக விழிப்புணர்வு போன்றவை திரைப்படங்களின் வாயிலாகவே வெகுஜன மக்களை சென்றடைந்துள்ளது. நாமே தவிர்த்தாலும் நமது வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக அழுத்தமாகப் புகுந்துவிட்டது சினிமா. பாடல்களாக, வசனங்களாக, நகைச்சுவை துணுக்குகளாக, மீம்ஸ் காட்சிகளாக ஏதோ ஒரு வகையில் சினிமா தினமும் நம்மோடு உறவாடி வருகிறது. அப்படிப்பட்ட சினிமாவை வகுப்பறை விவாதத்திற்கு உட்படுத்துவதே நியாயம். அதைக் காட்டாமலே இருப்பது சரியல்ல என்ற கருத்து சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது.

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். “பள்ளிப் படிப்போடு கலை, இலக்கிய செயல்பாடு என்பது முக்கியமானது. இசை, பாடல், நாடகம், நடனம் உள்ளிட்ட நிகழ்த்துக் கலைகள் மாணவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும். அவர்கள் படித்த பாடத்தை கலைவடிவில் வெளிப்படுத்தவும் உதவும்.

தற்போது சினிமா என்பதும் மிகச் சிறந்த ஊடகமாக இருக்கிறது. இருந்தாலும் பொறுப்புணர்வுடன் சினிமா பற்றிய புரிதல்களோடு பள்ளிகளில் படங்களைத் திரையிடப்பட வேண்டும். மாதத்திற்கு ஒரு சினிமா காட்ட வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு படத்தை திரையிடக்கூடாது. சர்வதேச நாடுகளில் வெளியான குழந்தைகளுக்கான சிறந்த படங்களை நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். சினிமா ரசிப்பு என்பது என்ன என்பதை மாணவர்களுக்கு விளக்கலாம்.

சிவாஜி நடிப்பைப் பலர் பாராட்டினாலும் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. அவரின் நடிப்பை ஓவர் ஆக்ட் எனச் சொல்லக் கூடியவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். முக பாவனைகளை வைத்தே ஆஸ்கர் விருதுகளை பெற்றவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், ஆஸ்கர் விருதை நடிப்புக்கு அளவுகோலாக எடுத்துக் கொள்ளமுடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைக் கொண்டு ஆக்கபூர்வமான விவாதங்களை மாணவர்கள் முன்பாக வைக்கலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

சினிமா பார்க்கும் அனைவருமே திரைத்துறைக்கு வரப்போவதில்லை. சினிமாவைக் காட்டாமல் மூடிவைத்தாலோ, சினிமாவைக் காட்டுவதாலோ மாணவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. எந்த மாதிரியான சினிமாவைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே படம் பார்ப்பவர்களின் சிந்தனையோட்டம் இருக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் படங்களைத்தான் இளைஞர்கள் பெரிதும் பார்க்கிறார்கள். ஆனால், சிறிய நாடுகளிலிருந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் நிறைய வந்திருக்கின்றன.

இந்த விஷயத்தில் வெறும் சுற்றறிக்கையோடு விட்டுவிடாமல், அதைச் செம்மையாகச் செயல்படுத்தும் வேலைகளையும் கல்வித்துறை செய்ய வேண்டும். திரைப்படங்கள் பற்றிய விவாதங்கள் நடத்தலாம், திரை விமர்சனம் எழுதுபவர்கள் போன்றோருடன் மாணவர்களை விவாதிக்க வைக்கலாம். திரை விமர்சனம் என்றால் என்ன, அதை எப்படி எழுதுவது என்பது குறித்து விவாதிக்கலாம்.

ரஜினி படம் பார்த்தோமா, விஜய் படம் பார்த்தோமா என்பது அல்ல சினிமா. சினிமா என்பது ஒரு இலக்கியம். தொழிற்சாலை விபத்துகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பாமரனுக்குக் காட்டும் ‘போபால் எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களைத் திரையிடலாம். பொதுவாக இப்போது நம் கண்ணுக்கு தெரியும் படங்கள் அத்தனையுமே மசாலாப் படங்கள். விருது பெற்ற படங்களில் பெரும்பகுதியானவை குப்பைப் படங்கள். எனவே பள்ளிகளில், நபர்கள் சார்ந்த, விருதுகள் சார்ந்த படங்களைத் தவிர்க்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத சிறந்த படங்களைத் தேடிக் கண்டுபிடித்து மாணவர்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் வெளி நாடுகளிலிருந்தும் சிறந்த படங்களைக் கொண்டு வர வேண்டும். மதநம்பிக்கை, மூட நம்பிக்கைகள் கொண்ட படங்களைத் தவிர்த்துவிட்டு, வாழ்க்கைப் போராட்டம், அறிவியல் படங்கள், நம்பிக்கையூட்டும் படங்களை மாணவர்களுக்குக் காட்ட வேண்டும். சினிமா என்பது வெறும் நடிகர்களை மட்டும் கொண்டாடுவதல்ல. கதை, திரைக்கதை, வசனம், திரைவிமர்சனம், இசை, இயக்கம், எனப் பலவற்றின் கூட்டுதான் சினிமா. கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தொழில்நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்படுவது சினிமா. இவை அனைத்தையும் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிள்ளைகளுக்குப் பாடங்களைப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் ஆடியும் பாடியும் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்து வரும் நிலையில் பள்ளிகளுக்குள் வரப் போகும் சினிமாவும் மாணவர்களை பண்படுத்துவதாக அமையட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in