`இது அற்புதமான திட்டம்; மாணவர்களுக்கு இதையும் சேர்த்து வழங்குங்கள்'

தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள்
`இது அற்புதமான திட்டம்; மாணவர்களுக்கு இதையும் சேர்த்து வழங்குங்கள்'
அரசுப் பள்ளியில் உணவு

தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாமாண்டு தொடக்க நாளை முன்னிட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசுப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காலை நேரச் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு கல்வியாளர் சங்கமம் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்துடன் முதல்வருக்கு மேலும் சில கோரிக்கைகளையும் அந்த அமைப்பு வைத்துள்ளது.

திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் அந்த அமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``இது அற்புதமான திட்டம் மட்டுமல்ல, சரியான முன்னெடுப்பும் கூட. இதனை வரவேற்கும் தருணத்தில் இதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றிய கோரிக்கையையும் தங்களிடத்தில் முன்வைக்க விரும்புகிறோம்.

காலை நேரம் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியில் கட்டாயம் பால் வழங்கப்பட வேண்டும். பால் வழங்குவதன் மூலம், ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தலைமுறையை உருவாக்க முடியும். இதனை ஆவின் நிறுவனம் மூலமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குவதன் மூலம், மாடு வளர்க்கும் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும். அரசு நிறுவனமான ஆவினின் வருமானமும் அதிகரிக்கும்.

புரதச்சத்து நிரம்பிய பயிறு வகைகளான நிலக்கடலை, பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை இவற்றை சுழற்சி முறையில் வழங்கலாம். இதன்மூலம் இவற்றின் தேவை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரமும், குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மிக முக்கியமாக மாணவர்களுக்குத் தினசரி வாழைப்பழம் வழங்க வேண்டும். தினசரி சிற்றுண்டியில் வாழைப்பழம் வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, பாலுடன் சேர்த்து பழமும் தினசரி சாப்பிடும்பொழுது வலுவான தலைமுறையாக உடல் அளவில் மட்டுமின்றி, மாணவர்கள் அறிவாலும் வளர்ந்து சிறப்பார்கள்.

தினசரி வாழைப்பழம் தேவை என்னும்பொழுது அதற்கான தேவை அதிகரித்து கிராமப்புறங்களில் வாழை உற்பத்தி அதிகரித்து, அதன் மூலம் கிராமப்புறங்களின் பொருளாதாரமும் அதிகரிக்கும். தமிழக முதல்வரின் காலை நேரச் சிற்றுண்டி திட்ட அறிவிப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புற விவசாயிகளுக்கும் இது ஆரோக்கியமான அறிவிப்பாக அமையும், அமைய வேண்டுமென எதிர்பார்த்து, இதனை வரவேற்று மகிழ்கின்றோம்.

இந்த நேரத்தில் ஒரேயொரு சிறு வேண்டுகோள் மட்டுமே. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நீண்டகாலமாக சத்துணவு என்பது அதன் பெயரில் மட்டுமே இருக்கின்றது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் அது மிக அரிதாகவே இருக்கின்றது. இதனை முறைப்படுத்தவும், தரப்படுத்தவும் சரியான கண்காணிப்பு வழிமுறையை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.