`குழந்தைகளின் புத்தக வாசிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது'

`குழந்தைகளின் புத்தக வாசிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது'

சத்தியமங்கலத்தில் நடந்த குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் பதிப்பகத்தினர் மகிழ்ச்சி

புத்தக வாசிப்பு என்பது மனதை பண்படுத்தும். கடந்துபோன காலங்களில் பயணிக்க உதவும் என வாசிப்பின் அவசியம் குறித்து பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் தொடங்கி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக வாசிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த புத்தக் கண்காட்சி உள்ளிட்டவையும் பெரு நகரங்கள் தொடங்கி, சிறிய கிராமங்கள் வரை நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கு முத்தாய்ப்பாக அமையும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விதைகள் வாசகர் வட்டம் சார்பில் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சிக்கு தங்களது பெற்றோருடன் வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் 100 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

அதேவேளையில் 5 பேர் புரவலர்களாகவும் இணைந்து வியப்படையச் செய்துள்ளனர். இரு தினங்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஏறத்தாழ 4 ஆயிரம் புத்தகங்களை குழந்தைகள் வாங்கியும் சென்றுள்ளனர். வெ.இறையண்புவின் அடிப்படைப் பண்புகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட அறிவியல் கதைகள், லியோ டால்ஸ்டாய் தொடங்கி சமகால எழுத்தாளர்கள் வரையிலான சிறார் இலக்கியப் படைப்புகளை குழந்தைகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து விதைகள் வாசகர் வட்டத் தலைவர் யாழினி ஆறுமுகம், புக்ஸ் ஃபார் சில்ரன்ஸ் பதிப்பகத்தின் பாரதி இளங்கோ ஆகியோர் கூறுகையில், ``நான்காம் ஆண்டாக குழந்தைகள் புத்தக் கண்காட்சி நடத்துகிறோம். இம்முறை சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் நடத்தினோம். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். உலக புத்தக தினமான ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. ஏராளமான குழந்தைகள் கண்காட்சியில் பங்கேற்றனர். இரு தினங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் புத்தங்கள் வீதம் வாங்கிச் சென்றனர். இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் கைப்பேசியே வாழ்க்கையாக மாறியப் போன சமயத்தில் குழந்தைகளின் புத்தக வாசிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் புத்தங்களை வாங்கும் முன் அவற்றை வாசிக்க கொடுத்தோம். அதனால் புத்தகங்களை குழந்தைகள் வாசித்தப் பின்னரே வாங்கிச் சென்றனர். அறிவியல் கதைகள் என அனைத்து தலைப்பிலும் புத்தகங்களை குழந்தைகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கண்காட்சி மட்டுமன்றி கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இதைக் கண்காட்சி எனக் கூற முடியாது. இரு தினங்களும் திருவிழா போல் இருந்தது" என்றனர்.

பண்பட்ட இளம் தலைமுறையினர் உருவாக இதுபோன்ற குழந்தைகள் புத்தகக் கண்காட்சி பல பகுதிகளிலும் விரிவடைய வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in