100 ‘சைனிக்’ பள்ளிகள்: அரசின் அறிவிப்பால் விளையும் நன்மைகள் என்ன?

100 ‘சைனிக்’ பள்ளிகள்: அரசின் அறிவிப்பால் விளையும் நன்மைகள் என்ன?

புதிதாக 100 சைனிக் பள்ளிக்கூடங்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடங்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்கள், மாநில அரசுகள் என்று எவர் வேண்டுமானாலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடங்கலாம். ஆறாவது வகுப்பு முதல் மாணவர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆண் – பெண் என்று இரு பாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடம் இது. இதை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட், நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 25) தெரிவித்தார்.

இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும். கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ராணுவத்தில் பணிகளில் சேருவதற்கு இளம் மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கில் சைனிக் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. 1960-களின் தொடக்கத்தில் அன்றைய ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ணன் மேற்கொண்ட முன்முயற்சிகளால் இந்த சேனை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசிடம் நிதி வசதி அதிகம் இல்லாததாலும் மாநில அரசுகள் ஆர்வம் காட்டாததாலும் இவற்றின் எண்ணிக்கை பெருகவில்லை.

மாநிலங்களில் மட்டும் அல்லாது மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சைனிக் பள்ளிக்கூடங்களைத் தொடங்க நிதியுதவி அளிக்கப்படும். ஒரு வகுப்பில் அதிகபட்சம் 50 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இதில் 25 மாணவர்களுக்கான கல்விச் செலவை மத்திய அரசு ஏற்கும். ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 40,000 ரூபாய் வரை அதிகபட்ச செலவு இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிபந்தனை. நூறு பள்ளிக்கூடங்களும் ஆறாவது வகுப்பில் தொடங்கி படிப்படியாக அடுத்த ஆறு ஆண்டுகளில் முழுமையாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

சைனிக் பள்ளிகள் ஏன்?

சைனிக் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க ராணுவத்தில் பணிபுரிகிறவர்கள் – பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தவரும் மத்திய அரசுப் பணிகளில் உள்ளவர்களும் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவர். காரணம் இந்த பள்ளிக்கூடங்களில் தரமான கல்வியும் உடல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அத்துடன் விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மாணவர்கள் கைத்தொழில் திறனையும் படிக்கும்போதே கற்றுக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட இங்கு தேசிய மாணவர் படையில் சேருவது கட்டாயம். இதனால் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய பள்ளிப்பருவத்துக்குள் 10 தேசிய முகாம்களில் பங்கேற்று நல்ல அனுபவம் பெறுவர். என்சிசியில் ஏ, பி, சி என்று மூன்று சான்றிதழ்கள் மாணவர்களின் உடல் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, நடத்தை, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். சி சான்றிதழ் பெறும் மாணவர்கள் நேரடியாக ராணுவத்தில்கூட சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

பள்ளிப் படிப்பு முடித்த பிறகு ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர சைனிக் பள்ளிக்கூட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். சைனிக் பள்ளி மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் தன்னுடைய வேலைகளைத் தானே செய்துகொள்ளும் பயிற்சியையும் பெற்றுவிடுவார்கள். தனியாகவே எங்கும் பயணம் செல்லவும் விரும்பிய இடங்களில் கல்வி பயிலவும் வேலை தேடவும் மனப்பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ராணுவத்திலோ காவல் துறையிலோ வேலை கிடைக்காதவர்கள்கூட சுயமாகத் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் சைனிக் பள்ளி மாணவர்கள் சோடை போவதில்லை.

எனவே சைனிக் பள்ளிக்கூடங்களைத் தொடங்க மத்திய அரசு செயதுள்ள இந்த அறிவிப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் அருமையான வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in